சிறுகதை

பர்வேஸ் வெடித்த பட்டாசு! | மலர்மதி

ர்வேஸ் துபாயில் குடும்பத்துடன் வசிக்கும் ஒரு தமிழன்.

அவன் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் அவன் குழந்தைகள் தீபாவளி அன்று பட்டாசு, மத்தாப்பு போன்றவற்றை வாங்கி வெடித்து மகிழ்வர். குழந்தைகளின் மகிழ்ச்சிதானே முக்கியம் என்று பர்வேசும் அவர்களுக்குத் தேவையான பட்டாசு ரகங்களை வாங்கித் தருவான். தானும் குழந்தைகளோடு குழந்தையாய் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவான்.

தமிழ் நாட்டில் இருந்தவரை ஒரு பிரச்சினையும் இல்லை.

துபாய்க்கு வந்த பிறகுதான் பட்டாசு வெடிப்பது என்பது முடியாத காரியமாகிப் போனது. அதற்கு அந்த நாட்டின் சட்ட திட்டங்கள்தான் காரணம்.

துபாயில் யாரும் பட்டாசு வெடிக்கக் கூடாது.

அதற்கு முக்கிய காரணம் உண்டு.

அதாவது நம் ஊரில் வீடுகள் தனித்தனியாக அமைந்திருக்கும். வீட்டின் கொல்லைப்புறம், பின்புறம், மைதானம், முற்றம் என்று ஏகப்பட்ட காலி இடங்கள் இருக்கும். எங்கு வேண்டுமானாலும் பட்டாசு வெடிக்கலாம்.

ஆனால், துபாயில் அப்படி இல்லை. தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போன்று நெருக்கியடித்து நிற்கும் வானளாவிய கட்டிடங்கள், ஒவ்வொரு கட்டிடமும் ஒன்றுக்கொன்று ஒட்டியே இருக்கும். ஒரு கட்டிடத்தில் சுமார் 25 முதல் 100 ஃப்ளாட்டுகள் வரை இருக்கும்.

இப்படி இருக்கும் வீடுகளில் பட்டாசு எப்படி வெடிக்க முடியும்? அப்படியே பால்கனியில் வெடித்தாலும் நெருப்பு சிதறி தீப்பற்றிக்கொண்டால் அவ்வளவுத்தான். மொத்த பில்டிங்கும் தீப்பிடிக்கும் அபாயம்.

அதனால்தான் அந்த நாட்டில் பட்டாசுகளுக்குத் தடை. தீ விபத்துகளும் மிக மிக குறைவாக இருப்பதற்கும் இது போன்ற சட்டங்களும் காரணமாகின்றன. மக்கள் பாதுகாப்புதானே முக்கியம்?

இந்த உண்மைகள் எல்லாம் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு வேண்டியது பாட்டாசும், மத்தாப்பும்தான்.

பல வருடங்கள் கழிந்த நிலையில் ஒரு விடுப்பில் பர்வேஸ் தன் குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தான்.

அந்த நேரம் பார்த்து சரியாக தீபாவளி சீசன்.

கேட்கவா வேண்டும்?

குழந்தைகள் கேட்பதற்கு முன் அவனாகவே கடைக்குச் சென்று பட்டாசு ரகங்களை அள்ளிக்கொண்டு வந்துவிட்டான்.

*

அதைப் பார்த்து குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அக்கம் பக்கத்து குழந்தைகளோடு சேர்ந்து அவன் குழந்தைகளும் பட்டாசு வெடித்து மகிழ்ந்துகொண்டிருந்தனர்.

கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், பாம்பு மாத்திரை போன்றவற்றை பெண் குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு, பட்டாசு, ராக்கெட் வெடி ரகங்களுடன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் பின்புறமிருந்த காலி மைதானத்துக்குப் போனான் பர்வேஸ்.

அங்கே ஏற்கனவே ஒரு கூட்டம் பட்டாசு கொளுத்தி அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தது.

ஆளில்லாத இடமாகத் தேர்ந்தெடுத்து பட்டாசு வைத்துக் கொளுத்த ஆரம்பித்தான் பர்வேஸ்.

அவனுடன் மகனும் சேர்ந்துக்கொண்டான்.

வேடிக்கைப் பார்க்க சில வாண்டுகள் பட்டாளம் சுற்றி நின்றிருந்தது. நிகழ்ச்சிகளை சிலர் தங்கள் செல் ஃபோன்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு வெடி மட்டும் எவ்வளவு கொளுத்தியும் வெடிக்காமல் மக்கர் பண்ணிக் கொண்டிருந்தது.

“அப்பா… அது வெடிக்காது போலிருக்கு. வேறு ஒண்ணு வைங்க.” என்றான் பர்வேஸின் மகன்.

பர்வேசும் அப்படித்தான் நினைத்தான்.

வேறு வெடி ஒன்றை எடுத்துக்கொண்டு நெருங்கினான்.

குனிந்து கொளுத்தப்போகும் நேரத்தில் திடீரென்று அந்த பழைய வெடி “டமார்” என்று வெடித்துச் சிதறியது.

அவன் அதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“ஐயோ.. அம்மா..” என்று அலறிவிட்டான்.

கூடியிருந்த வாண்டுகள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

எதிர்பாராதவிதமாக வெடித்த பட்டாசு அவன் சட்டையைப் பொத்தலாக்கி விட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஆங்காங்கே பொத்தலாகிப்போன சட்டையுடன் அவன் நிற்கும் அந்தப் பரிதாபமான காட்சியை யாரோ ஒரு விஷமி படம் பிடித்து வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்ய அது அந்தக் காலனி முழுக்க வைரலாகி விட்டது.

இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.

குழந்தைகளும் இப்போது வளர்ந்துவிட்டதால் துபாயில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்பதைப் புரிந்துக்கொண்டு ஊருக்கு வரும்போது மட்டும் கேட்டு வாங்கி வெடித்தனர்.

*

வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபாவளி அன்று நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பிக்கொண்டிருந்தான் பர்வேஸ்.

வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டிருந்த சமயத்தில் பழைய நண்பன் ஒருவனிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்திருந்தது.

“நண்பன் பர்வேசுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!” என்ற வாழ்த்துச் செய்தியுடன் ஒரு படமும் அனுப்பியிருந்தான்.

உற்றுப் பார்த்தான்.

அது பொத்தலாகிப்போன சட்டையுடன் பர்வேஸ் நிற்கும் பழைய படம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *