சென்னை, ஜூலை 27–-
நெஞ்சு வலியால் துடித்த போதும் பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த தனியார் பள்ளி டிரைவர் குடும்பத்துக்கு ரூ,5 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சத்யா நகரில் வசித்து வந்தவர் மலையப்பன் (வயது 49). இவர், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25–-ம் தேதி அன்று பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாணவர்களை வீட்டில் விடுவதற்காக வேனில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
கோவை-–திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய போலீஸ் குடியிருப்பு அருகே வந்த போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த போதிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவாறு சாதுர்யமாக செயல்பட்டு சாலையோரமாக வேனை நிறுத்தினார். சிறிது நேரத்தில் மாரடைப்பால் வேன் இருக்கையில் அமர்ந்தபடி உயிரிழந்தார்.
இறக்கும் தருவாயிலும் பள்ளிக்குழந்தைகளின் உயிரை காத்த டிரைவர் மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவருடைய குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேற்று மலையப்பன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.