தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, டிச.21–
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை ஏதும் வழங்கப்படவில்லை என்று நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அண்மையில் வெளியான செய்தியில் தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை என்று தலைப்பிட்டு வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானதாகும்.
தமிழ்நாட்டில் சிறப்புப் பொதுவிநியோகத் திட்டத்திற்குத் தேவையான பருப்பு மற்றும் பாமாயில், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000–ன் படி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் செய்யப்படுகின்றன. நாளிதழ்களில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பெறப்படும் ஒப்பந்தப்புள்ளிகளின் தொழில் நுட்ப ஆவணங்கள் தலைமை அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 5 அலுவலர்களைக் கொண்ட ஒப்பந்தப்புள்ளி ஆய்வுக்குழுவால் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இவற்றில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள ஒப்பந்தப்புள்ளிகளின் பட்டியலினை இக்குழு பரிந்துரைக்கிறது. அதன்பின்னர் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டுத் தகுதியான நிறுவனங்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் குழுமத் துணைக்குழு விலைக்குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதன் பரிந்துரையின் அடிப்படையில் குழுமக்குழுவின் ஒப்புதல் பெற்று குறைந்த விலைக்கு விநியோகிக்க ஒப்புக்கொண்ட நிறுவனங்களுக்குப் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்படுகின்றன.
பாமாயில் கொள்முதல் ஆணை பெற்ற 4 நிறுவனங்களுமே கடந்த காலங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு பாமாயில் வழங்கி வரும் நிறுவனங்களாகும்.
எனவே, 3 நிறுவனங்களின் பாமாயில் மாதிரிகள் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்திருப்பதும் பருப்பு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட 4 நிறுவனங்களில் இரு நிறுவனங்களின் மாதிரிகள் முதலில் நடந்த தர பரிசோதனையில் தேர்வாகவில்லை என்பதும் சட்டத்திற்கு விரோதமாக அவற்றுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதும் முற்றிலும் தவறானதாகும். தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி ரேஷன் பொருள் வாங்க ஆணை என்று தலைப்பிட்டிருப்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.