சினிமா செய்திகள்

பள்ளிகளில் திரையிட்டால்… குழந்தைகள் – பெற்றோர்களுக்கு அருமையான வாழக்கைப் பாடம்!

விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும் : டைரக்டர் ஹென்றி ஐ

செல்லம் கொடுத்து குழந்தையை வளர்க்கும் இளம் பெற்றோர்களுக்கு விழி திறந்திருக்கிறார் ஹென்றி ஐ.

அழிச்சாட்டியும் பண்ணும் (விவரம் தெரியா வயசு) குழந்தைகளுக்கும் வழிகாட்டி இருக்கிறார்.

அசாத்திய துணிச்சல் இயக்குனருக்கு. ரசிகர்களுக்கு அவ்வளவாக பரிச்சயப்படாத “ஆடுகளம்” முருகதாஸ் , லெவினா, குழந்தை நட்சத்திரம் பிரதிக்ஷா… மூவரை மட்டுமே பிரதானமாக வைத்துக் கொண்டு படத்தை முடித்து அதிலும் வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் என்றால் அவர் விஷயத்தில் அது சரித்திர சாதனை தான்.

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பதுதான் மையக்கரு.

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒற்றைக் குழந்தையை பெற்று விட்டு, அது ஆசை ஆசையாய் கேட்கும் ஒவ்வொன்றையும் வாங்கித் தருகிறேன் என்று ஆசை காட்டி உத்தரவாதமும் தந்து அதனால் மாட்டிக்கொண்டு கதி கலங்கி நிற்கும் பாசக்கார தந்தையின் பரிதவிக்கும் கதை.

‘‘முடியும் என்பதை மட்டும் தான் வாங்கி தரேன்னு சொல்லணும். முடியாததுக்கெல்லாம் பொய்யா வாங்கித் தரேன்னு சொல்லி நம்பிக்கை ஊட்டிட்டா … உண்மையிலேயே அந்தவார்த்தையை காப்பாற்ற முடியாமல் போகும்போது… நிலைமை என்ன ஆகும்?’’ என்பது தான் ராஜா மகள் கதை.

* வெடுக்… வெடுக்…பேச்சு, கேட்டதை எப்படியாவது பெற்றுவிட துடித்து, இலவு காத்த கிளியாகும் பிரதிக்ஷா…

இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம், என்று உச்சி முகர்ந்து விடலாம் இன்றைய( மார்ச் 17ஆம் தேதி) நிலவரப்படி.

(குழந்தைகள் நடித்து படங்கள் வருவதே அபூர்வமாகி இருக்கும் இந்தக் காலத்தில், குழந்தை யை பிரதானமாக வைத்தே நகர்த்தப்பட்டு இருக்கும் கதை. சபாஷ் ஹென்றி ஐ)

* “பாசக்கார அப்பா” ஆடுகளம் முருகதாஸ்: வார்த்தை கொடுத்துவிட்டு அது நடக்க முடியாமல் போகும் அவலத்தைக் கண்டு மனசுக்குள் புழுங்கி இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் தவிப்பில்… அருமையான நடிகர் உதயமாகி விட்டிருக்கிறார்.

மாடிப்படி ஏறும் போது மூன்றாவது படிக்கட்டில் இருந்தவர், ஆறாவது படிக்கட்டில் எதிறிக் குதித்தால் எப்படியோ அப்படித்தான் முருகதாஸ். துணை நடிகர் நிலை மாறும், இனி இணை நடிகர் முத்திரை ஏறும்!

* குடும்பக் பாங்கான முகம் – லெவினா. முருகதாஸோடு சேர்ந்து ஆறாவது படியில் இவரும் எகிறிக் குதித்து இருக்கிறார். இனி இவருமே இணை நடிகை தான், துணை- காற்றோடு போயாச்சு! பெரிய இயக்குனர்கள் பயன் படுத்தலாம்.

* கொழுக்… மொழுக்… ஆண் குழந்தை யார் அது? பிரதிக் ஷாவுக்கு ஆசை காட்டும் அவன் இல்லாவிட்டால் கதையே இல்லையே… அந்தக் குழந்தையும் நடிப்பில் சுட்டி!

‘‘நீரில் மீனைக் கேட்டால் வாங்கித் தருவேன் விண்மீனை கேட்டால்’’… வரிகளில் பாதிக் கதை. சி எஸ் பிரேம் குமாரின் இசை அருமை. காதில் ஒலிக்கிறார். கண்களில் நிற்கிறார் நித்தி கண்ணன் கேமரா கண்களால்.

குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

குழந்தைகள் வளர வேண்டியது எப்படி?

இரண்டு மணி நேரம் ஓடிய சித்தரத்தில் வாழ்க்கைப் பாடம் நடத்தி இருக்கிறார் ஹென்றி ஐ( யா)!


வீ. ராம்ஜீ


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *