…
முனியாண்டி வருடா வருடம் குடும்பத்துடன் கருப்பணசாமி கோவிலுக்கு போவது வழக்கம். இந்தத் தடவை சாமிக்கு நேர்த்திக் கடனாக ஆடு ஒன்றை கொடுக்க வேண்டி ஆடு வாங்குவதற்கு பக்கத்து ஊருக்குச் சென்று ஒரு வழியாக ஆட்டுடன் வீடு வந்துசேர்ந்தான் முனியாண்டி.
காலையில் சென்றவன் மாலையில் தான் வந்து சேர்ந்தான். இதைப் பார்த்த அவன் மனைவி கமலா “என்னங்க கோவிலுக்கு ஆடுவாங்க இவ்வளவு நேரமா?
“அதை ஏன் கேட்குறே ஆடே கிடைக்கல! நானும் கையில் காசு வச்சுகிட்டு ஆடுக்காக எத்தனை இடங்களுக்கு தான் அலையுறது? ஒரு இடத்திலேயும் கிடைக்கலை!
“கறிக்கடைகாரங்க வந்து வாங்கிட்டு போயிட்டாங்கன்னு சொல்றாங்க. அப்புறம் பக்கத்து ஊருக்கு போயி வாங்கி வர்றேன்” போய் வந்த களைப்பில் “இந்த ஆட்டுக்குட்டியை ஓரமா கட்டு” என்றான்.
அப்போது வீட்டினுள் இருந்த அவன் பத்து வயது மகள் பூங்கொடி ஓடிவந்து ஹை ஆடு ..!…. .என்று அந்த கருப்புநிறமுள்ள ஆட்டை தொட்டு பார்த்து விட்டு பிறகு தன் தந்தையை பார்த்து “அப்பா. இந்தஆடு நமக்கா? என்றுக் கேட்க அதற்கு முனியாண்டி,
“இல்லைடா! இந்த ஆடு நமக்கு இல்லை! கோவிலுக்கு! இதை சாமிக்கு நேர்ந்து விடணும்!
நாளைக்கு நாம கோவிலுக்கு போகப் போறோம். அப்ப இந்த ஆட்டுக்குட்டியையும் கொண்டு போகணும்!
மகளுக்கு பதில் சொல்லிவிட்டு மனைவியிடம்”கமலா தண்ணீ கொடு ஒரே தாகமாக இருக்கு” என்று மனைவியிடம் தண்ணீர் வாங்கி குடித்தான்’ முனியாண்டி.
அவனுடைய மகள் பூங்கொடி கட்டப்பட்ட ஆட்டை தடவி தடவிக் கொடுத்து விளையாடினாள். கோவிலுக்கு நேர்ந்த ஆடும் பூங்கொடியின் கைகளை நாக்கால் தடவியது. அவளும் ஆட்டுக்குட்டியை அன்பாக முத்தமிட்டாள்.
ஆடும் அவளிடம் அன்புடன் ஒட்டிக்கொண்டு செல்லமாக விளையாடியது. பிறகு பூங்கொடியின் காதை கடித்தது.
பூங்கொடி அந்த ஆட்டிடமிருந்து விலக மனமில்லை! அழகான ஆடு கருப்பு நிறமுள்ளஆடு! அன்பாக விளையாடுவதை அவளால் அதை விட மனமில்லை! சிறிது நேரத்திற்குள் இருவரும் நண்பர்களானார்கள்.
இதைப் பார்த்த முனியாண்டி “பூங்கொடி இங்கே வாடா! இது கோவில் ஆடு, அதை தொந்தரவு செய்யக்கூடாது. அப்புறம் சாமி கோவிச்சிடும்”என்றான்.
“அப்பா நான் இந்தஆட்டை தொந்தரவு செய்யலைப்பா. அதுதான் என்கிட்ட அன்பா விளையாடுது. ஆனா இந்த ஆட்டைகோவிலில் விட்டுட்டு ஏன் வரணும்? இதை நாமே வளர்ப்போம்பா! எனக்கு இந்த ஆடு பிடிச்சிருக்கு “!
மகளுக்கு எப்படி புரிய வக்கிறதுன்னு முனியாண்டி தெரியாமல் விழித்தான் !
மகள் நினைப்பது போல் இதை கோவிலில் விட்டுட்டா வரமுடியும்? இது பலிகொடுக்கப்படப் போகும் ஆடல்லவா! இது அந்த கருப்பணசாமிக்கு வேண்டிய ஆடு அல்லவா இது! இதை நாம்எப்படி வீட்டில்வளர்க்க முடியும்? உள்ளுக்குள்ளே முனியாண்டி குமுறினான் !
“மகள் பூங்கொடி சின்னப்பிள்ளை; அவளுக்கு இதெல்லாம் சொன்னால் புரியாது. நாளைக்கு நாம் கோவிலுக்கு போகும் போது இதை பத்தி புரிந்துகொள்வாள் “
மகள் பூங்கொடி அந்த பலிகொடுக்கப் போகும் அந்த ஆட்டிடம் இவ்வளவுஅன்பாக பழகுறாளே
மனதில் ஏக்க பெருமூச்சு விட்டுக்கொண்ட முனியாண்டி மறுபடியும் மகள் பூங்கொடியை அழைத்தான் “பூங்கொடி உன்னை அம்மா கூப்பிட்டது மாதிரி தெரியுது. என்னான்னு கேட்டுட்டு வா! என்று மகளை திசைதிருப்பி அந்த ஆட்டிடமிருந்து பிரிக்க முயன்றான்!
மகள் பூங்கொடி அன்பாக பழகிய அந்த ஆட்டை பார்த்து” ஆட்டுக்குட்டி கண்ணு என்னை எங்கம்மா கூப்பிடு தாம். நான்போய் என்னான்னுகேட்டு வர்றேன்
நீ அதுவரைக்கும் இந்த புல்லை சாப்பிடு; நான் வந்திடுறேன்” என்று செல்லமாக ஆட்டை தடவிக்கொண்டு வேகமாக வீட்டினுள் சென்றாள் !
முனியாண்டி கட்டப்பட்ட அந்த ஆட்டை பார்த்தான். அது தலையை மேலும் கீழும் ஆட்டியது! முனியாண்டி அதற்கு தண்ணீர் வைத்தான்.
மறுநாள் காலை ஏழு மணி இன்று கருப்பணசாமி கோவிலுக்கு குடும்பத்துடன் போகும் நாள் நேற்று இரவே கோவிலுக்கு போகவேண்டிய பூஜை சாமான்களை தயராய் முனியாண்டி வைத்திருந்தான்.
அதிகாலையிலே எழுந்து அவனும் அவன் மனைவி கமலாவும் கோவிலுக்கு புறப்பட நேற்று வாங்கிய பொருட்களை ஒவ்வொன்றாக எடுக்கும் போதுதான் ஆட்டின் நினைவு வந்தது
ஆட்டை பற்றியும் மகள் பூங்கொடி பற்றியும் வந்த நினைவால் உடனே ஆட்டை பார்க்க வீட்டுக்கு பின்புறம்சென்று பார்க்கத்தொடங்கினான் முனியாண்டி. அங்கே அவனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி !
கட்டப்பட்டிருந்த ஆட்டை காணவில்லை! முனியாண்டிக்கு கையும் காலும் ஓடவில்லை! தலை சுற்றியதுபோல் இருந்தது ; பரப்பானான்! அவன் மனம் படபடத்தது!
அந்த வேகத்தில் மனைவியை அழைத்தான் முனியாண்டி “கமலா …..! …. என்று சத்தம் போட்டு கத்தினான் .அவனுடைய குரலினின் வேகத்தை கேட்டு ஓடிவந்தாள், கமலா .!
“என்னங்க.? என்றுக்கேட்க ஏண்டி ஆட்டை காணோமே !’’
“ஆட்டுக்குட்டியைக் காணாமா? இங்கே தானே ஆடு இருந்திச்சி எங்கேபோச்சி ? அவளும் அதிர்ச்சியுடன் கேட்டாள். இருவருக்கும் ஒன்றும் புரிய வில்லை ;நான்கு பக்கமும் தேடினர் . ஆட்டைக் காணவில்லை !
“மகள் பூங்கொடி எங்கே? அவளையும் காணோம்! ஆமாங்க மகளையும் காணோம்!” என்னடா இது கோவிலுக்கு போறநேரத்தில ஆட்டையும் மகளையும் காணோம். எங்கே போபோயிட்ட போயிட்டாங்க… !”
மீண்டும் அதே பரபரப்பு . இருவரும் அங்குமிங்கும் ஓடி ஓடி தேடினர்! அவர்கள் ஓடுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் என்ன? ஏதேன்று அவர்களும் விசாரிக்கத் தொடங்கினர் !
“கோவிலுக்கு என்று கட்டிப்போட்ட ஆட்டையும் வீட்டிலேயிருந்த மகளையும் காணோம்”
“அப்படியா! எங்கேதான் போனாங்களோ? மகள் இப்படி சொல்லாம போகலாமா ? ஒருவேளை பூங்கொடி ஆட்டை மேய்க்க வயக்காட்டு பக்கம் போயி இருப்பாளா? என்று முனியாண்டியும் கமலாவும் நினைத்து
வயல் காட்டில் எல்லா இடங்களில் தேடினர். கால்களின் வலிகள் அப்போது இருவருக்கும் பெரிதாக தெரியவில்லை !
வயல் காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் இருவரையும் பார்த்து “யாரைத் தேடுறீங்க? எனக் கேட்க “மகளையும் ஆட்டுக்குட்டியும் தேடி வந்தோம் என்று முனியாண்டி அவர்களிடம் பதில்சொன்னான்.
அதற்கு வயல் காட்டில் இருந்தவர்கள் “அதோ அந்த மலைஅடிவாரத்தில உங்க மகள் பூங்கொடி ஒரு ஆட்டுக்குட்டியை மேய்ச்சிகிட்டு இருக்கு “என்று சொன்னார்கள் முனியாண்டியும் கமலாவும் மேல் மூச்சு வாங்கியபடி “அப்படியா ! அவள் அங்கேதான் இருக்காளா? எதுக்கு அங்கே போனா ?
எவ்வளவு தைரியம் இருந்தால் பூங்கொடி இப்படி செய்வாள்? இன்னிக்கு கோவிலுக்கு போகணுமுன்னு அவளுக்குத் தெரியாதா ? இன்னிக்கு போய்அவளை ரெண்டுல ஒன்ன பாத்திடுறேன்”
கோபமாக முனியாண்டி புலம்பிய படி மனைவியுடன் வேகமாக அதுவும் கோபமாக சென்றான் ! பக்கத்திலே இருவரும் சென்றுபார்த்தபோது! அங்கே இருவருக்கும் ஒரு அதிர்ச்சி! அதை பார்த்ததும்சிலையாகி நின்றனர்!
கோவிலுக்கு நேர்ந்த ஆட்டை இறுக்கமாக பூங்கொடி கட்டி பிடித்தபடி கண்களில் தாரைதாரையாக கண்ணீருடன் அழுதுகொண்டிருந்தாள் !
முனியாண்டி வந்த கோபத்தை மறந்து மகள் பூங்கொடி அழும் காட்சியை பார்த்ததும் என்னமோ ஏதென்று பதட்டத்துடன் “என்ன பூங்கொடி இங்க வந்து அழுதுட்டு இருக்க?”
என்று அவன் கேட்டான்.
அதற்கு பூங்கொடி”அப்பா இந்த ஆட்டை கழுத்தை அறுத்துகொலை பண்ண போறீங்களா?” சோகமான குரலில் அழுதபடி கேட்டாள்.
இருவரும் அதிர்ச்சியுடன் பூங்கொடியின் முகத்தை பார்க்க! மறுபடியும் “அப்பா சொல்லுங்கப்பா! இந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லப் போறீங்களா?
“இல்லடா கண்ணு இது சாமி ஆடு; இதைக் கோவிலுக்குகொண்டு போகணும்’’.
‘‘கோவிலுக்குகொண்டு போயி இதை என்னசெய்யப் போறீங்க ?”
“இந்த ஆட்டை வச்சுத் தான் சாமிகும்பிடணும்”
“சாமி கும்பிட்டு அப்படியே இதைவெட்டப் போறீங்க?அப்படித்தானே !’’
“இல்லம்மா சாமிக்கு இந்த ஆடு நேர்த்திக்கடனா வெட்டப்போறோம்.
அவ்வளவுதான் !
“சாமியா இந்த ஆட்டைவெட்ட சொல்லிச்சி? நீங்களா வெட்டிகொன்டுட்டு அப்புறம் சாமி மேல்பழி போடுறீங்க? ஏம்பா இது உங்களுக்கு நல்லாஇருக்கா ?
“பூங்கொடி கண்ணு இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம். உனக்கு இதைப் பத்தி ஒன்னும்தெரியாது !’’
நேரமாகுது சீக்கிரம்ஆட்டை கூட்டிட்டு வீட்டுக்கு வா கோவிலுக்குபோகணும் !
“முதல்ல நான்கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பா! இந்த ஆட்டை கொல்லுறதுக்கு கோவிலுக்கு போகணுமா ? இல்ல சாமி கும்பிட கோவிலுக்கு போகணுமா ?”
இருவரும் மகள் பூங்கொடி வித்தியாசமான கேள்விகளால் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்!
“அப்பா எந்தச் சாமி ஒரு உயிரை கொலை பண்ணச் சொல்லும்! மனிசங்களா பாத்து உயிர்ப்பலி கொடுக்கிறீங்க! இதே இடத்திலே மனிசனோட உசிரா நினைச்சு பாருங்க!
“பாவம்பா! இந்த ஆடு குழந்தை மாதிரி! இதை போயி கொலை பண்ணலாமா? என்கிட்ட இது எவ்வளவு அன்பா பழகி இருக்கு. உங்களுக்கு தெரியுமா?
“நம்ம குடும்பத்தில் இருக்கிற ஆளா என்கிட்ட ஒட்டி இருக்கு! இதை நான்பலி கொடுக்க விடமாட்டேன் !
என்று மகள் பூங்கொடி பிடிவாதமாக பேச இதை முனியாண்டியும் கமலாவும் குழந்தை அறியாமையால் பேசுது என்று நினைத்தவர்கள்
“அம்மாடி பூங்கொடிநேரமாகுதுடா ! ஆட்டுக்குட்டியை விடுடா” என்று அவளின் அணைப்பிலிருந்து ஆட்டுக்குட்டியை விடுவிக்க முயற்சிசெய்தனர்! ஆனால் பூங்கொடி ஆட்டுக்குட்டியை விடுவதாகஇல்லை! அவள் பலம்கொண்டு ஆட்டுக்குட்டியை உடும்பு பிடியாகக் பிடித்துக் கொண்டாள்!
இருவரும் எவ்வளவோ போராடிப் பார்த்தனர் .அவளது கரங்களிலிருந்த பலி ஆட்டை அவர்களால் மீட்க முடிய வில்லை! வயல் காட்டில் வேலை செய்தவர்களின் கூட்டம் கூடியது.
அப்போது ஊர் பெரியவர் ஒருவர் வந்தார் ! நடந்த விசயத்தை தெரிந்துகொண்டார். பிறகு பூங்கொடியின் பெற்றோரை பார்த்து “அந்த கருப்பணசாமியோட நாடகம் தான் இது! உன் மகள் பூங்கொடி இந்த ஆட்டுக்குட்டிமேல அளவு கடந்த அன்பு வச்சி இருக்கு இதை பலி கொடுக்காதே! கருப்பணசாமி கோவிலுக்கு விட்டுடு அங்கேயே இந்த ஆடுவளரட்டும் !
பூங்கொடி என்னைக்கு இந்த ஆட்டை பார்க்கனும்னுன்னு ஆசை படுதோ அப்ப போயி அப்ப கோவிலுக்கு கூட்டிட்டு போ. ஆனாஆட்டை மட்டும் வெட்டாதே! இதை உன் மகளுக்கு ரெண்டு பேரும் இப்பவே சத்தியம் பண்ணிக் கொடுங்க .இப்ப கோவில்ல பொங்கல் வச்சிசாமி கும்பிட மட்டும் போங்க .ஆட்டை பலி கொடுக்கக்கூடாது. என்ன புரியுதா ?”என்று அந்தப் பெரியவர் கூறியதும் கையில் இறுக்கி பிடித்திருந்த ஆட்டை விடுவித்தாள் பூங்கொடி !
“அப்பா இந்த தாத்தா சொன்னதை நல்லா கேட்டுகிட்டீங்களா! அதுமாதிரி நீங்க நடக்கணும்! நான் இந்த ஆட்டை பார்க்கனுமுன்னு எப்பசொன்னா லும் உடனே கோவிலுக்கு என்னை கூட்டிட்டு போகணும்”!என்று அவளும் கண்டிப்புடன் கூறினாள்.
செய்வதறியாது திகைத்து நின்ற முனியாண்டியும் கமலாவும் வேறு வழியின்றி சத்தியம் செய்தார்கள் !
அங்கே அன்று அன்பு போராட்டத்தில் கோவிலில் பலியாகஇருந்த ஓர் அப்பாவிஆடு குழந்தையால் உயிர் பிழைத்தது .
அன்புக்கு கிடைத்த வெற்றியல்லவா இது!
காலங்காலமாக நேர்த்திக்கடன் என்ற பெயரில் புரையோடிப் போன பழமை சம்பிரதாயம் புதுமைக்கு வழிவிட்டு அப்போது விடைபெற்றது!