சிறுகதை

பலிக்காத வாக்கு – ராஜா செல்லமுத்து

பரபரப்பாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள் வேட்பாளர்கள். உள்ளாட்சித் தேர்தல் என்பதால் தங்களின் அந்தஸ்தை தங்களின் பெருமையை சொல்வதற்கு வேட்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் வரிந்துகட்டிக்கொண்டு எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்கள்.

உள்ளூரில் தோற்றுவிட்டால் அவமானம் ஏற்படும் என்று எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும்.

15-வார்டுகள் மட்டுமே இருக்கும் அந்த கிராமத்தில் 5வது வார்டு உறுப்பினர் சுந்தரேசன் தன்னுடைய அந்தஸ்தை தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்ள எப்படியாவது 5 வது வார்டு கவுன்சிலர் ஆகிவிட வேண்டும். என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தார்.

அதற்கு தகுந்தாற்போல இரவு பகல் பாராமல் 5 வது வார்டு மக்களை நேரில் சந்திப்பது பேசுவது அவர்கள் குறைகளைக் கேட்டறிந்து நிச்சயமாக களைவது என்ற கிராமம் முழுக்க அவர் கால் பதிக்காத இடம் இல்லை .

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுகுமார் அந்த வார்டில் பிரபலமானவர். இரண்டு பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அதுவும் ஒரே தெருவில் வசிப்பவர்கள் என்பதால் போட்டி கடுமையாக இருந்தது .

இருவரில் ஒருவர் தான் ஜெயிக்க முடியும். ஒருவர் நிச்சயமாக தாேற்றுத்தான் ஆக வேண்டும். இது உண்மையாக இருந்தது.

அந்த வகையில் சுகுமார் – சுந்தரேசன் இருவரும் தங்கள் வார்டில் ஜெயித்து விட வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இது தவிர அந்த 5வது வார்டில் இன்னும் ஐந்து பேர் போட்டியிட்டு இருந்தார்கள். மொத்தம் ஏழு பேர் அந்த வார்டில் போட்டியிட்டார்கள்.

சுந்தரேசன் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளதால் அவர் எப்படியாவது ஜெயித்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது.

5 வது வார்டு மக்கள் தனக்கு வாக்களித்து விடுவார்கள் என்று சுந்தரேசன் ரொம்பவே சந்தோஷமாக இருந்தார்.

எப்படியும் தான் வென்று விடுவதாக அவருக்கு அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை ஒரு உற்சாக ஊற்று கூறிக் கொண்டிருந்தது.

அதனால் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட தாகவே 5 வது வார்டு மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் .

தேர்தல் நாள் நெருங்கியது. உறவுகளும் சொந்தங்களும் நண்பர்களும் தெரிந்தவர்களும் மட்டுமே ஓட்டுப்போடும் உள்ளூர் தேர்தல் என்பதால் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசி ஓட்டு போட வைத்துக் கொண்டிருந்தார்கள்.

பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆரம்பக் கட்டத்தில் இருந்து சுந்தரேசன் முன்னிலை வகித்து கொண்டிருந்தார். அவரின் வெற்றி வாக்குகளை எண்ணிக் கொண்டிருக்கும் போதே உறுதி செய்யப்பட்டது.

சுகுமார் கொஞ்சம் பின்தங்கியிருந்தார். ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது. மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர்.

5வது வார்டு மற்றவர்களை எல்லாம் விட சுந்தரேசன் அதிக வாக்குகள் வாங்கி முன்னிலை வகித்து கொண்டே இருந்தார்.

இறுதி கட்டத்தை நெருங்கிய போது சுகுமார், சுந்தரேசன் ஐ விட 1 வாக்கு வித்தியாசத்தில் இருந்தார்.

எப்படியும் சுந்தரேசன் ஜெயித்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி.

வாக்காளர் பட்டியலை எடுத்து தங்களுக்காக ஓட்டுப்போடும் சொந்தங்களை உறவுகளை நண்பர்களை அத்தனை பேரையும் எண்ணிப்பார்த்தார்கள். எல்லாம் சரியாக இருந்தது.

ஆனால் இரண்டே இரண்டு பேர் மட்டும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .

அவர்கள் யாரென்று சுந்தரேசன் கண்டு பிடித்த போது அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.

தன்னுடைய மகளும் தன்னுடைய மனைவியும் தான் தனக்கு வாக்குகளை செலுத்தாமல் இருந்தார்கள். கோவிலுக்குச் சென்று எப்படியாவது தன் கணவன் ஜெயித்து விட வேண்டுமென்று வேண்ட சுந்தரேசன் மனைவி வெளியூருக்கு சென்றிருந்தாள்.

அங்கே கடவுளைத் தரிசனம் செய்தாள்.

எப்படியாவது தன்னுடைய அப்பா ஜெயித்து விட வேண்டும் என்று சுந்தரேசன் உடைய மகளும் தன் அப்பாவிற்காக வேண்டிக் கொண்டிருந்தாள்.

வாக்குப் பதிவுக்கு முதல் நாளே அவர்கள் எப்படியும் ஜெயித்து விடுவோம் என்ற அபிலாசையில் ஊரை விட்டு கிளம்பி வெளியூரில் இருக்கும் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது சுந்தரேசன் மனைவி தொலைபேசி அடித்தது.

வெற்றி பெற்றுவிட்டார் தன் கணவன் என்ற சந்தோசத்தில் தன்னுடைய செல்போனை எடுத்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சுந்தரேசன் 2 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்ற செய்தி அவள் காதில் விழுந்த போது ஓ எனக் கத்தினாள் சுந்தரேசன் மனைவி.

அந்த இரண்டு வாக்குகளும் சுந்தரேசனுடைய மனைவியும் மகளும் செலுத்தாதது தான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

கோவிலுக்கு வராமல் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய வாக்கை செலுத்தி இருந்தால் கண்டிப்பாக தன் கணவன் ஜெயித்து இருப்பார்.

வாக்குகளைப் பதிவு செய்யாமல் கோவிலுக்கு வந்தது தான் கணவன் தோல்விக்கு காரணம் என்று வருந்தினாள் சுந்தரேசன் மனைவி.

கடவுள் வழிகளைக் காண்பிப்பார். ஆனால் வழிகளே வாழ்க்கையாகி விடாது . வழிகளில் பயணப்பட்டால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இது தாங்கள் செய்த தவறுதான் என்பதை உணர்ந்து கொண்ட சுந்தரேசன் மனைவியும் மகளும் தங்களால் தான் சுந்தரேசன் தோல்வி அடைந்தார் என்பதை ஏற்றுக்கொண்டு கோவிலை விட்டு வெளியேறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *