வேணுகோபால் தவறி விட்டார். அவருக்கான சடங்குகள் செய்ய வேண்டும். நல்ல மனிதர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மந்திரப் பரிகாரங்கள் நடந்து கொண்டிருந்தன. காளிதாஸ் அதற்கான எல்லா நிலைகளிலும் உடன் இருந்தான்.
” தம்பி யாரு. எறந்து போனவருக்கு என்ன முறை
வேணும் ? ” என்று பரிகாரம் செய்யும் நபர் கேட்க
” இவரு தான் எறந்து போனவராேட மகன். “
என்று அங்கிருந்த ஒருவர் சொல்லத் தலையை ஆட்டினான் காளிதாஸ்.
” மத்த சொந்த பந்தமெல்லாம் வாங்க. ஆக வேண்டியதப் பாக்கணும் ” என்று பரிகாரம் செய்பவர் சொல்ல,
“சொந்த பந்தமுன்னு யாரும் இல்லீங்க. எல்லாம் வெளிநாட்டுல இருக்காங்க. இந்தா இருக்காரே காளிதாஸ் இவர வச்சு எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்க “
என்று அங்கிருந்தவர்கள் சொல்ல காளிதாஸை உற்றுக் கவனித்தார் பரிகாரம் செய்பவர்.
” தம்பி , ஏன் இப்பிடி இருக்கீங்க? உங்க சொந்த பந்தமெல்லாம் ஏன் உங்க அப்பா இறப்புக்கு வரமாட்டாங்களா? இது தான் அவரோட கடைசிப் பயணம். இன்னைக்கு அவரோட முகத்தைப் பாக்கலன்னா, இனிமே என்னைக்கும் பாக்க முடியாது. ஏதாவது சொல்லி உங்க சொந்த பந்தங்கள வரச்சொல்லுங்க. நல்லதுக்கு சேரலன்னா கூட பரவாயில்ல. கெட்டதுக்கு சேந்திரனும். இதுதான் மனித தர்மம் ” என்று உறவுகளின் உன்னதத்தை ஒப்பித்தார் பரிகாரம் செய்பவர். அதைக் கேட்டு எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் காளிதாஸ்.
” என்னங்க . இவ்வளவு தூரம் சொல்றாரு. நீங்க எதுவும் பேசாம இருக்கிங்களே? பேசுங்க”
என்று சொல்ல காளிதாஸ் அப்பவும் பேசாமலே இருந்தான்.
” சரி, உங்களுக்குள்ள ஏதோ பிரச்சினை இருக்கு பாேல. அதில நாங்க தலையிட விரும்பல. ஆக வேண்டியதப் பாக்குறோம்”
என்று பரிகாரங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
” என்ன பணம் சம்பாதிச்சு என்ன பண்ண? இந்தப் பெரியவரு எறந்திட்டாரு. அவரோட மனைவியும் எப்பவோ தவறிட்டாங்க. குடிச்சும் குடிக்காம கெடந்தே இவரு இப்பிடி எறந்திட்டாரு. பணம்.. பணம்..ன்னு தான் இந்தக் குடும்பத்த சேந்தவங்க இருக்காங்க. கடைசிப் பயணத்துக்கு கூட யாருமில்லையே?
என்று ஆதங்கப்பட்டார்கள், உறவினர்கள். பரிகாரங்கள், சடங்குகள் செய்யப்பட்டு வேணு கோபால் எரியூட்டப்பட்டார். அன்று மாலை, வேணுகோபாலின் இறுதி மரியாதைக்கான செலவுகள் பட்டுவாடா செய்யப்பட்டன.
பரிகாரம், மந்திரம் செய்ய இவ்வளவு பணம். மாலை, கண்ணாடிப் பேழை வாங்குன செலவு இவ்வளவு. சாமியானா, டீ, காபி வாங்குன செலவு இவ்வளவு என்று பணத்தை பட்டுவாடா செய்து கொண்டிருந்தார்கள். வேணுகோபால் வீட்டின் அருகில் குடியிருக்கும் சுப்பையா கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
” தம்பி இன்னொரு செலவ மறந்திட்டேன்”
என்று சுப்பையா சொல்ல
” என்ன செலவு அண்ணே ? சொல்லுங்க குடுத்திரலாம். “
” அது வந்து … வந்து…..”தயங்கினார் சுப்பையா.
“சொல்லுங்க… குடுத்திரலாம்”
” காளிதாஸு க்கு பணம் குடுக்கணும் “
” ஓ… ஸாரி…. காளிதாஸுக்கு பணம் குடுக்கலையா? எவ்வளவு குடுக்கணும்? “
” ஒரு இருபதாயிரம் குடுக்கலாமா?”
“என்னது இருபதாயிரமா?”
” ஆமா தம்பி, நேத்து நைட்டு முழுதும் இருந்தாரு. காலையில இருந்து, எரிக்கிற வரைக்கும் கூடவே இருந்திருக்கிறாரு. வேல இருக்கு என்னால அப்பாவோட இறப்புக்கெல்லாம் வர முடியாது. நிறைய வேல இருக்குன்னு சொல்லிட்டிங்க. உங்க சகோதரியும் இங்க வரல அவங்களும் இதையே தான் சொன்னாங்க. அவங்க பங்கு பணத்த அனுப்பிட்டாங்க. இது உங்க பங்கு . நீங்க செய்ற வேல நீங்க இருந்து அப்பாவத் தூக்கிப் போடணும். உங்க கெளரவம். பதவி. பணம். வேலை. எல்லாம் உங்கள இங்க வர விடல. ஒரு மகனா நீங்க இருந்து செய்ற வேல இது .அதுவும் நீங்க இல்லாத இடத்த நிரப்பியிருக்காரு காளிதாஸ். வேணுகோபால் உங்க அப்பா தான ? அவருக்கு மகனா , நீங்க மகனா இருந்து செய்ற எல்லா வேலைகளை காளிதாஸ் சம்பளத்துக்கு மகனா இருந்து இத செஞ்சிருக்காரு. அவருக்கு இருபதாயிரம் குடுக்கிறது தப்பில்ல தம்பி “
என்று சுப்பையா சொல்ல
” சரி பணம் அனுப்புறேன். குடுத்திருங்க. “
என்று வெளிநாட்டில் இருந்தபடியே, தன் அப்பா வேணுகாேபால் இறப்புக்கான செலவு கணக்குகளைக் கேட்டு சுப்பையாவிடம் பேசிக் கொண் டிருந்தான், வேணுகோபாலின் உண்மையான வாரிசு அவர் பெத்த மகன் விஜய் சூர்யா.