நாடும் நடப்பும்

பல துறைகளில் சாதித்த தகுதியானவர்களுக்கு பத்ம விருது கௌரவம்


ஆர். முத்துக்குமார்


கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நாட்டின் உயர் விருதுகளான பத்ம விருதுகள் தமிழகத்தைச் சார்ந்த ஆறு பேருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இசை, நாட்டியம், பாம்பு பிடித்தல், மருத்துவம், நூலகர் என பல்வேறு துறைகளில் சமூக சேவை செய்யும் தமிழகத்தைச் சார்ந்த திறமையானவர்களுக்கு இவ்வாண்டு விருது அறிவித்திருப்பது தமிழகத்திற்கு பெருமையாகும்.

பத்ம விருது பெற்றுள்ள ஆறு தமிழகர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியும் உள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள பாடகி வாணிஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள கல்யாணசுந்தரம் பிள்ளை, பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், ‘பாலம்’ கல்யாணசுந்தரம், கோபால்சாமி வேலுச்சாமி ஆகிய 6 பேருக்கும் எனது மனமகிழ் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தை பெருமையடையச் செய்துள்ளீர்கள் என்றும் அவர் தனது பாராட்டு அறிக்கையில் கூறியுள்ளார்.

வாணி ஜெயராம்

தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இசைக்குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், இந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ள இவர், பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

கல்யாணசுந்தரம் பிள்ளை

அதேபோல் தஞ்சாவூரைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் திருவிடைமருதூர் குப்பையா கல்யாணசுந்தரம். இவர் தனது தந்தை குப்பையா பிள்ளை மற்றும் தனது சகோதரர் டி.கே.மகாலிங்கம் பிள்ளை ஆகியோரிடம் பரத நாட்டியத்தை கற்றுத் தேர்ந்தார். இவரது குடும்பம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சாவூர் பாணியிலான பரத நாட்டியத்தை பரப்பி வருகிறது.

வடிவேல் கோபால், மாசி சடையன்

தமிழகத்தை சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகளை பிடித்து வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து பாம்புகளை பிடித்துள்ளனர்.

பாலம் கல்யாணசுந்தரம்

நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிறந்த இவர், 30 ஆண்டுகள் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றியுள்ளார். அதில் கிடைத்த வருமானம், ஓய்வூதியம், குடும்பச் சொத்து, விருதுகள் மூலம் கிடைத்த பரிசுத் தொகைகள் உள்ளிட்ட அனைத்தையுமே ஏழைகளுக்கான தொண்டு பணிக்கு வழங்கினார். ‘பாலம்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி அதன்மூலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சமூக சேவை ஆற்றி வருகிறார்.

கோபால்சாமி வேலுச்சாமி

மருத்துவப் பிரிவில் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் பனையேறிப்பட்டியில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் படித்தார். பின்னர் உதவி பேராசிரியர், பேராசிரியர், துறை தலைவர், ஆயுர்வேதம் மற்றும் சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சின் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.இந்த திறமைசாலிகளும் சமூக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் தரும் விருதுகளும் அங்கீகாரங்களும் வளரும் அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கும் சமூக அக்கறை கொண்ட மனோபாவமும் மேலோங்க வைக்கும். இம்முறை பட்டியலில் இடம் பெற்றவர்களைப் பாராட்டும் அதே மூச்சில் இப்பட்டியலில் இடம் பெறத் தகுதியானவர்களை தேர்வு செய்த குழுவையும் பாராட்டியே ஆக வேண்டும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *