சிறுகதை

பரிகாரம்! – இரா.இரவிக்குமார்

“ஏன்டா சீனு, கழுத தேஞ்சு கட்டெறும்பு ஆனது போல நல்ல மார்க் வாங்கிட்டிருந்த உனக்கு என்னடா ஆச்சு? இந்தப் பத்தாம் வகுப்பில வாங்குற மார்க்தான் உன் எதிர்காலத்த நிர்ணயிக்கும். உன் வீட்ல கஷ்டப்பட்டுத்தானே உன்னப் படிக்க வைக்கிறாங்க? இப்ப போய் மாடல் எக்ஸாம்ல எல்லா சப்ஜெக்டிலும் ஃபெயிலாயிருக்கியேடா?”

எழுந்து நின்ற தன்னிடம் திருத்தப்பட்ட பேப்பர்களைக் கொடுத்த ஆசிரியர் முத்துகிருஷ்ணன் கோபத்துடனும் ஆதங்கத்துடனும் கேள்விகள் கேட்கத் தலை குனிந்து பதில் பேச முடியாமல் நின்றான் ஒன்பதாம் வகுப்புவரை அதிக மதிப்பெண்கள் வாங்கி எல்லா ஆசிரியர்களாலும் பாராட்டப்பட்ட ஒழுக்கத்திலும் படிப்பிலும் சிறந்து விளங்கிய சீனிவாசன்.

பத்தாம் வகுப்பில் ஆரம்பம் முதலே சீனிவாசன் தன் கவனத்திலும் படிப்பிலும் சிதறுண்டு மிகவும் பின்தங்குவதை அறிந்த அவன் வகுப்பாசிரியர் முத்துகிருஷ்ணன் அவன் மீது தன் கவனத்தைத் திருப்பினார். மற்ற சக ஆசிரியர்களிடமும் அவனது பின்னடைவையும் தன் வருத்தைத்தையும் சொன்னபோது அவர்களும் தன்னைப் போலவே சீனு மீது வருத்தமும் வேதனையும் கொண்டிருப்பது தெரிந்தது.

இன்று அவற்றின் தொடர்ச்சிதான் அவரது கோபமாக வெடித்தது!

தான் கேட்ட கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்ற அவனிடம் அவருக்கு மேலும் கோபம் பெரிதாகி உக்கிரமானது!

அவன் அருகில் சென்று அவனது இடது காதைப் பற்றி முன்னும் பின்னும் இழுத்து அவனை நிலை குலைய வைத்து முதுகில் நான்கு அறை அறைந்தார்.

இன்று வரை படிப்பில் பின் தங்கியதற்காக அடி வாங்காத சீனு அவமானத்துடன் கண்ணீர் மல்க இப்போதும் ஒன்றும் பேசாமல் நின்றான். சீனுவின் நேர்மறை அல்லது எதிர்மறை என்று சொல்ல முடியாத செயல் மேலும் முத்துகிருஷ்ணனின் கோபத்தைத் தூண்ட அதனால் அவர் சீனுவை மேலும் அடிக்க முற்பட…

அப்போது முத்துகிருஷ்ணன் சற்றும் எதிர்பார்க்காமல் தலைமை ஆசிரியர் நாராயணன் அந்த வகுப்பறைக்கு வர அங்கே திடீரென்று பரபரப்புடன் கூடிய பதட்டம் உண்டானது. அங்கிருந்த மற்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர் முத்துகிருஷ்ணனின் கட்டுக்கடங்காத கடுங்கோபத்தால் சீனுவைப் போலவே மிரண்டுபோய் இருந்தார்கள்.

இப்போது வகுப்பாசிரியர் தலைமை ஆசிரியரிடம் தான் சீனுவை அடிப்பதை அவர் பார்த்ததால் மேலும் மூக்கு, கண், வாய் வைத்து அவனின் பின்னடைவையும் அவன், அவனது குறைகளுக்கான காரணத்தைத் தன்னிடம் சொல்லாமல் அழிச்சாட்டியமாக மவுனம் சாதிக்கும் பிடிவாதத்தையும் மிகைப்படுத்திச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்… அது உண்மை என்பதால் தலைமை ஆசிரியரும் சீனுவைத் தண்டிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்து அச்சத்தில் உறைந்து அமர்ந்திருந்த மாணவர்கள் அடுத்து சீனுக்கு என்ன நடக்குமோ என்ற கவலையுடன் காணப்பட்டார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக அங்கு நடந்ததை எதுவும் கண்டு கொள்ளாமல் தலைமை ஆசிரியர் சீனுவிடம் சொன்னார்,

“சீனு, இன்று முதல் நம் பள்ளி ஹாஸ்டலில் நீ தங்கிப் படிக்கப்போறே! இனி நீ உன் வீட்டுக்கு போகத் தேவையில்லை! இன்று மாலை உனது துணி, படுக்கை போன்ற பொருட்களை உன் அப்பா, அம்மா எடுத்து வருவார்கள். அவர்கள் உன்னை வாரம் ஒரு முறை ஹாஸ்டலுக்கு வந்து பார்த்துச் செல்வார்கள். இந்த ஏற்பாட்டிற்கு நான் நம் பள்ளியின் நிறுவனரும் கருணை வள்ளலுமான பரந்தாமன் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டேன். இந்தத் தங்கும் வசதி, உணவு வழங்குவது எல்லாம் உனக்கு இலவசமாக அளிக்கப்படும். இவற்றை உனக்காக நம் நிறுவனரிடம் நான் வாதாடிக் கேட்டுப் பெற்றுள்ளேன். அவரிடம் உன்னைப் பற்றி நான் பேசி, நீ நன்றாகப் படிக்கும் மாணவன், வரவிருக்கும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நம் பள்ளிக்கு மிகுந்த பேரும் புகழும் பெற்றுத் தருவாய் என்று உன் பொருட்டு நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதனால் இனிமேல் நீ செய்ய வேண்டியது எல்லாம் ஒழுக்கத்துடன் நன்றாகப் படித்து எல்லோரும் பாராட்டும் வண்ணம் முதல் மாணவனாக வர வேண்டும். நீ, நான் சொன்னபடி செய்வாயா?”

என்ன செய்வது என்று அறியாத சீனு தலைமை ஆசிரியரின் காலிலும் வகுப்பாசிரியரின் காலிலும் பணிந்து விழுந்து எழுந்தான்.

பின்பு மாணவர்களை விட்டு வகுப்பாசிரியரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னார்,

“முத்துகிருஷ்ணன், உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது மலைப்பாக இருக்கும்! இங்கு எனது நண்பன் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறான். நேற்று அவன் சீனுவையையும் அவன் அப்பாவையும் பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லும்படி கேட்டான். சீனுவின் அப்பாவிற்கு அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் நடந்த ஒரு கையாடல் சம்பந்தப்பட்ட கேசில் அடிக்கடி போலிஸ் ஸ்டேஷனுக்கு விசாரணை நிமித்தம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவர் செல்லும் போதெல்லாம் சீனுவும் அவன் அம்மாவும் அவருடன் செல்கிறார்கள். குடும்பத் தலைவனுக்கு ஒரு சோதனை வரும்போது இப்படித்தான் குடும்பம் முழுவதும் பாதிக்கப்படும்! நான் எனக்குத் தெரிந்த உண்மைகளை அவனிடம் கூறினேன். அவை என் நண்பன் ஊகங்களுடன் ஏறத்தாழ ஒத்துப் போனது மட்டுமன்றி அவனும் தனக்கு இவன் அப்பா மீது எந்தச் சந்தேகமும் இல்லை, ஆனால், அடிக்கடி விசாரணைக்கு அழைக்க வேண்டியுள்ளது என்றான். அதனால்தான் சீனுவை இந்த நிலைமையிலிருந்து காப்பாற்ற நன்றாகப் படிக்கும் அவனுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். இதனால் எவ்வித இடையூறுமின்றி நன்றாகத் தன் படிப்பில் கவனம் செலுத்துவான். அவனது நிலைமை நமக்குத் தெரிந்து கொண்டதாக நாம் காட்டிக் கொள்ள வேண்டாம். இதைப் பற்றி அவன் பெற்றோர்களிடமும் பேசிவிட்டேன்!”

“யூ ஆர் கிரேட் சார்!” என்றார் வகுப்பாசிரியர் முத்துகிருஷ்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *