செய்திகள்

பள்ளிகளுக்கு அக்.16 விடுமுறை: கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, அக்.14-

பள்ளிகளுக்கு நாளை மறுதினம் (16–ந்தேதி) விடுமுறை விடுப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை விடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை வியாழக்கிழமையும், விஜயதசமி வெள்ளிக்கிழமையும் வருவதால், அதற்கு அடுத்த நாளாக வரும் சனிக்கிழமையும் (நாளை மறுதினம்) விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என்று பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கைகள் விடுத்து இருந்தன.

அவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வி துறை நாளை மறுதினம் விடுமுறை நாளாக அறிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமான ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த மாவட்டங்களில் இருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், 14 (இன்று), 15-ந்தேதி (நாளை) ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வார இறுதி நாளான 16-ந்தேதியன்று (நாளை மறுதினம்) விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16-ந்தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை தொடர்ந்து, 16-ந்தேதி என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *