செய்திகள்

பருத்தி, நூல் விலை: நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரிடம் ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தல்

சென்னை, மே 19–

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19–ந் தேதி) ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்து, பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

முன்னதாக, முதலமைச்சர் கடந்த 19.1.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் நெசவாளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் கடுமையான நிலையினையும் விளக்கி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

மேலும், இந்தியப் பிரதமருக்கு 16.5.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய நிதித்துறை அமைச்சரை நேற்று (18–ந் தேதி) இது தொடர்பாக சந்தித்து, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரின் கடிதத்தை அளித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.