செய்திகள்

பராக் ஒபாமாவுக்கு கொரோனா: விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, மார்ச் 14–

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கொரோனாவில் இருந்து விரைந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தான் கடந்த சில நாள்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தானும், துணைவியார் மிக்செல்லும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்டிருப்பதை நினைவுக் கூர்ந்துள்ள ஒபாமா, மிச்செலுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

தொற்று பாதிப்புகள் குறைந்து வந்தாலும், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பராக் ஒபாமா விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நீங்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கும் உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.