செய்திகள்

பள்ளிகள் திறக்க ஆலோசனை : அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை, ஜூலை 27–

தமிழ்நாட்டில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது என்றும், முடிவுகளை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது ஆசிரியர்கள், மாணவர்கள் என பலருக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. அதேபோல் கல்லூரிகளும் திறந்து மூடப்பட்டன.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளிகளை திறப்பது குறித்து கோரிக்கை எழுந்து வருகிறது. குறிப்பாக பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கப்படலாம் என தெரிகிறது.

பல கட்டங்களாக

ஆலோசனை

இது தொடர்பாக சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டு பள்ளிகளை திறக்க அவர்கள் அனுமதித்தால் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.

அப்படி நிகழும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றி அறிவிக்கப்படும்.

கார்ப்பொரேட் சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்.) மூலம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ, அனைவரும் முன்வர வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் குழப்பம் இருப்பதால் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

கொரோனா காட்டுக்குள் வந்தபின் தேர்வுகளை நடத்துவது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை டிஎன்பிஎஸ்சியுடன் இணைக்கும் திட்டம் இல்லை.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *