
தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அற்புதமான யதார்த்த நடிகர் ‘பரோட்டா’ முருகன், எந்த ஒரு (வி) வாத மேடையிலும் அடித்து சொல்லலாம், அந்த அளவுக்கு நல்ல பாடனாக வாழ்ந்தே காட்டி இருக்கிறார் ‘ஒண்டிமுனியும் – நல்ல பாடனும்’ படத்தில்.
கதையின் நாயகனாக இருந்த ” அழகர் சாமியின் குதிரை”- ( 2011ல் ரிலீஸ், இயக்குனர் -சுசீந்திரன்) படத்தில் எப்படி தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதை அப்புக்குட்டி என்னும் துணை நடிகர் வாங்கி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறாரோ- அதே அடிச்சுவட்டில். ‘‘பரோட்டா முருகன்! (சூரிக்கு பரோட்டா போட்டுப் போட்டுக் கொடுத்து குழம்பி நிற்பவர்– வெண்ணிலா கபடிக்குழு படத்தில்)

‘நேர்த்திக்கடன்’ பலி’-கடாவுக்கு நெற்றியில் வைத்த பொட்டு மஞ்சள் குங்குமத்தை ‘பரோட்டா’ முருகனுக்கும் திலகமாயிட்டு வெற்றி மாலை சூடி ஆரத்தி எடுக்கலாம் என்றால்… அதிலிருந்து அவரின் நடிப்பின் உச்சத்தை உணர்ந்திருப்பீர்களே…?!
நேர்த்திக்கடன் பலி கடாவின் பின்னணியில் கொங்கு மண்டல ‘குக்’கிராமத்தில் நடந்த ஒருவரின் வாழ்வியல் உண்மைச் சம்பவ கதைக்காகவும், நல்ல பாடனாக வாழ்ந்து காட்டி இருக்கும் ‘பரோட்டா’ முருகனுக்காகவும் அவசியம் பார்க்க வேண்டும்- ‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ படத்தை.
| அசட்டுத் தைரியமா – ‘Asset’டே தைரியமா? கருப்பசாமி (தயாரிப்பாளர்), அமராவதி (இணைத் தயாரிப்பாளர்) இருவருக்கும் இருப்பது அசட்டுத் தைரியமா… இல்லை ‘Asset’ டே தைரியமா? என்று யோசிக்க வைக்கும். திரைக்கு வரும் 10க்கு 8 படங்கள் அதிகபட்சம் மூன்றே நாட்களுக்கு மட்டுமே… ஓடகிறது– என்று நிலவி வரும் ஒரு அசாதாரண சூழ்நிலையில் “ஒண்டி முனியும் நல்ல பாடனும்” படத்தை எடுத்து அதையும் முடித்து, திரைக்கும் கொண்டு வந்திருப்பது அசட்டுத் தைரியமல்ல, ‘Asset’ டே தைரியம் என்று தான் சொல்ல வேண்டும். கருப்பசாமிக்கு கலை வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாத்தை எழுதிருப்பதில் சுகவனம் மறக்க முடியாதவர். |
ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் தலைப்பை படிப்பதில் சிரமம் … தலைப்பும், சொல்லி இருக்கும் கதையும், அதை படமாக்கி இருக்கும் விதமும்… அறிமுக இயக்குனர் சுகவனத்தின் கடந்து வந்த பாதையின் அனுபவம்+ முதிர்ச்சியைப் படம் பிடிக்கும்.
“மடையான்…மடையான்… பூப்போடு” என்று வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்து நகர்ந்தபடியே பின்னுக்கு ஓடும் 10 வயது மகன் ‘தொபக்கட்டீரென்று’ கிணற்றில் விழும் ஆபத்தோடு துவங்குகிறது கதை.
‘‘பதறுகிறார் தந்தை ‘பரோட்டா’ முருகன்’’. ஒண்டி முனியா. . நல்லபடியா என் புள்ளையக் காப்பாத்தி குடுடா… அவன மட்டும் பொழைக்க வச்சுட்டா… நான் புள்ளைக்கு புள்ளையா வளர்க்கிற இந்த கடாவை உனக்கு நேர்த்திக் கடனா தரேன்டா..” என்று கண்ணீரும் கம்பலையுமாய்க் கதற, மகன் கண் விழிக்கிறான், கதையில் பிடிக்கிறது சூடு.
நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் தலை தூக்கும் சிக்கல்- குடும்பத்தில் மோதல்- இரண்டு பண்ணாடிகளுக்கு (பண்ணையார் – கோவையில் பண்ணாடி என்று அழைப்பது வழக்கமாம்.)
நடுவில் நீறு பூத்த நெருப்பாக இருந்த ஜென்மப் பகை கொழுந்து விட்டெரியும் விபரீதம், முடிவுதான் என்ன…? இதுதான் ‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ படத்தின் கதை.
பாரதிராஜாவின் ‘வேதம் புதிதி’ல் சத்யராஜின் அகக்கண்ணை திறக்கும் வளர்ப்பு மகன் தாசரதியைப் போல…( தேவர்ங்கறது நீங்க வாங்கின பட்டமா… செவிலில் அறைவது மாதிரி ஒரு கேள்வி, நினைவிருக்குமே!) அதேபோல நல்ல பாடனின் மகன் கதாபாத்திரம் எழுப்பும் நியாயமான சுருகக் கேள்வி, ரெண்டே ஃப்ரேம் தான் அவன் வருகிறான் என்றாலும்… ரெண்டு கண்களிலும் நிற்கிறான் சிறுவன், தமிழினியன் (சுகவனத்தின் மகன்).
“எங்க அப்பா என் உசுருக்காக வேண்டின மாதிரி கடாவோட அம்மாவும் சாமிகிட்ட இதோட உயிரை காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டு இருக்குமோ..?”- சிறுவன் எழுப்பும் கேள்வியோடு முடிகிறது படம். அருமை, அரங்கு கைதட்டாமல் இருக்க முடியாது. சுகவனம் சூப்பர் டச்.
பெரிய பண்ணாடி கார்த்திகேயன், சின்ன பண்ணாடி முருகன், சேனாபதி (மாப்பிள்ளை), விஜயன் (வேலன்), விகடன் பங்காளி (வடிவேலுவின் அங்க அசைவில்…) மண்வாசனை கலைஞர்கள். கொங்கு மண்டலத்தின் பேச்சுத் தமிழ் உச்சரிப்பும், வாழ்வியல் யதார்த்தமும் இவர்கள் எங்கே நடித்தார்கள்?! இவர்களின் பெயர் நம் உதடுகளில் அழுத்தமாய் ஒட்டும்.
ஆட்டுக்கார அலமேலுவில் ஆடு மாதிரி இங்கே ‘கடா’ – அடடா… அதன் பார்வை ஒன்றே போதும்.
அழகான கிராமம்- விமலின் கேமரா, அது தனி அழகு. பின்னணி இசை என்டிஆர், ஸ்டண்ட் மாஸ் மோகன்: சுகவனத்தோடு வெற்றி ஓட்டம். கிளைமாக்ஸ் எதிர்பார்த்தது தான், ஆனால் நல்லபாடனின் பேரன் எழுப்பும் கேள்வி எதிர்பாராதது.
டைரக்டர்கள் அர்ஜுன் (நடிகர்), சரண் முகாமில் இருந்து முகம் காட்டியிருக்கும் டைரக்டர் சுகவனத்தின்- கலைப்படம் மாதிரி தெரியும், ஆனால் அதுவல்ல. முழு நீள திரைப்படம் – மற்ற படங்கள் வரிசையில்.
“ஒண்டி முனியும் நல்லபாடனும்”:
நொண்டி நடந்தாலும் நல்லா ஓடணும்”!
( உருக்கமான பிரார்த்தனை தான், மசாலா நெடிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வாழ்வியலை காட்டி இருக்கிறார்களே, அதற்காகத்தான்…!)
வீ ராம்ஜீ
![]()





