இது என்னுடைய பணம் தான். என் கையில் இருந்து கீழே விழுந்தது என்று விடாப் பிடியாகச் சொல்லிக் கொண்டிருந்தான் சத்தியநாராயணன்.
“இல்ல, இது உன் பணமா இருக்காதுன்னு நினைக்கிறேன்?
என்று அவனின் பேச்சுக்கு எதிர் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் சுரேஷ்
“இல்ல இது என் பணம் தான் “
இருவருக்கும் விவாதம் நடந்து கொண்டிருந்தது .அவ்வளவாகக் கூட்டம் இல்லாத ஓடும் பேருந்தில் இருவர் பேசுவதையும் சிலர் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“என்ன இவங்க பேசிட்டு இருக்காங்க ?”
என்று சில பேர் பார்த்தார்கள். சுரேஷ் சிரித்துக் கொண்டான்.
” இல்ல , இது என்னுடைய பணம்தான் “
என்று சத்திய நாராயணன் சொல்வதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.
“சரி நான் அதைப் பத்தி பேசல “
என்று இருவரும் பேருந்தை விட்டு இறங்கினார்கள்.
பஸ்சும் பழுதானதால் அதே இடத்தில் நின்றது.
சத்திய நாராயணனுக்கு மனசு சரியில்லை. ” சுரேஷ், நீங்க சொன்னது உண்மைதான். அது என்னுடைய பணம் இல்லை தான். அத நான் அப்பவே சொன்னா நல்லா இருக்காது. அதனாலதான் கொஞ்சம் கழிச்சுச் சொன்னேன் ” என்று சத்தியநாராயணன் சொல்ல,
” ஏன் அப்படி சொன்ன?” என்று சுரேஷ் கேட்க
” உங்களுக்கு நான் பண்ண விஷயம் ஞாபகம் இருக்கா? என்று சத்தியநாராயணன் சுரேஷிடம் கேட்க
“என்ன பண்ண?” என்று யோசித்தான் சுரேஷ்.
” இல்ல நாம ரெண்டு பேரும் பஸ் புறப்படுற எடத்திலயே ஏறி உட்கார்ந்தோம். அப்போ பஸ்ல கூட்டம் இல்லாம இருந்துச்சு. போகப்போகக் கூட்டம் அதிகமாச்சு. நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு, சிரிச்சுகிட்டு, அரட்டை அடிச்சிட்டு வந்தோம் . அப்ப நம்ம கிட்ட ரொம்ப நேரமா சில பேர் நின்னுகிட்டே இருந்தாங்க.
அவங்களுக்கு இடம் கிடைக்கல. நாம அது பத்தி எல்லாம் கண்டுக்கல .அப்படி எத்தனையோ பேர் நின்னுகிட்டு இருந்தாங்க. அது சாயங்கால நேரம் .அப்ப நான் சொன்னேன். இவங்க ரொம்ப நேரமா நின்னுகிட்டு இருக்காங்க. நாம கொஞ்சம் இடம் கொடுக்கலாமா ? அப்படின்னு சொன்னேன்.
சரின்னு நீங்க சொல்ல ரெண்டு பேரும் எந்திருச்சு நின்னோம்..நாம எழும்பவும் அவங்க உடனே உட்கார்ந்துட்டாங்க.
அப்ப இறங்கும்போதுதான் பேருந்துல கிடந்த பணத்தை கையில் எடுத்து கொடுத்தீங்க. நான் வாங்கி வச்சுக்கிட்டேன். இது நம்ம பணம் இல்லன்னு எனக்கு அப்பவே தெரியும். கீழ கிடந்த பணம் அங்க இருக்கிற யாரோ ஒருத்தவங்கவங்களோடதுன்னு தெரியும்.
ஆனா இது யாரு பணம்னு நாம கேட்டா உண்மையாலுமே பணத்தை தொலைச்சவங்க, இறங்கிப் போய் இருக்கலாம். மத்தவங்க இது என் பணம் அப்படின்னு பொய்யா சொல்லி வாங்குவதற்குக் கூட சான்ஸ் இருக்கு . அதனால தான் நான் அந்த பணத்த அப்படியே வச்சுக்கிட்டேன். என் மனசுக்குள்ள ஒரு பெரிய சந்தோஷம் என்னன்னா ஒரு மனுஷனுக்கு நீங்க நல்லது செஞ்சீங்கன்னா அதுக்கான பலன் அடுத்த நொடியே கிடைக்குது அப்படிங்கறதுதான். அந்தப் பணம் என்னோடதில்ல. நாம செஞ்ச நல்லதுக்கு கிடைச்ச வெகுமதி. பலன் அப்படின்னு நினைச்சுக்கிட்டேன்” என்று சத்திய நாராயணன் சொல்ல, சுரேஷ் அது தவறு; அது நமக்கான பணம் இல்லை என்று அந்தப் பணத்தை அந்த பஸ் நடத்துனர் ஓட்டுனர் இருவரையும் பார்த்துக் கொடுத்தனர்,‘‘ உங்கள் பஸ்சில் கிடந்தது .உரியவர் வந்து கேட்டால் கொடுங்கள்’’ என்று சொல்லிக் கொண்டே.
இனிமேல் எக்காரணம் கொண்டும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று இருவரும் முடிவெடுத்தார்கள்.