செய்திகள் நாடும் நடப்பும்

பருவநிலை தொழில்நுட்பங்களில் நவீன மயம்; மாற்று எரிபொருள் புரட்சிக்கு தயாராகும் இந்தியா!


ஆர். முத்துக்குமார்


எகிப்து நாட்டில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பருவநிலை மாற்ற மாநாட்டின் மீது, உலகப் பார்வை திரும்பியுள்ளது. 2015–ல் பாரீஸ் மாநாட்டில் நடைபெற்ற ஒப்பந்தங்களை முன்மொழிந்த அமெரிக்காவே, அதை புறக்கணித்து இருப்பது உலக தலைவர்களுக்கும், இது பற்றிய நிபுணத்துவம் பெற்றவர்களுக்கும் அதிருப்தியை தந்து விட்டதால், இது உப்புக்கல்லுக்கும் பயன்படாது என்ற விரக்தியில் இருக்கிறார்கள்.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டில் ரஷியா பங்கேற்காது என அறிவித்து விட்டது. இந்தியா இதில் பங்கேற்கும் என கூறி வருகிறார்கள். பிரதமர் மோடியின் சர்வதேச சோலார் கூட்டணி, மிக முன்மாதிரியாக இருப்பதால் பல சிறு நாடுகள் இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

சோலார் மீது பார்வை

கச்சா எண்ணை வளமுள்ள வளைகுடா நாடுகள் கூட, சோலார் மற்றும் மாற்று எரிசக்தித்துறை மீது, தங்கள் கவனத்தை திருப்பி வருகிறார்கள். எரிசக்தி உபயோகமே உலக கரும்புகை வெறியேற்றத்திற்கு அதிமுக்கியமான பங்கு வகிக்கிறது. மாற்று எரிசக்தி வருவதால், அடுத்த தலைமுறை விவகாரங்கள் மாற்றம் காணும். புவிமயம் குறைந்து விட, வரும் தலைமுறை நிம்மதி பெருமூச்சு விடும்!

ஆனால், உடனடியாக பாதிப்பு உண்மையில் வளைகுடா நாடுகளுக்குத்தான்! அவர்களது பொருளாதார கச்சா எண்ணையை வைத்து தான், அது அடுத்த 20 ஆண்டுகளில் பாதிக்கும் பாதியாய் குறைந்து விட்டால், அவர்களது வருவாய் பாதிப்படைந்து விடும் அல்லவா?

அமெரிக்காவும் கண் துடைப்பு அறிவிப்புகளால், பாரீஸ் ஒப்பந்தத்தை வழி மொழிந்தது அல்லவா? அதை புறக்கணிப்பது, டாலர் வருவாய் பாதிப்புடன் பின்னி பிணைந்து இருப்பதையும் மறந்து விடக்கூடாது.

வேளாண்மைக்கு தேவை

அமெரிக்கா, சீனா, ரஷியா போன்ற முன்னணி நாடுகளில், நீர் நிலைகள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மிக பாதுகாப்பாக இருக்க தேவையான பல தொழில் நுட்பங்களை கையாண்டு வருகிறது.

ஆனால், நீரை ஆதாரமாக கொண்டு விவசாயத்துறையை நம்பி இருக்கும் இந்திய பொருளாதாரமோ, இதுவரை இத்துறையை சிறப்பான உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் பின்தங்கி விட்டோம்!

லட்சக்கணக்கான சிறு குட்டைகள், நீர் தேக்கங்களை பறி கொடுத்து விட்டதால், பசுமை நம்மை விட்டு சென்று கொண்டே இருக்கிறது.

ஆனால் பாரீஸ் ஒப்பந்தம் ஏற்படுத்தியதில், குறிப்பிடத்தக்க பங்காற்றுதல் செய்த இந்தியா, கால நிலை தொழில்நுட்பத் துறையில், 2016 முதல் 2021 வரை டாலர் ஒரு பில்லியன் முதலீடுகள் செய்து இருக்கிறது.

இந்த முதலீடுகள் தனியார் துறை துவக்கிய திட்டங்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் தரப்பட்ட நிதி உதவிகளாகும். இதில், மிக அதிக முதலீடுகள் விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப உருவாக்குதல்களுக்கும், கரும்புகை குறைப்புக்கும் தான்.

கல்வியிலும் வேண்டும்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மோடியின் திட்ட வரைவு, சுற்றுப்புற சூழலுக்கும், சமுதாய மாற்றங்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது.

நம் நாட்டில் பாலைவனம், சதுப்பு நிலம், தரிசு பூமி, மலைகள், பசுமைக் காடுகள் என அனைத்து பிரதேசங்களும் கொண்ட பிரதேசமாக இருக்கிறது. நம்மை சுற்றி கடல் இருப்பதுடன் நம் நாடெங்கும் நீர் ஓட்டம் நிரம்பியே இருக்கிறது.

சோலார் மின் தயாரிப்பு பற்றிய புரிதல் துவங்கி விட்டாலும் ஆராய்ச்சிகளுக்கும் அடுத்த தலைமுறை திட்டங்களுக்கும் மேலும் உத்வேகம் தந்தாக வேண்டும். கல்வித் துறையிலும் இத்துறை பற்றிய பாடத் திட்டங்கள் மேலும் விரிவாக்கப்பட வேண்டும்.

உலக நாடுகள் மாற்று திட்டங்களுக்கு தயாராகி விட்டனர். அதை நடைமுறைப்படுத்துவதிலும் முன்னணியில் இருக்கிறார்கள், நாமும் பின்தங்கி விடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *