சிறுகதை

பரிசோதனை | ராஜா செல்லமுத்து

கொரானா நோயின் அறிகுறிகளை அறிந்து கொள்வதற்காக பாரதிதாசன் தெருவில் பரிசோதனைக் கூடத்தை அமைத்திருந்தது அரசாங்கம்.

அந்த வழியாக போகிறவர்கள் வருகிறவர்கள் அத்தனைபேரையும் வழிமறித்து சோதனை செய்து கொண்டு இருந்தார்கள். சிலர் இந்த சோதனைக்கு பயந்து அடுத்த தெரு வழியாக போய்க் கொண்டிருந்தார்கள்.

வழக்கமாக பாரதிதாசன் தெருவிலேயே போகும் ஒருவர் இன்னொரு வழியே போய்க் கொண்டிருந்தார்.

என்ன பிரதர் எப்போதுமே பாரதிதாசன் தெரு வழியாக போவீங்க. ஏன் இன்னைக்கு இந்த தெருவழியே வரீங்க என்று அந்த தெருவில் வசிப்பவர் கேட்டபோது அங்க கொரோனா பரிசோதனை செஞ்சுகிட்டு இருக்காங்க. அதான் பயந்துட்டு வந்து விட்டேன் என்றார் அந்த நபர்.

ஏன் பயப்படணும்? பரிசோதனை செய்ய வேண்டியது தானே. பரிசோதனை செஞ்சா நல்லதுதானே என்று அவர் சொல்ல.

இல்லைங்க எனக்கு பரிசோதனை அது இதெல்லாம் பிடிக்காது. சும்மா இருக்கிற உடம்ப கெடுத்துடுவாங்க . அதைத்தாண்டி பரிசோதனைனா எனக்கு பயம் . ஏதாவது சொல்லிட்டா என் மனசு ரொம்ப குழப்பம் ஆயிடும். அதனாலதான் நான் எந்த பரிசோதனையும் எடுக்கிறது இல்ல என்று பயந்து கொண்டே அந்த வழியாக சென்றார் அந்த நபர்.

பாரதிதாசன் காலனியில் நடந்து போகிறவர்களை சோதனை செய்து கொண்டு, அவர்களுக்கு கபசுர நீர், ஊட்ட சத்து மாத்திரைகளை கொடுத்துக்கொண்டிருந்தது மருத்துவர் குழு.

டாக்டர் நான் இப்ப தான் சாப்பிட்டேன் கபசுர நீர் குடிக்கலாமா? என்று ஒருவர் கேட்டார்.

தப்புல்ல தாராளமா குடிக்கலாம் என்ற டாக்டர் கப சுர நீர் கொடுத்தார் . நீங்க மாஸ்க் போடாமல் வெளியில் போறீங்களா? மாஸ்க் போடுங்க சோசியல் டிஸ்டன்ஸ் பண்றீங்களா? வீட்டுக்குப் போனதும் அடிக்கடி கை கழுவுங்கள் . சமூக இடைவெளி விடுங்கள் என்று அங்கு போகிறவர்கள் வருகிறவர்கள் அத்தனை பேர்களிடமும் உபதேசம் செய்து கொண்டிருந்தது மருத்துவர் குழு.

பரிசோதனை செய்தபிறகு அறிகுறி இருப்பவர்களை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து கொண்டிருந்தார்கள் அறிகுறி இல்லாதவர்களுக்கு கபசுர நீர் ஊட்ட சத்து மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார்கள்.

அப்போது ஒரு பெண்மணி தன் இரண்டு குழந்தைகளுடன் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அவளை பரிசோதனை செய்த மருத்துவர் அவளுக்கு நோய் இல்லை என்று அவரை ஒதுக்கினார். மற்ற அவளின் இரண்டு குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்து அந்த குழந்தைகளுக்கும் நோய் இல்லை என்று உறுதி செய்தது அந்த மருத்துவர் குழு.

இவங்களுக்கு கபசுர நீர், ஊட்ட சத்து மாத்திரை கொடுங்க குடிச்சிட்டு போகட்டும் இவங்களுக்கு நோய் ஏதும் இல்லை என்று அந்த டாக்டர் சொன்னார்.

அதிர்ந்து போன அந்தப் பெண்மணி,

ஐயா எங்களுக்கு நோய் இருக்குன்னு சொல்லுங்க என்று அந்தப் பெண்மணி சொன்னபோது

ஏமா எல்லாரும் நோய் இல்லன்னு சொன்னா சந்தோஷப்படுவார்கள். நீங்க என்னன்னா நோய் இருக்கணும்னு சொல்றீங்க ? நோய் இல்லம்மா ரொம்ப நல்லா இருக்கீங்க . நீங்களும் உங்கள் குழந்தைகளும் நீங்க போகலாம் என்று டாக்டர் சொன்னார்.

ஐயா நோய் இருக்குன்னு சொல்லுங்க ஐயா. அதுதான் எங்களுக்கு நல்லது என்றாள், அந்த பெண். அவளின் அந்த பதில் அங்கு இருப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்னம்மா வித்தியாசமா சொல்ற. நோய் இல்லன்னா தான் எல்லாரும் சந்தோஷப்படுவாங்க. நோய் இருக்குன்னா சந்தோசப்படுவேன் சொல்றீங்களே? எப்படி என்று கேட்டபோது

ஐயா நோய் இருக்குன்னா ஆஸ்பத்திரியில நல்ல சாப்பாடு தராங்களாம். நேரா நேரத்துக்கு ஊட்டச்சத்து உணவுகள் எல்லாம் கொடுக்கிறார்களாம் . வேலை வெட்டி எதுவும் இல்லையா. இந்த காலத்தில் உயிர் போக இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. அங்க போனா என் குழந்தைங்க நல்லபடியா சாப்பிடும். நல்ல ஊட்டச்சத்து உணவு தராங்களாம். தயவு செஞ்சு எங்களுக்கு நோய் இருக்குன்னு சொல்லுங்க. நாங்க போயி ஆஸ்பத்திரில படுத்துட்டு நல்ல சாப்பாடு சாப்பிடுவோம். இங்க இருந்தா நாங்க செத்துருவோம். தயவு செஞ்சு எங்களுக்கு நோய் இருக்குன்னு எழுதிக் கொடுங்க என்று அந்தப் பெண்மணி அங்கே கத்தியது,

அங்கு இருப்பவர்களின் மனதை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *