சிறுகதை

பறவைகள் பலவிதம் | சம்பத்

விஜயன், லட்சுமி இருவரும் தம்பதியாகி இன்றோடு 15 வருடங்கள் உருண்டோடி விட்டது. விஜயன் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான். சிக்கனமாகவும் சீரான வாழ்வையும் இருவரும் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் தினமும் காலையில் வீட்டின் மொட்டை மாடியில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிறிய தானியங்கள் வைத்து வரும் பறவைகள் உண்ணும் வரை காத்திருந்து அவற்றை ரசித்து விட்டு அவைகள் சென்றவுடன் கீழேயிறங்கி வருவார்கள்.

அவ்வப்போது வீட்டின் உரிமையாளர் வந்து அவர்களிடம் என்ன பறவைகள் வந்து இப்படி அசுத்தம் செய்திருக்கிறது பார்த்தீர்களா? உடனே அதை நிறுத்துங்கள் என்று கூறுவார். விஜயன் உடனே இடத்தைச் சுத்தம் பண்ணி அவரைக் கூப்பிட்டுக் காண்பித்து சமாதானம் செய்வான்.

இதை பக்கத்து வீட்டின் மாடியிலிருந்து தினமும் சாம்பசிவம் பார்த்துக் கொண்டிருந்தார். நல்ல காரியம் செய்வதற்குத் தடையா என்று மனதில் நினைத்துக் கொண்டு, ஒரு திட்டம் தீட்டினார்.

மறுநாள் காலை விஜயனின் வீட்டிற்கு வந்த சாம்பசிவம் விஜயனிடம் எங்கள் வீட்டில் மாடியில் ஒரு போர்ஷன் காலியாக உள்ளது. உங்கள் இருவருக்கும் தாராளாமாக இருக்கும். அந்த போர்ஷன். இப்பொழுது நீங்கள் கொடுக்கும் வாடகையில் ஆயிரம் ரூபாயை குறைத்துத் தந்தால் போதும் என்றும் என்றைக்கு வருவீர்கள் என்று யோசித்துக் கூறவும் என்றார்.

மேலும் நீங்கள் எங்கள் மொட்டை மாடியில் பறவைகளுக்கு உணவு வழங்கும் தொண்டைத் தொடரலாம் என்றார். விஜயன் தம்பதியினருக்கு ஆச்சரியம் மேலிட்டு என்ன சொல்வதென்று அறியாமல் நிற்க, சாம்பசிவம் வருகிறேன் என்று கூறி விடைபெற்றார்.

வீட்டின் உரிமையாளர், சாம்பசிவம் கிழே இறங்கி வருவதைக் கண்டு, வாங்க என்று தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். என்ன இவ்வளவு தூரம் என்று வினவ பாவம் விஜயன் பறவைகளுக்கு உணவுத் தொண்டு செய்கிறார். உங்களுக்கு வீடு பாழாகிறது என்ற வருத்தம்.

மேலும் இரண்டு பேருக்கும் நடக்கும் விவாதத்தை தினமும் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதனால் அவரை எனது வீட்டின் மாடியில் உள்ள காலியான பகுதிக்கு வரும்படி அழைத்தேன் என்றார். இப்போது தங்களுக்குத் தரும் வாடகைத் தொகையை விட ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொடுக்கும்படியும் கூறியுள்ளேன் என்றார். பறவைத் தொண்டிற்கு என்னாலான உதவி என்று கூறி விடைபெற்றார்.

வீட்டின் உரிமையாளரின் மனைவி இந்த பேச்சுக்களைக் கேட்ட பின், தனது கணவரைக் கூப்பிட்டு, மாடிக்குச் சென்று, விஜயன் அவர்கள் காலி செய்யாதவாறு சமாதானம் கூறியும் பறவைகளுக்குத் தாராளாமாக உணவுபோட்டுத் தொண்டு செய்யலாம் என்று அனுமதியளித்தும் முடிந்தால் வாடகையை ரூபாய் 500 குறைத்து விட்டு வாருங்கள் என்றாள்.

இவர்கள் தற்போது காலி செய்தால் வேறு ஆள் பிடிப்பது மிகவும் சிரமம்.அதனால் அப்படிக் கூறினாள்.

வீட்டின் உரிமையாளர் மாடிக்குச் சென்று விஜயனிடம் மனைவி கூறியதைக் கூறி விட்டு, தற்போது நாம் காலி செய்ய வேண்டாம் என்று கூறினார். விஜயனும் நன்றி என்று கூறி தான் தற்போது இந்த வீட்டிலேயே தங்குகிறேன் என்று கூறியதும், வீட்டின் உரிமையாளர், மகிழ்வுடன் விடை பெற்றார்.

விஜயன் குடும்பத்திற்கு என்ன நடக்கின்றது என்று அறியாமல் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

சாம்பசிவம் மாலை விஜயன் அலுவலகத்திலிருந்து வரும் வழியில் சந்தித்து, நான் உனது பறவை உணவுத் தொண்டு தொடர்வதற்கு நேற்று நான்வந்து செய்த தந்திரம் உனக்கு நிம்மதி மட்டுமின்றி லாபகரமாகவும் முடிந்தது என்று அறிந்தேன் என்றார். வாழ்க இயற்கையை நேசிக்கும் பண்பாடு!! வாழ்க பறவைத் தொண்டு !! என்று கூறி விஜயனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே நகர்ந்தார்.

சாம்பசிவம் ஐயாவைப்போலத்தான் பறவைகள் பலவிதம் என்று நினைத்துக்கொண்டே வீட்டினுள் மகிழ்வுடன் நுழைந்தான் விஜயன்.

அவனிடம் அவன் மனைவி இன்று நமது மாடிக்கு ஒரு வெளி நாட்டுப் பறவை வந்தது, மிகவும் அழகாக இருந்தது என்று கூறினாள்.

அதைக் கேட்ட அவனுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *