சிறுகதை

பரிசு | ராஜா செல்லமுத்து

முதலிரண்டு ரெட்டைக் குழந்தைகளும் பெண் பிள்ளைகளாய்ப் போனதால் பெருத்த வருத்தம் சிவக்குமாருக்கு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமலேயே இருந்தான் . மனைவி சுதா சுணங்கிக் கிடந்தால் கூட அவளைச் சுறு சுறுப்பாக்கிவிடுவான் சிவக்குமார் .
‘‘என்ன இப்பிடி ஒக்காந்திருக்க பெறந்தது ரெண்டும் பொம்பளைப் பிள்ளைன்னா இருக்கட்டும் சுதா….லட்சுமி ஒண்ணு; சரஸ்வதி ஒண்ணு; ரெண்டும் ரெண்டு கண்ணு மாதிரின்னு நினைச்சுக்குவமே’’ என்று சோகமாய் இருக்கும் சுதாவை சிரிப்பூட்டத்தயங்க மாட்டான் சிவக்குமார்.
‘‘ ரெண்டும் ரெட்டக் குழந்தைங்க . அதில ஒண்ணாவது ஆம்பளைப் பிள்ளையா இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமோ…?
‘‘என்ன பண்ண கடவுள் குடுத்தது அவ்வளவு தான்னு நெனச்சிட்டு போவமே. அடுத்து என்ன நடக்குதுன்னு பாப்போமே’’ என்று கொஞ்சங் கூட தொய்வில்லாமலே சொல்லிக்கொண்டிருந்தான் சிவக்குமார்.
இரண்டு கைகளிலும் இரண்டு குழந்தைத் தளிர்களை ஏந்தி இரண்டு மார்பகங்களிலும் பாலூட்டிக்கோண்டிருந்தாள் சுதா. சின்னப்பூக்களை போல பிள்ளைகளை கையில் ஏந்திக்கொண்டு உச்சி மோந்து கொண்டிருந்தாள் சுதா.
பொசுக்.. பொசுக்.. என்று தன்சின்ன இமைகளைத் திறந்து திறந்து மூடிக்கோண்டிருந்தன குழந்தைகள். அதன் மென்பிஞ்சுத் தலைகளை ரொம்பவே மெதுவாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள் சுதா
‘‘சரி.. சுதா இப்ப வேணும்னா நமக்கு பெண் குழந்தைகளை கடவுள் குடுத்திருக்கலாம். ஆனா அடுத்த வருசம் கண்டிப்பா நமக்கு ஆம்பாப்பிள்ளை தான்’’ என்று அடித்துச் சொன்னான் சிவக்குமார். அவன் சொல்லும் போதே
சுதாவுக்குள் நம்பிக்கை வேர் விட்டு முளைத்திருந்தது.
மனைவிக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொன்ன சிவக்குமார் வெளியே சென்றான். இருக்கும் சொத்துக்கு வாரிசு இல்லையே என வருத்தப்பட்டாள் சுதா. இருந்தும் தான் மலடி இல்லை என்பதை நிரூபிக்கப் பிறந்த காட்சிகளே தன் குழந்தைகள் என்று பெருமிதப்பட்டுக் கொண்டாள்.
அவளின் அடுத்தஅடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு நொடி நேரமும் ஆண் வாரிசைப்பற்றியே ஆலோசனை செய்தது. இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை விட பிறக்கும் குழந்தையின் மீதே பிரியம் வைத்திருந்தாள். வரும் பொழுதுகளில் அவளின் எதிர்பார்ப்பு எகிறி நின்றதும் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொடுக்கும் அன்பை விட இனி பிறக்கப்போகும் உயிருக்கே முக்கியத்துவம் கொடுத்தாள் சுதா.
அவளின் தொட்டில் இரவுகள் ஆண் குழந்தையாகவே இருக்க வேண்டுமென ஆனந்தம் கொண்டாள். வரும் இரவுகள் அவளுக்கு வசந்தத்ததையே வாரித்தந்தது. பிறந்த குழந்தைகள் வளர ஆரம்பித்தன. மடியில் கிடந்தவரிகள் தரையில் தவழ ஆரம்பித்தனர். பால் மணம் வீசும் பிஞ்சுகளின் வாயில் எச்சில் கசிய ஆரம்பித்தது.
வளரும் குழந்தைகளின் கவனிப்பைக் கண்ட சுதா வயிற்றில் இன்னொரு கரு உருவானது. வயிற்றை ஆசையாய்த் தடவிப் பார்த்தாள். இது உருவான இடத்தை வாஞ்சையோடு தொட்டுப் பார்த்தாள். அவளின் ஆசை இன்னும் இரண்டு மடங்கு கூடியது
‘‘ சுதா வருத்தமே படாதே அடுத்துப் பொறக்கப் போற குழந்தை கண்டிப்பா ஆம்பள பிள்ளை தான் . நீ எ்ப்பவும் கேட்டுட்டே இருப்பியே அது தான். உன்னோட வயித்தில உருவாகியிருக்கு. உன்னோட நீண்ட நாள் கனவு ஆசை எல்லாமே இப்போ நிறைவேறப்போகுது ’’என்று சுதாவிடம் அன்பு பாராட்டினர். உறவினர்கள் சுற்றியிருப்பவர்களும் சுற்றத்தாரும் பேசிப்பேசியே சுதாவின் இதயத்தில் இன்பத்தின் மடங்கு இரட்டிப்பானது. வயிறும் கருவும் வளர வளர அவளின் சந்தோசத்தின் எல்லை நீண்டது. அவளின் ஆசைகள் வானை விட்டு வெளியே சென்று வட்டமடித்தது
உருளும் கருவை ஒருமுறைக்கு மூன்று முறைக்கு மேல் தடவிக்கொண்டே இருந்தாள். அவளின் ஆண் குழந்தையின் ஆசை அடங்கிய பாடில்லை. பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயரைக் கூட தெரிவு
செய்தாள் .
என்ன சுதா ஆம்பளைப் புள்ளைக்கு பேர் கூட செலக்ட் பண்ணிட்ட போல. உறவினர் ஒருவர் சொன்ன போது அவனிள் ஒருவர் சொன்ன போது அவளின் உற்சாகத்தின் ஊற்று இன்னும் பல மடங்கு கூடியது. ஒன்று இரண்டு மூன்று என சுதாவின் பேருகால மாதமும் சரியாக வந்து சேர்ந்தது. அன்று இரவு அவளின் பேருகால இரவு அந்த இரவு அவளுக்குள் ரொம்பவே ஆனந்தம் ஆர்ப்பரித்தது.
அரவு 12.04 நிமிடம் என்று குறிக்கப்பட்டது அவளின் குழந்தைப் பிறந்த நிமிடங்கள் அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் ரொம்பவே எதிர்பார்ப்பாக இருந்தது.
நொடிகள் பட்.. பட்.. எனக் கரைந்து கொண்டிருந்தன 12.00 12.01 12.02 12.03 12.04 என்று வந்த போது
குவா… சத்தம் சுதாவின் அறையிலிருந்து கேட்டது. ஆனந்தத்தின் உச்சிக்கே போயினர் குடும்பத்தினர். அப்படிக்கேட்ட குவாச் சத்தம் ஆணின் குரலாக அல்லாமல் பெண்ணின் குரலாய்ப் பிரதிபலித்தது. எத்தனையோ எதிர்பார்ப்புகளை நோக்கியிருந்த சுதாவின் குடும்பத்தினர் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்து கோபத்தைக் குறைத்து ஆனந்தச் சிரிப்புச் சிரித்தனர்
அட விடும்மா. முன்னால பெறந்தது லட்சுமி, சரஸ்வதி. இப்ப இத சக்தின்னு நினைச்சுங்குங்க. குழந்தை பாக்கியமங்கிறது கடவுள் குடுக்கிறது. நம்ம கையில எதுவும் இல்லை என்று ஒருத்தி சொன்ன போது
குவா… குவா என பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தது அந்தப்பெண் குழந்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *