வெகு நாட்களுக்குப்பின் என் நண்பன் ரகு என்னை மொபைலில் தொடர்புகொண்டான்.
மூன்று வருடங்களுக்கு முன் டிராவல் ஏஜென்சியில் வேலை கிடைத்தபின் சுவீட் வாங்கிக்கொண்டு அவன் வீட்டிற்குச் சென்று நான் வேலையில் அமர்ந்த செய்தியைத் தெரிவித்தவுடன் அவன் அம்மா என்னை வாழ்த்தி அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட உடனே கேசரி செய்தது என் ஞாபகத்தில் வந்தது. அதற்குப்பின் புதிய வேலை யென்பதால் பயிற்சி, வேலைப்பளு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததால் நான் அவன் வீட்டிற்குப் போக முடியவில்லை.
கிராமத்தைவிட்டு நகரத்திற்குப் படிக்கவும் படித்து முடித்தவுடன் சின்னச் சின்ன வேலைகள் செய்து வந்த எனக்கு ரகுவைப்போல் நண்பன் ஒருவன் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பொழுது போவதற்கும் வயிறாரச் சாப்பிடுவதற்கும் ரகுவின் வீட்டிற்குப் போய்விடுவேன். அவன் அம்மாவின் சமையல் அவ்வளவு ருசி! என்னையும் தன் மகனைப்போல் பாவித்து விதவிதமாக உணவு வகைகளைச் சமைத்துப் பரிமாறுவார்கள். இது வாரத்தில் ஒரு நாள் என்பது வாடிக்கையானது!
என் நண்பனின் திருமணத்திற்குப் பின்னும் நான் வாரம் ஒருமுறை அங்கே சென்றுவருவது தொடர்ந்தது. இளம் தம்பதியினர் வார இறுதியில் விடுமுறையில் வெளியே போய்விடுவார்கள். அவர்களுக்காக ரகுவின் அம்மா சமைக்கும் புது வகையான உணவு, பலகாரங்கள், இரவுச் சாப்பாடு எல்லாவற்றையும் ஒரு கைப்பார்த்தவன் நான்.
நான் அங்கே சென்று வந்தது அவன் தன் மாமியார் வீட்டுக்குப் போய் வரவும் தங்கவும் அவனுக்கு வசதியாகயிருந்தது. அவன் இல்லாதபோது அவன் அம்மாவிற்குப் பாதுகாப்பாகவும் துணையாகவும் நான் இருப்பதை அவன் உணர்ந்தான். மொத்தத்தில் நான் சென்று வந்தது இளம் தம்பதியருக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். ஆனால் புதிய வேலை கிடைத்தபின் நான் அங்கே போய்வருவது நின்றுபோனது.
“டேய்… என்னடா சத்தத்தையே காணோம்!… நான் பேசுறது உனக்குக் கேட்குதா?” என்று அவன் என்னை உசுப்பிய பின்பே நான் அவன் அம்மாவைப்பற்றிய நினைவிலிருந்து மீண்டேன்.
என்னிடம் புவனேசுவரத்திலுள்ள நாகராஜ் கோயிலுக்குப் போக இரண்டு விமான டிக்கெட்டுகள் வேண்டுமென்று கேட்டான் என் நண்பன்.
“ஏண்டா… அம்மா வரலையா?” என்று நான் விசாரிக்க…
“அம்மாவுக்கு உடம்பு முடியல!” என்றான்.
அன்று மாலை டிக்கெட்டையும் எடுத்துக்கொண்டு அவன் அம்மாவையும் பார்த்துவர அவன் வீட்டிற்குக் கிளம்பினேன்.
அங்கே நண்பன்தான் என்னை வரவேற்றான். அவன் மனைவி கோயிலுக்குப் போயிருந்தாள்.
அவன் அம்மா மெலிந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளித்தார்கள்!
“என்னம்மா… இப்படி மெலிஞ்சிட்டீங்களே… என்ன உடம்புக்கு?” என்று நான் கேட்க…. ‘வெறும் அரிசிக்கஞ்சிதான் அம்மாவின் உணவு. வேறு ஒன்றும் அம்மாவுக்கு ஒத்துக்கொள்ளவில்லை!’ என்றான் என் நண்பன்.
“டேய்…இந்த வயசில் அம்மாவால் நிறையச் சாப்பிட முடியாது! சத்துள்ள முட்டை, பால், ஃபுரூட் ஜூஸ் வாங்கிக் கொடுடா!” என்றேன் நான்.
அப்போது அவன் மனைவி கோயிலிலிருந்து திரும்பி வந்தாள்.
“இந்தாங்க… அண்ணா!” என்று பிரசாதம் விபூதி இரண்டையும் என்னிடம் நீட்டினாள்.
“என்னம்மா விசேஷம்?” என்று கேட்டேன்.
“எனக்கு நாக தோஷம் இருக்குதண்ணா! ஒன்றரை வருஷத்திற்கு வாரம் தவறாமல் புற்றுக்கோயில்களுக்குப் போய் முட்டை, பால், பழம் வச்சி, பொங்கலிட்டு நாகபூஜை பாம்புக்குப் பண்ணணுமாம்!” என்றாள்.
என் கண்களுக்கு என் நண்பனின் அம்மா பரிதாபமாகத் தோன்றினார்கள்!