செய்திகள் வர்த்தகம்

பலியாகும் ஊழியர்கள் குடும்பத்துக்கு 60 வயது வரை முழு சம்பளம்- டாடா ஸ்டீல் நிறுவனம் அதிரடி

புதுடெல்லி, மே.25–

தங்களது நிறுவன ஊழியர் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழுச் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிக மோசமாகி உள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 3,511 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 07 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி உருக்கு நிறுவனமான டாடா ஸ்டீல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாடா ஸ்டீல் நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவகள் கடைசியாக பெற்றசம்பளம் முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் ஊழியரின் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தரப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்கள ஊழியர் யாரேனும் கொரோனா மூலம் உயிரிழந்தால், ஊழியரின் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை பட்டம் பெறும் வரையில் நிர்வாகமே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் இந்த அறிவிப்பை ஊழியர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார்கள் சமீக வலைதளங்களில் நிறுவனத்துக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

‘டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு மாபெரும் மரியாதை’… என்று ஒருவர் கருத்துப் பதிவு செய்துள்ளார்.

தனியார் நிறுவன உலகில் தனி இடம் பிடித்து மனசைத் தொட்டிருக்கும் ரட்டன் டாடாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி… பாராட்டு என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *