…
அந்த அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அந்த விழா எதற்காக நடத்து
கிறார்கள்? அந்தப் பரிசு யாருக்குத் தருகிறார்கள்? எந்தத் துறையில் எந்த வேலையில் ஒருவர் எதில் சிறந்து விளங்குகிறார்? என்பதைப் பார்த்துத் தான் பரிசு வழங்கும் விவரம் இருந்தது. யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எப்படி வேலை செய்கிறார்கள்? என்பதெல்லாம் அந்த அலுவலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கும் .
ஆனால் அது அவர்களுக்கு தெரியாது. திடீரென்று ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு விஷயத்தில் சிறந்து விளங்கும் நபர்களைப் பார்த்து அந்தப் பரிசு வழங்குவது வழக்கம். இதுதான். இதற்குத்தான் பரிசு வழங்குகிறார்கள்? என்பது அங்கு இருக்கும் யாருக்கும் தெரியாது. அந்த நிறுவன முதலாளி அத்தனையும் ரகசியமாகவே பாதுகாத்து வைத்திருப்பார். அது போலவே இந்த ஆண்டும் அந்த பரிசளிப்பு விழா நடைபெறப்போகிறது என்று நினைத்து அலுவலக ஊழியர்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எந்தத் துறையில் எதற்காக பரிசு வழங்கப் போகிறார்கள் ? அதில் நம் பெயர் வருமா? நாம் என்ன செய்தோம்? என்று ஆவலாக ஒவ்வொரு ஊழியர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நாள் மாலை அந்தப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்று தெரிந்து அத்தனை ஊழியர்களும் அலுவலகத்தின் அரங்கில் கூடினார்கள் .
” தான் கணக்கு வழக்குகளில் புலி ஒரு பைசா கூட அலுவலகத்திற்கு நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன் .எனக்குத்தான் இந்த பரிசு கிடைக்கப் போகிறது என்று அருகில் இருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார் அந்த நிறுவன கணக்காளர்
” நான் இந்த நிறுவனத்திற்கு தினமும் காலை சீக்கிரமே வந்து விடுவேன். ஒரு நாள் கூட நான் தாமதமாக வந்ததில்லை. ஒருவேளை எனக்கு பரிசு கிடைக்குமோ? என்று இன்னொருவர் சொல்லிக் கொண்டிருந்தார் .
“நான் அதிகம் அலுவலக நேரங்களில் பேசுவதில்லை. செல்போனில் கூட பேசுவது மிகவும் அரிது. ஒருவேளை என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? என்று அவரும் தன்னை மெச்சி கொண்டார்.
” நான் அலுவலக நேரத்தில் ஒரு நொடி கூட நான் வெளியே செல்ல மாட்டேன். ஒருவேளை எனக்குத்தான் அந்தப் பரிசு கிடைக்குமோ? என்று இன்னொருவர் பேசிக்கொண்டார்.
இப்படியாக அவரவர்கள் செய்து கொண்டிருக்கும் வேளையின் சிறப்பைச் சொல்லி ‘‘ பரிசு நமக்குத் தான் கிடைக்கும்’’ என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.
நிறுவன முதலாளி உள்ளே வந்தார். அவர் வந்ததும் அத்தனை ஊழியர்களும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். எல்லாரும் வணக்கம் என்று அவர் சொன்னதும் அத்தனை பேரும் அமர்ந்தார்கள் .
“சாப்டீங்களா? என்று முதலாளி கேட்க
“சாப்பிட்டோம்” என்று எல்லோரும் ஒரு குரலில் அமாேதித்தார்கள்.
‘‘வருஷா வருஷம் நம்ம அலுவலகத்தில ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கறவங்களுக்கு பரிசு கொடுக்கிறது வழக்கமா வச்சிருக்கோம். அது மாதிரி இந்த வருஷமும் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்; யாருக்கு பரிசு கொடுக்கப் போறே போறோம்னு நிறைய கேள்விகள் உங்களுக்கு இருக்கும். நீங்க செய்ற வேலையப் பாத்துத் தான் பரிசு தரப் பாேறாேம் ” என்று முதலாளி சொல்ல
தங்களுக்கு தாங்களே பெருமை படுத்திக் கொண்டு தனக்குத்தான் பரிசு வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள், அலுவலக ஊழியர்கள்
அப்போது எல்லோரையும் ஒருசேரப் பார்த்த நிறுவன முதலாளி தூரத்தில் அமர்ந்திருந்த சுப்பையாவை கூப்பிட்டார். சுப்பையா லேசாக கால் ஊனமுற்றவர். தாங்கித் தாங்கி நடந்து வந்தார் .
” இவர் என்ன வேலை செஞ்சாரு?இவர எதுக்கு கூப்பிடறாரு ?” என்று எல்லோருக்கும் ஒரு கேள்வியாக இருந்தது . மேடைக்கு அழைத்த முதலாளி சுப்பையாவின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
சால்வையும் கேடயத்தையும் பணமுடிப்பையும் எடுத்து அவளின் கையில் கொடுத்தார். இதைப் பார்த்த அத்தனை ஊழியர்களுக்கும் ஒரே ஆச்சரியம்.
” என்ன இது? சுப்பையா என்ன வேலை செஞ்சாரு? அவரு ஒரு கடைநிலை ஊழியர் தானே? அவருக்கு எதுக்கு இந்தப் பரிசு என்று எல்லோரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
” சுப்பையாவுக்கு எதுக்கு பரிசு கொடுக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் வியப்பா இருக்கும்? இவர் கடை நிலை ஊழியர் தான். அவருக்கு சுகர் இல்ல. பிரஷர் இல்ல. நல்லா இருக்கார். இங்க இருக்கிற நெறயப் பேருக்கு சுகர் பிரஷர் இருக்கு . சுப்பையாவுக்கு வயசு எழுபத்தி அஞ்சு. அவர் உடம்புல சுகர் இல்ல. பிரஷர் இல்ல. அதுக்கு காரணம் அவர் அலுவலகத்தில இருக்கிற லிப்ட்ட பயன்படுத்துறதே இல்ல. அதுக்காக நீங்க யாரும் லிப்ட்ட பயன்படுத்தாதிங்கன்னு சொல்லல.லிப்ட்ட பயன்படுத்தாம இருந்தா நாமளும் சுப்பையா மாதிரி இருக்கலாம். எனக்கே சுகர் இருக்கு. நானும் சுப்பையாவ பின்பற்றப் பாேறேன். அதுனால சுப்பையாவுக்கு தான் இந்த ஆண்டுக்கான பரிசு “
என்று அறிவித்து பரிசு, பண முடிப்பு அத்தனையும் கொடுத்தார் முதலாளி
” அடப்பாவி இது தெரியாம போச்சே. நாம ஒரு நாளைக்கு இருபது தடவைக்கு மேல லிப்ட்ல ஏறி ஏறி இறங்குவோமே? என்று நினைத்தார்கள் சில ஊழியர்கள் .
” சரி அடுத்த வருஷம் இதே நாள் எந்த துறைக்காக பரிசு தரப் போறதுன்னு காத்துக்கிட்டு இருங்க. அவங்க அவங்க வேலையை சரியா செய்யுங்க “
என்று கட்டளை இட்டுச் சென்றார் நிறுவன முதலாளி. ஊழியர்களுக்குள் குழப்பம் மேலோங்கியது.