இட்டாநகர், செப். 28–
அருணாச்சல பிரதேச பள்ளி ஒன்றில், 21 பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனுக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் ஷி–யோமி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதி வார்டனாக இருந்தவர் யும்கென் பாக்ரா (வயது 33). இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை விடுதியில் இருந்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் 15 பேர் 6 முதல் 15 வயதிற்குள் உட்பட்டவர்கள். இந்த பள்ளியில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த ஆண்டு இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 21 மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பள்ளி வார்டன் யும்கென் பாக்ராவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், பள்ளி குழந்தைகளை ஆபாசபடம் பார்க்க வைத்தது, போதை மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தது வரை குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
அனைத்து விசாரணைகளும் முடிவு அடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பு அளித்தார். பள்ளி குழந்தைகளுக்கு யும்கென் பாக்ரா பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால் அவருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.