செய்திகள் நாடும் நடப்பும்

பள்ளிக் கல்வியிலேயே விண்வெளிப் பாடங்கள் அவசியம்!


ஆர். முத்துக்குமார்


ஒன்பது நாள் நவராத்திரி திருநாட்கள் முடிவில் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சிறப்புற நடைபெற்றதை கண்டோம். பத்தாம் நாளில் விஜயதசமியாய் கொண்டாடுவது வழக்கம்.

விஜய தசமி நாளில் வித்யாரம்பம் விசேஷமானது! சிறுவர் பள்ளிக் கூடங்களில் கல்விப் பெறுவதை தொடங்குவது வாடிக்கை. இம்முறையும் பல பள்ளிகளில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பள்ளிக்கூடத்தில் உடன் அமர்ந்து அரிசியில் எழுதுவது, தொடக்கமாய் ‘அ’ எழுதி, பள்ளிக் கல்விக்கு தொடக்கப் புள்ளி வைத்தனர்.

இன்றைய நவீன விஞ்ஞான காலக்கட்டத்தில் இந்த தொன்று தொட்டு நம்முடன் தொடரும் வழக்கத்தில் புதிய சிந்தனைகள் துவங்குவதும் அவசியமாகுகிறது.

10 ஆண்டிலேயே நடக்கும்

கடந்த 50 ஆண்டுகளில் நாம் கண்ட விஞ்ஞான வளர்ச்சிகள் இன்றைய காலக்கட்டத்தில் படு வியப்பானதாக இருக்கலாம், ஆனால் அடுத்த 10 ஆண்டுகளிலேயே இவையெல்லாம் கற்கால சமாச்சாரங்களாகவே இருக்கப் போகிறது.

காரணம் கணினி அறிவுத் திறனின் வேகம்தான்!

முன் காலத்தில் கணிக்கப்படாத விண்வெளி கணித கணிப்புகளை, இன்றைய தொழில்நுட்ப முறைகளால், மிக துல்லியமாக கணக்கிட்டு சாதித்தோம்.

கண்ணுக்கு சிறு கல்லாய் மிண்ணும் செவ்வாய் கிரகத்தின் சுழற்சியையும், புவி ஈர்ப்பு சக்தியையும் கணக்கீட்டு ரஷ்யாவும், அமெரிக்காவும் விண்கலன்களை அனுப்பி, அங்கு தரையிறக்கி பல ஆய்வுகளை நடத்தியதை கண்டோம்.

நமது மங்கள்யான் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக நுழைந்த பிறகு அதை பல கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து அதை இயக்கியும், அங்கு இருந்த தகவல்களையும் பெற்றதையும் அறிவோம்.

இவையெல்லாம் கடந்த தலைமுறை டிஜிட்டல் விஞ்ஞானம் கொண்டு நடத்திய புரட்சிகள்.

இன்றோ நாம் மேலும் பல புதுப்புது அறிவியல் ஞானத்துடன் பல்வேறு சாதனைகளை உருவாக்கி வருவது தான் உண்மை.

தொழில்நுட்ப வல்லமை

நமது கையில் இருக்கும் மொபைல் போனில் தான் எத்தனை வசதிகள், அடுத்த தலைமுறை தொழில்நுட்ப வல்லமையின் எதிரொலியாய், நம் கண்முன் மாற்றங்களை முழுமையாக வசப்படுத்தி வருகிறோமா?

ராக்கெட் விஞ்ஞானம் பூக்காரர்களுக்கும், தினக்கூலி சாமானியனுக்கும் என்ன உபயோகம்? இதற்கான விடையை தேடும் பனியின் ஒரு முக்கிய அங்கம் விண்வெளி ஆய்வுகளில் நிச்சயம் இருக்கிறது.

விண்வெளி பயணங்களும், பிற கிரக மண்ணில் செய்யப்படும் ஆய்வுகளும், வரும் காலத்தில் பூமியில் வளங்களின் கையிருப்பை உரிய முறையில் உபயோகிக்க வழி வகுக்கும்.

நமது இஸ்ரோ அமைப்பின் மூலம் 60 ஆண்டுகளில் சுயமாய் ராக்கெட்டை அனுப்பி, செயற்கை கோள்களை வெளிவட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாய் நிலை நிறுத்துகிறோம்.

புதிய விண்வெளி ஏவுதளம்

இதுபற்றிய விஞ்ஞான அறிவியல் வரத் துவங்கினால் அதில் ஆர்வமும் அதிகரிக்கும். உயர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் விண்வெளி சார் ஆய்வுகளில் வெற்றி கொடி நாட்ட தூண்டுதலாக இது அமையும்.

அண்மையில் இஸ்ரோ தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தூத்துக்குடியின் அருகிலுள்ள குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்கும் ரூ.1000 கோடியிலான திட்டத்தையும், அதற்காக நிலம் கையெடுப்பு பணிகள் துவங்கி விட்டதையும் கூறியுள்ளார்.

இது உருவாகிவிட்டால் இதுவே நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக இருக்கும். பல புதுப்புது உற்பத்திக் கூடங்கள் இப்பகுதியில் வந்து விடும். முதலாம் நூற்றாண்டில் குலசேகரபட்டினம் மிக பண்டைய கப்பல் துறைமுகம் என்ற பெருமைக்குரியது. வரும் காலத்தில் முன்னணி ராக்கெட் ஏவுதளமாக உயர்ந்து விடும்.

உயர் கல்வி வளாகம்

இந்நிலையில் விளைநிலங்கள், இயற்கை பாதுகாப்பு பற்றிய சர்ச்சைகள் எழும் அறிகுறிகள் தென்பட தொடங்கி விட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இப்பகுதியை விண்வெளி ஆய்வு சிறப்பு பகுதியாக அறிவித்து ஐஐடிகளுக்கு நிகரான கல்வி வளாகத்தை உருவாக்கிட வேண்டும்.

அங்கு விவசாயம், கலை பண்பாடு முதலிய படிப்புகளில் விண்வெளி விஞ்ஞானத்துடன் இணைந்து படிக்க வழிகாண வேண்டும். வேளாண்மை பற்றிய விஞ்ஞான முறை தீர்வுகள் வரும்போது, அழிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு இணையாக கூடுதல் விளைச்சல் பெற வழி பிறக்கும்.

குறிப்பாக பல ஆண்டுகள் பயணிக்க தயாராகி வரும் ராக்கெட் வடிவில் விவசாயத்திற்கு வழி காணவும் ஆய்வுகள் மேற்கொள்ள வழி பிறக்கும்.

கலை, கலாச்சார படிப்புகளில் விண்வெளி பாடங்களும் கலந்து இருக்க, பிற்காலத்தில் பிற கிரகங்களில் குடியேற வசதியான வாழ்வியல் அடிப்படைகளான வீடு, உணவு, ஆடை பற்றிய மாதிரிகள் உருவாகும் கலை கூடமாகவும் மாறி விடும்.

அதை பற்றிய விவாதங்களையும் சிந்தனைகளையும் இத்துறை சார் நிபுணர்களுடன் கலந்தாய்வுக்கான நேரமும் வந்து விட்டது.

விண்வெளி ஆய்வு பற்றிய பாடத் துவக்கம் இம்முறை விஜயதசமியில் தொடங்க வழி உருவானால், எதிர்கால மனிதகுல வாழ்வு முறை வளமான பாதையில் பயணிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *