தலைமை செயல் இயக்குநர் ரத்னேஷ்குமார் ஜா நம்பிக்கை
சென்னை, ஜூலை 19–
இந்திய மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் “பர்லிங்டன் ஆங்கிலப் பள்ளி” தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தலைமை செயல் இயக்குநர் ரத்னேஷ்குமார் ஜா கூறி உள்ளார்.
சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில், ஆங்கில கல்வி தொடர்பான, “எல்ட்ராக் இந்தியா கே–12” உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. ஆங்கிலத்தின் நவீன தேவைகள், அதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் குறித்து ஆராயப்பட்டது. இதில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பர்லிங்டன் ஆங்கிலப் பள்ளி சார்பாக, பர்லிங்டன் குழும நிறுவனங்களின் ஆசிய பசிபிக் பிரிவு, தலைமை செயல் இயக்குநர் ரத்னேஷ் குமார் ஜா கலந்து கொண்டு உரையாற்றினார். பர்லிங்டன் ஆங்கில பள்ளி, உலகம் எங்கும் பல்வேறு நாடுகளில் தங்களுடைய கிளைகளை விரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதனை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பர்லிங்டன் குழும நிறுவனங்களின் ஆசிய பசிபிக் பிரிவு, தலைமை செயல் இயக்குநர் ரத்னேஷ் குமார் ஜா அவர்களை, மக்கள் குரல் சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது:–
தொழில்நுட்பம்–பண்பாடு
இந்தியாவில் உள்ள இளைஞர்களை, உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், பர்லிங்டன் ஆங்கில பள்ளியை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இந்தியர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்பட வழி செய்கிறோம். குறிப்பாக, குழந்தை பருவம் முதலே அவரவர்களுடைய மொழித்திறன், சிந்தனையை மேம்படுத்துவதன் மூலம், ஒருவருடைய நடத்தையை வளர்க்கவும் முன்னுரிமை கொடுக்கிறோம்.
மேலும் தொழில்நுட்பம் மூலமும், அவரவர் பண்பாட்டு, கலாச்சாரத்துக்கு ஏற்பவும் அவர்களை அணுகுவதன் மூலம், ஆங்கில மொழி ஆளுமையை வளர்க்க முடியும் என்று நம்புகிறோம். உலக அளவில் இந்திய மாணவர்கள் பல்வேறு துறைகளில் திறன் பெற்றவர்களாக உள்ளனர். அவர்களை பல்வேறு துறை சார்ந்த நிலைகளில் கூடுதலாக மேம்படுத்த திட்டமிட்டு செயல்படுகிறோம். இந்தியா பல்வேறு மொழி, பண்பாடுகளை கொண்டது என்பதால், கற்பிக்கும் ஆசிரியர்களையும் அதற்கேற்ப பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கி உள்ளோம். அதன்மூலம், மாணவர்களின் தேவைக்கும் அவர்களுடைய கற்கும் திறனுக்கும் ஏற்ப பயிற்சி அளிக்கிறோம்.
போட்டியிட உதவும்
அத்துடன், ஒருவருடைய நுணுக்கமான சிந்தனை திறனை வளர்க்கவும், திறமையாக உரையாடவும், அதனை சர்வதேச அளவில் நம்பிக்கையுடனும் தெளிவாகவும் பகிர்ந்து கொள்ளவும் பர்லிங்டன் ஆங்கிலம் உதவி செய்கிறது. பன்னாட்டு அளவில் போட்டியிடவும், சூழல்களை சமாளிக்கவும் எங்களுடைய பயிற்சி உதவி செய்கிறது என்று கூறினார்.
மேலும் கூறுகையில், எங்களுடைய பர்லிங்டன் ஆங்கில பள்ளியில் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரையில் பல்வேறு நிலைகளில், தேவைக்கு ஏற்ப ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் படிநிலைகள் உள்ளது. கட்டணமும், இந்தியாவின் பல்வேறு மாநில மக்களின் வருவாய் அடிப்படையில், குறைவாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, சர்வதேச நிலைகளுக்கு ஏற்ப, தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள், பர்லிங்டன் ஆங்கில பள்ளியை தேர்ந்தெடுக்கலாம் என்று தலைமை செயல் இயக்குநர் ரத்னேஷ் குமார் ஜா கூறினார்.