மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் 3 இடங்களில் புகார்
சென்னை, செப். 7–
பள்ளிகளில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவிடம் விமான நிலையத்தில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கூடுதல் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் என்கிற அமைப்பை சேர்ந்த மகா விஷ்ணு என்கிற சொற்பொழிவாளர் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி உரையாற்றினார்.அவரது பேச்சில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தது. கடந்த பிறவியில் பாவம் செய்தவர்களே மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்கிற மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு சைதாப்பேட்டை பள்ளியில் வைத்து மாற்றுத்திறனாளியான பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மகா விஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு தொடர்பாக மகா விஷ்ணு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மாற்றுத்திறனாளிகள் 3 இடங்களில் புகார்
அரசு பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 2 இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.இந்த புகார் மனுக்களில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டப்படி மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் வில்சன் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டப்படியும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ)-வின் படியும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய மகா விஷ்ணு
இதற்கிடையே மகா விஷ்ணு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் நான் தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரப்புகிறார்கள். எங்கேயும் நான் ஓடி ஒளியவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் நான் இன்று சென்னை வருகிறேன். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மகாவிஷ்ணுவின் வருகைக்காக காத்திருக்கும் போலீசார் அவர் சென்னை வந்து இறங்கியதும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன்பிறகு அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியும்? என்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார். ஒருவேளை மகாவிஷ்ணு இன்று சென்னை திரும்பாவிட்டால் அவரிடம் விசாரணை நடத்துவது எப்படி? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். மதுரையை சேர்ந்த இவரது இயற்பெயர் மகா. பரம்பொருள் பவுண்டேசன் என்கிற அமைப்பை தொடங்கியுள்ள இவர் தனது பெயருக்கு பின்னால் விஷ்ணு என்கிற பெயரை சேர்த்துக் கொண்டு சொற்பொழிவாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் விசாரணை
இந்நிலையில் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வருவது உறுதியானது. இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்கி வெளி வந்த மகாவிஷ்ணுவிடம் குடியுரிமை அதிகாரிகள் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் கூடுதல் விசாரணைக்காக அவரை கார் மூலம் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். மாற்றுத்திறனாளிகள் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக மகாவிஷ்ணு கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.