சென்னை, ஜூலை 5–
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டாா். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு முழு உருவ சிலை வைக்க காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை வைக்க அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு அரசு கோர்ட்டில் தெரிவித்தது.
இந்த கொடூரக் கொலை நடந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் நினைவுநாளை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளனர். பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு உள்ள பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் கடுமையாக சோதனை செய்யப்படுகின்றன. முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பதற்றம் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு காவல் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைதியான முறையில் இந்த பேரணி நடைபெற்றது.
#trending news #trending news tamil #makkalkural #மக்கள்குரல் #சென்னை