உயர்ந்து வளர்ந்த அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அது அந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவைப் போலவே இருக்கும்.வருடம் முழுவதும் ஓடியாடி வேலை செய்த ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அந்த விழாவில் நிறுவனத்தில் திறமையாகப் பணிபுரிபவர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள். வெளியில் இருந்து நிறுவனத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் என்று அத்தனை பேரையும் தேர்வு செய்து பரிசளிப்பு விழா நடத்துவார்கள்.
அந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தி. ஒரு செயல் . ஒவ்வொருவரும் ஒரு படிப்பு என்று இருந்ததால் அவர்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசு கொடுக்க முடியாத நிலையில் சில சிக்கல்கள் இருந்தன. ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் ஒரே ஒருவரை மட்டும் தான் தேர்ந்தெடுத்துப் பரிசு கொடுக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.
அதன்படி இந்த ஆண்டு யாருக்குப் பரிசு தரப் போகிறார்கள்? முதலாளிக்கு அடுத்தபடியாக இருக்கும் மேல் அதிகாரிகளுக்கா ? இல்லை துணை மேலாளருக்கா ? அல்லது கணக்காளருக்கா ? இல்லை அந்த நிறுவனமே கதி என்று கிடக்கும் உண்மையான ஊழியர்களுக்கா ? என்று ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது .
நிறுவனத்தில் அன்று பரிசளிப்பு விழா ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. அன்று முழுவதும் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டது. ஓடிக்கொண்டிருந்த இயந்திரங்கள் எல்லாம் அமைதியாக இருந்தன. ஓடிக் கொண்டிருந்த கார்களெல்லாம் அப்படியே நின்று கொண்டிருந்தன.
” இன்னைக்கு யாருக்கு பரிசு தரப் போறாங்கன்னு தெரியல? ஒரு லட்ச ரூபா பரிசுப் பட்டயம். நிறுவனத்துக்கு வெளியில இருந்து பிரபலமான ஒருத்தர் இன்னைக்கு வராங்க. அது யாருன்னு தெரியலையே? என்று நிறுவனத்தில் இந்த ஊழியர்கள் எல்லாம் பேசிக் கொண்டார்கள்
” நூறு வருசத்துக்கு மேல இயங்கிக்கிட்டு வர்ற இந்த நிறுவனத்தில நான் மட்டும் தான் இங்க நிறைய வருசம் வேல பாத்திட்டு இருக்கேன். ஒருவேளை எனக்கு அந்தப் பரிசு கொடுப்பாங்களோ?” என்று நிறுவனத்தின் மூத்த ஊழியர் சொன்னார்.
” இருக்கலாம். உங்களைத் தேர்ந்தெடுத்து உஙகளுக்குப் பரிசு கொடுக்கலாம்” என்று அவருக்குச் சாதமாகச் சிலர் பேசினார்கள்.
“ஒருவேளை அவருக்கு இந்த வருசம் பரிசு கொடுப்பாங்களா? ” என்று அந்த நிறுவனத்தில் ஆடிட்டராக இருக்கும் ஒருவரைச் சொன்னார்கள்.
” ம்…. ஆமா…அவருக்கு கொடுத்தாலும் கொடுக்கலாம்” என்று நிறுவன ஊழியர்கள் பேசினார்கள்.
“நான் நிறுவனத்தில வேலை செய்யும் போது, ஒரு நாள் கூட, அலுவலக நேரத்தில் ஒரு போன் கால் கூட பேசுனதில்ல”
என்று ஒருவர் சொல்ல
” ம்… இவருக்கும் வாய்ப்பு இருக்கு ” என்றனர்.
” நான், ஒரு நாள் கூட லீவு எடுக்கல ” என்று ஒருவர் சொல்ல
“நான் எல்லார்கிட்டயும் சாதாரணமா சகஜமா பழகுவேன்” என்று ஒருவர் சொல்ல
” நான் இங்க வேல செய்ற ஊழியர்கள என்னோட சகோதரர்களாவே பாப்பேன் “எல்லார்கிட்டயும் அன்பா பழகுவேன் ” என்று ஒருவர் சொல்ல ” ஓ… இவருக்கு ஏதும் கொடுப்பாங்களா ? என்றும் பேசிக் கொண்டார்கள்.
” இதெல்லாம் சரி.. பரிசும் பட்டயமும் யாருக்குத் தர போறாங்க அப்படிங்கறது கடவுளுக்கு தான் வெளிச்சம்?” என்று பேசிக் கொண்டனர் நிறுவன ஊழியர்கள்.
மாலை விழா ஆரம்பமானது. தமக்குத்தான் பரிசு என்று சிலர் கங்கணம் கட்டி அமர்ந்திருந்தார்கள்.
” இவருக்குத் தான் இந்த முறை பரிசு தருவார்கள்”
என்று சில பெயரை ஊர்ஜிதம் சொன்னார்கள். இப்படியாக அவரவர்கள் கணக்குப்படி யாருக்கு பரிசு தரப் போகிறார்கள்? என்று விழா நடக்கும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள். முதலாளி முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அத்தனை பேரும் விழா நடக்கும் இடத்திற்கு வரத் தொடங்கினார்கள்.
சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது இசை பாடல் வந்தவர்களை வரவேற்றுப் பூச்செண்டு கொடுத்து, பன்னீர் தெளித்து வரவேற்றுக் கொண்டிருந்தார்கள், அலங்காரப் பெண்கள். அறுசுவை உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அத்தர் வாசம் திசை முழுவதும் பரவி இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் விழா களைகட்டி விடும் .ஒரு லட்ச ரூபாய் பணம் , பட்டயம் யாருக்கு கிடைக்கப் போகிறதாே ?முதலாளிக்கு தான் வெளிச்சம் என்று படபடத்துப் போயிருந்தார்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் .
அன்று சிறப்பு விருந்தினராக ஒரு பெரிய தொழிலதிபர் வரவழைக்கப்பட்டார். மேடை பரபரப்பானது. நிறுவனத்தின் முதலாளி மேடையில் ஏறி வந்தவர்களை வரவேற்று நிறுவனத்தின் செயல்பாடுகள். நிறுவன ஊழியர்களின் நடத்தைகள். நிறுவனம் இப்போது எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது? என்பதைப் பற்றி எல்லாம் விளக்கமாய் ஒப்பித்துக் கொண்டிருந்தார் நிறுவனத்தின் முதலாளி.
” சரி இந்த வருசம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யாருன்னு உங்களுக்கு எல்லாம் ஆர்வமா இருக்கும். இப்ப நான் அந்தப் பெயரச் சொல்லப் போறேன்” என்று பரிசுப் பெயரை அறிவிக்க சற்று தாமதித்தார் முதலாளி. கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது.
” இந்த நிறுவனத்தைக் கட்டிக் காக்கிற மேலாளருக்கு வணக்கம். ஒரு பைசா கூட வெளிய போகாம பாத்துக்கற ஆடிட்டருக்கு வணக்கம். இந்த நிறுவனத்தில வேலை செய்த இவ்வளவு வருசமும் ஒரு நாள் கூட லீவ் போடாத ஊழியருக்கு வணக்கம். பணியில இருக்கும் போது , பணிய விட்டுட்டு ஒரு தடவை கூட செல்போன்ல பேசாத அந்த ஊழியருக்கும் வணக்கம். இங்க இருக்கிற எல்லார்கிட்டயும் இணக்கமாக பழகுற அந்த நல்ல மனுஷனுக்கு வணக்கம் .இப்படி எல்லாருக்கும் வணக்கமும் வாழ்த்தும் சொல்லிக்கிறேன்.
முதலாளி பேசுவதை எல்லாேரும் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ” இவ்வளவு தகுதியாேட தான் எல்லாரும் இருக்கிங்க .ஆனா விருதுன்னு வரும்போது, தன்னை மறந்து சேவையா செய்ற மனுசங்களுக்குத் தான் விருது குடுக்கணும். இதுக்கு முன்னாடி எத்தனையோ விருதுகள். விழாக்கள் நடந்திருக்கு. ஆனா அதெல்லாம் எனக்கு ,என் மனசுக்கு ஒட்டல .ஆனா இந்த வருசம் ஏதாவது புதுசா செய்யணும்னு நினைச்சேன். அதுதான் ஒரு வித்தியாசமா இருக்கட்டும்னு ஒரு நபரைத் தேர்ந்தெடுத்திருக்கேன். இந்த ஒரு லட்ச ரூபாயும் பட்டயமும் இன்னைக்கு யாருக்கு கொடுக்கப் போறோம்னு தெரியுமா? என்று முதலாளி சொன்ன போது விழாவில் அமர்ந்திருந்தவர்களுக்கு, எல்லாம் படக் படக்கென்று வேகமாகத் துடித்தது இதயம்.
முதலாளி பேசுவதை விருந்தாளியாக வந்திருந்த தொழிலதிபர் பார்த்துக் கொண்டிருந்தார்.
” யாருக்குப் பரிசு தரப் போகிறாரோ? “
என்று எல்லோரும் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் அறிவித்த பெயரும் அவர் சொன்ன விஷயமும் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“நாமெல்லாம் ஓரளவுக்கு வசதியா இருக்கோம். நல்லா சம்பாதிக்கிறோம். கார், இருசக்கர வாகனம் வச்சிருக்கோம்.. நல்ல உணவு, வீடு வசதி, அப்பிடி இப்பிடின்னு எல்லாம் நாம நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கோம். இது இந்த நிறுவனம் உங்களுக்கு கொடுத்திருக்கலாம் .இல்ல வேற வழியில நீங்கள் சம்பாதிச்சு இருக்கலாம் . இத்தனை பேரும் ஓரளவுக்கு நாம உயர்ந்த இடத்தில தான் இருக்கோம். ஆனா, இந்த நிறுவனத்தோட கழிவுகளையும் கழிவறைகளையும் கொஞ்சங் கூடப் கூச்சப்படாம, அசிங்கப்படாம சுத்தமா கழுவி தூய்மைப் படுத்துற சரஸ்வதி அம்மாவுக்கு தான் இந்த வருசத்தோட விருது “
என்று சரஸ்வதியின் பேரை முதலாளி, சொன்ன போது எல்லோருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது.
அழுக்குப் புடவை . வண்ணம் சரியாக இல்லாத சட்டை. வறண்டு போன தலை முடி . வறுமையில் ஒட்டிப் போன கன்னங்கள் “
என்று விழாக் கூட்டத்திற்குள் கூட வர முடியாமல் கூனிக் குறுகி, ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரஸ்வதியின் பெயரை முதலாளி சொன்னார்.
நம்மைத்தான் கூப்பிடுகிறார்கள்? நமக்குத் பரிசு தர போகிறார்கள்? என்று கொஞ்சம் கூட நினைக்காத அந்தத் தாய் சரஸ்வதி திரு திருவென்று விழித்துக் கொண்டிருந்தார்.
” நம்ம பேர்ல வேற யாரோ சரஸ்வதி இருக்காங்க போல. முதலாளி நம்மளக் கூப்பிடல ” என்று அவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
முதலாளியே மறுபடியும் பேச ஆரம்பித்தார்.
” இந்த நிறுவனத்தில வேலை பார்த்துகிட்டு இருக்கிற, இந்த நிறுவனத்தில இருக்கக்கூடிய எல்லா கழிவறையும் கழுவிச் சுத்தப்படுத்துற சரஸ்வதி அம்மாவுக்கு தான் இந்த ஒரு லட்ச ரூபாயும் பட்டயமும் “
என்று அவர் சொல்லச் சொல்ல தம்மை தான் முதலாளி சொல்கிறார் என்று கூச்சத்திலும் சந்தோசத்திலும் உறைந்தார் சரஸ்வதி.
“அம்மா உங்களைத்தான் கூப்பிடுறாங்க போங்க”
என்று அங்கிருந்தவர்கள் சொல்ல
செய்வதறியாது திகைத்தார் சரஸ்வதி. அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
” நாமெல்லாம் படிச்சிருக்கிறோம் வேலை செய்றோம். சம்பாதிக்கிறோம் அப்படிங்கிற கௌரவம் இருக்கும் .ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுறதுக்குக் கூட நாம ஈகோ பார்த்துகிட்டு இருப்போம். ஆனா, இந்த அம்மா நிறுவனத்தில இருக்கிற எல்லாருடைய கழிவுகளையும் கழிப்பறைகளையும் கழுவி சுத்தப்படுத்தியிருக்காங்க. அதனால சரஸ்வதி அம்மா தான் இந்த வருச விருதுக்குத் தகுதியானவங்க “
என்று முதலாளி மறுபடியும் சொல்ல கூனிக்குறுகி நின்றிருந்த சரஸ்வதி அம்மாவை அலாக்காகத் தூக்கிக்கொண்டு மேடைக்கு வந்தார்கள், அங்கு வேலை செய்யும் பெண்கள்.
சரஸ்வதிக்கு ஒரு லட்ச ரூபாயும் பட்டயமும் முதலாளியும் சிறப்பு விருத்தினரும் கொடுத்த போது அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது.
” முதலாளி செஞ்சது சரிதான். உயர்ந்த இடத்தில இருக்கிறவங்களத் தேடி, விருதுகளும் விழாக்களும் வரும்.. ஆனா, சரஸ்வதி அம்மா மாதிரி இருக்கிற ஆளுகளுக்கு நாம தான், விருதும் பரிசும் குடுத்து உயர்ந்த இடத்துக்கு கொண்டு போகணும் ” என்று விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினரான தொழிலதிபரும் பேசியது மட்டுமில்லாமல், தன் நிறுவனத்திலும் செயல்படுத்தப் போவதாகவும் உறுதி கூறினார்,
தன் கையில் பரிசுப் பணத்தையும், பட்டயத்தையும் ஏந்திக்கொண்டு சந்தோஷத்தில் திளைத்திருந்தார் சரஸ்வதி.