புத்தக மதிப்புரை
நூலாசிரியர்: செழியன். ஜா
பக்கம்: 152 விலை: ரூ. 150
பதிப்பகம்: காக்கைக் கூடு
எண்: 31, மாரி (செட்டி) தெரு,
மந்தைவெளி, மைலாப்பூர், சென்னை–4
செல்பேசி: 90436 05144
மின்னஞ்சல்: crownest2017@gmail.com
புத்தகங்களை ஆன்லைனில் வாங்கும் முகவரி: www.crownest.in
உலகின் அழகே பன்முகத்தன்மையில்தான் அடங்கி உள்ளது. அதேபோல் தான் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி மனச்சுவை (ரசனை) உள்ளது. கல்வெட்டு ஆய்வாளர், கவிஞர், சிற்பி, பாடகர் என மனிதர்களில் எத்தனை எத்தனை முகங்கள். அப்படியான மனிதர்களில் பறவை இன ஆய்வாளர்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில், உடன் வாழும் மனிதர்கள் குறித்தே பொருட்படுத்தாத இந்த உலகில், குரலற்றவர்களின் குரலாக சில ஊடகவியலாளர்கள் இருப்பதுபோல, வாயும் குரலும் இருந்தும் அவற்றின் குரலை யாரும் கண்டுகொள்ளாத வேளையில், பறவைகளின் குரலாக இருப்பது, பாராட்டுக்கும் சிறப்புக்கும் உரியது தானே.
அப்படியான ஒரு மனிதராகவும் பறவைகளின் குரலாகவும் இருந்தே, “பறவைகளுக்கு ஊரடங்கு” புத்தகத்தை எழுதி இருக்கிறார் நூலாசிரியர் செழியன்.ஜா. “பறவைகளுக்கு ஊரடங்கு” என்ற கட்டுரை தொடங்கி, “இது வண்ணத்துப் பூச்சிகள் காலம்”, “உற்சாகம் அளிக்கும் பறவை நோக்கல்”, “பறவைகளின் உலகத்தில்…”, “சிட்டுக்குருவிகளை பின்தொடர்ந்து…”, “சென்னை பறவை பந்தயம்”, “பறவைக் குரல்கள்” என்று மொத்தம் 24 கட்டுரைகளை நூலாசிரியர் இந்த நூலில் எழுதியுள்ளார். அதில் முதலாவதாக இடம்பெற்றுள்ள “பறவைகளுக்கு ஊரடங்கு” 24 கட்டுரைகளில் முதலில் இடம்பெற்றுள்ளது போல, முதன்மையான கட்டுரை என்றும் சொல்ல வேண்டும்.
பொதுமுடக்க நையாண்டி
கொரோனா பெருந்தொற்று தொடங்கிய 2020 ஆம் ஆண்டின் முதல் அலையின் போது, அரசுகள் போட்ட ஊரடங்குகள் எத்தனை கேலிக்குரியதாக இருந்தது என்று, அப்போதே பல்வேறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள். அதனை, நூலாசிரியர் செழியன், பறவைகளுக்கு பொருத்திப் பார்த்து இருப்பது, ரசனைக்குரியதாக இருக்கிறது. ஒவ்வொரு பறவையின் வாழ்க்கை முறையும் வாழும் வகையும் வெவ்வேறானதாக இருக்கும் போது, பொதுமுடக்கம் ஒன்றே போல் நடைமுறைப்படுத்தினால் அது எத்தனை கேலிக்குரியதாக இருக்கும் என்பதனை பறவைகளின் வாழக்கை முறையை வைத்து நையாண்டி (satire) செய்திருப்பது மிகவும் சுவையானது.
மேலே குறிப்பிட்டது போல், ஒவ்வொரு தலைப்பும் பறவைகள் உலகத்தில் உள்ள ஒவ்வொரு பறவையை பற்றி பேசுகிறது. அதன் அலகு, இறகு, இயல்பு என ஒவ்வொன்றைப் பற்றியும் கூறி செல்கிறார் நூலாசிரியர். பறவைப் பந்தயம் என்றதும் குதிரைப் பந்தயம், ஓட்டப்பந்தயம் போல் என்று, நாம் எண்ணுவது போலவே, பலரும் நினைக்கிறார்கள் என்று ஆசிரியர் சொல்லும்போது… நாம் மட்டும் இப்படி முட்டாள்தனமாக எண்ணவில்லை போலும்… என்று, நமக்குள் ஒரு நிறைவு ஏற்படுவது இயற்கை. செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து போகிறது என்று, நடந்த அரசியல் உள்ளிட்ட பலவற்றையும் ஆசிரியர் கட்டுரையில் விளக்கி உள்ளார்.
பறவைகளின் குரல்
நூற்றுக்கணக்கான பறவைகளை பற்றி எழுதியுள்ள இந்த புத்தகம் முழுவதும், 50 க்கும் மேற்பட்ட பறவைகளின் படங்களையும் நூலாசிரியர் இடம்பெற செய்துள்ளது சிறப்பு. அத்துடன் பறவைகளின் குரல்களை கேட்டு அறியக்கூடிய இணைய தள முகவரியையும் நிறைவு கட்டுரையில் https://xenocanto.org கொடுத்துள்ளார். இதில் ஏராளமான பறவைகளின் குரல்களை கேட்க முடியும் என்ற தகவலை பதிவு செய்துள்ளார்.
அண்டம் அனைத்து உயிர்களுக்குமானது. வலுத்தது வாழும் என்ற கோட்பாட்டில் மனிதன் தொடங்கி, அனைத்து உயிரினங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றாலும், எளிய உயிரினங்கள் அனைத்தும் கூட வாழ வேண்டும் என்பதே, உயிரின சமநிலைக்கு சரியானதாக இருக்கும். ஆனால், வலியவர்கள் எளியவர்களையும் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளையும் அலட்சியமாக பார்ப்பதுபோல, உலக உயிரினங்களிலும் அதே நிலையே உள்ளது.
ஆனால், இந்த உலகம் அனைவருக்குமானது என்பதே, இயற்கை வகுத்துள்ள விதி என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த எண்ணம் இந்த புத்தகத்தை படிக்கும் போது, நமக்குள் ஏற்படும் என்பது மறுக்க முடியாதது. இந்த புவியில் வாழும் சக உயிரினமான பறவைகளை பற்றி, அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த புத்தகம் சிறந்த வாய்ப்பாக விளங்கும் என்பதில் எந்தவித அய்யமுமில்லை.
–மா.இளஞ்செழியன்.