சிறுகதை

பரிதவிப்பு | ராஜா செல்லமுத்து

நடுச்சாம வேளையில் மியாவ்.. மியாவ்.. மியாவ் என்ற பூனையின் அழுகுரல் மித்திரனை ரொம்பவே உறுத்தியது.

என்ன இது என்னைக்குமில்லாம இப்பிடி ஏன் கத்திட்டு இருக்கு என்ற சந்தேகக் கண்ணோடு யோசித்தபடியே அடைத்திருந்த வீட்டைப் பட்டெனத் திறந்து வெளியே வந்து பார்த்தான் மித்திரன்.

சுவற்றில் ஏறி நின்ற பூனை எங்கேயோ பார்த்தபடியே கத்திக் கொண்டும் ‘சிறிது தூரம் ஓடியும் பின் அதே இடத்திற்கு வந்தும் ஒரு இடத்தில் நிலையாக நில்லாமல் கத்திக் கொண்டே இருந்தது,

என்னாச்சு இந்தப் பூனைக்கு? ஏன் இப்படி கத்திட்டு இருக்கு. அதில வேற இந்தப் பூன – குட்டி போட்ட பூன வேற …. குட்டிககிட்ட போகாம ஏன் கந்தணும்? குழப்பம் கோடி கோடியாய்க் கொட்ட மித்திரனுக்குத் தூக்கமே வரவில்லை. அதன் கத்தும் குரல், ஒரு குழந்தையைப் போல் இருக்கவே அதன் பாவப்பட்ட குரல் அவனை என்னவோ செய்தது .

என்ன பூன ஏன் இப்பிடி கத்துற ; போய் படு, போ, போய் படு மித்திரன் உரக்கச் சொல்லியும் ம்ஹு கும், அது செவிசாய்க்கவே இல்லை. கத்திக் கொண்டே இருந்தது. என்னாச்சு இந்த பூச்சக்குட்டிக்கு ஏன் இப்பிடி கத்திட்டு இருக்கு.. மனம் முழுவதும் அதன் குழந்தை குரல் ஓலம் உயிரெல்லாம் பரவத் தூங்காமல் உட்கார்ந்தே இருந்தான்.இன்னைக்கு நம்மள தூங்கவிடாது போல, என்று நினைத்த மித்ரன்திறந்த கதவைத் தாழிட்டுத் தூங்கத் தயாரானான்.அவன் செவிகளில் அந்தப் பூனையின் அழுகுரல் அடங்கிய பாடில்லை.. காதைப் பொத்திக் கொண்டு, அப்படியும் இப்படியும் புரண்டு புரண்டு படுத்தான்.அவனால் தூங்கவே முடியவில்லை . எப்படித் தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. விடியற்காலை கதவு தட்டும் சத்தம் கேட்ட கண்விழித்தான்.. அப்போதுதான் தெரிந்தது, என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்கிட்டோம் … இந்தப் பூன பண்ணுன வேல ராத்திரியெல்லாம் நம்ம முழிக்க வச்சிருச்சு என்றபடியே கதவு திறந்தான் மித்திரன்.வெளியே பக்கத்து வீட்டு பிரின்ஸ் ஏதோ சேதி சொல்வது போலவே நின்றிருந்தான்,என்ன பிரின்ஸ்மித்ரன் ,உங்களுக்கு விசயம் தெரியுமா? சொல்லுங்க மித்ரன்’ கொஞ்ச நாளைக்கு முன்னாடி குட்டி போட்டுருந்திச்சில்ல, ஒரு பூன….

ஆமா..

அதோட குட்டிய பக்கத்து வீட்டுக்காரங்க தூக்கித் தூரப் போட்டுட்டாங்க.

என்ன சொல்றீங்க?

ஆமா மித்ரன்.

ஓ அதான் ராத்திரியெல்லாம் கத்திட்டு இருந்துச்சா? என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே மியாவ்.. மியாவ்… மியாவ் என்று குட்டியைப் பறி கொடுத்த பூனை கத்தியது

-ஆமா பிரின்ஸ் , அதோட கத்துற தொனியே எனக்கு என்னமோ மாதிரி இருந்துச்சு. இப்பத்தான புரியுது அதோட முழு வலி என்னன்னு ? என்று இருவரும் பேசிக் கொண்டே அந்தக் குட்டியைப் பறிகொடுத்த பூனையைப் பார்க்க அது கண்களை உருளத் திரட்டி மியாவ்.. மியாவ்…. மியாவ் எனக் கத்தியபடியே இருந்தது – அதன் கண்களில் தன் குட்டிகளைப் பறிகொடுத்த பரிதவிப்பும் ஏக்கமும் இருந்தது. ஏன் பிரின்ஸ் இவங்கெல்லாம் பொம்பளைங்க தானா? அந்த பச்சக் குட்டிகள கீழ தூக்கிப் போட இவங்களுக்கு எப்பிடி மனசு வந்துச்சு.. இவங்களும் புள்ள பெத்தவங்க தானே ஒரு தாயோட வலி இன்னொரு தாய்க்கு தெரியும்ங்குறது மாதிரி இந்தப் பூனையோட வலி, இந்த பொம்பளைங்களுக்கு தெரியாதா? மனுச உணர்வு வேற. மத்த உசுருகளோட உணர்வு வேறயா? தாய்மைங்கிறது, எல்லாருக்குமே ஒண்ணுதான . பெத்த குட்டிகள பறி குடுத்திட்டு அது முழிக்கிற முழியும் கத்துற கத்தலும்’ அந்தக் குட்டிகள தூக்கிப் போட்ட பொம்பளைங்களுக்கு தெரியலையா?

அது என்ன பாஷயில பேசுனாலும் அம்மா, அம்மா தானே, குட்டிகளுக்கு பால் குடுக்காத அதோட ஒடம்பு என்ன பாடுபடும். அதோட மனசு எதப் பத்தி சிந்திக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது

மியாவ், மியாவ், மியாவ் எனப் பாவமாய்க் கத்திய பூனையைப் பார்த்து பொல பொலவெனக் கண்ணீர் விட்டான், மித்ரன்.

ஏய்..மித்ரா .. என்னாச்சு ?

ஒண்ணும்ல. என்று அவன் மனதில் கனத்துக் கிடந்த அந்தக் குட்டிகளைப் பறி குடுத்த பூனையை நினைத்து அழுது புலம்பினான்.

இது எதுவும் தெரியாமல், கொஞ்சங்கூட பாவ உணர்ச்சியே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்தனர் குட்டியைத் தூக்கிக் கீழே போட்ட பெண்கள்.

சரி விடு மித்திரன்.

அவங்க அவங்க செஞ்ச தப்ப அவங்கவங்க அனுபவிப்பாங்க என்று சொல்லிச் சென்றான் பிரின்ஸ்

அந்தப் பூனையின் நினைவு தாளாமல் நடந்த எல்லா விசயங்களையும் ஒரு நண்பரிடம் சொல்லிப் புலம்பினான் மித்ரன்,இது அத்தனையும் கேட்டுச் சிரித்த நண்பர்,

என்ன மித்ரன், அவனவன் மனுசனுகளையே மதிக்க மாட்டேன்கிறாங்க. நீங்க வெறும் பூனைக்குப் போயி இப்பிடிப் பேசிட்டு இருக்கீங்களே என்று அவர் சொன்னபோது,

என்ன இது? இங்க மனுச உசுரு மட்டும் தான் ஒசத்தியா? வேற ஜீவராசிகள் உசுரு ஒன்னும் இல்லையா? ஏன் இந்த மனுசங்க இப்படி இருக்காங்க.

ஓ, இப்ப புரியுது,

இந்த பூமி அவங்களுக்கு மட்டும் தான் சொந்த முன்னு நெனச்சிட்டு இருக்காங்க போல என்று சிந்தித்த மித்திரன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *