பத்மா– ராகவன் திருமணம் முடிந்து இன்றோடு பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன.
இவர்களுடன் ராகவனின் தம்பி கண்ணன் தங்கி உள்ளார். அவர் தற்போது ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ராகவன் மற்றும் கண்ணனுக்கு பத்மா தான் உதவி. கண்ணனை தனது மகன் போல் பாவித்தார் பத்மா. இப்பொழுதெல்லாம் பத்மா தனது பிறந்த வீட்டிற்கு அடிக்கடி செல்லவதில்லை. பத்மா தங்கை தற்போது கல்லூரிப் படிப்பை முடிக்கும் தறுவாயில் உள்ளார். பத்மாவிற்கு தனது தங்கையைக் கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தால் இந்த வீட்டில் ஒரு மழலைச் சப்தத்தைக் கேட்கலாமே என்ற ஆசை. பல தடவை ராகவனிடம் சொன்ன போது அவர் தனது தம்பியின் விருப்பத்தை அறிவோம் என்று கூறுவதோடு சரி. அவரிடம் பேச்சை எடுப்பதேயில்லை. இன்று கண்ணனிடம் நாமே பேசி விடுவோம் என்று ஒவ்வொரு நாளும் நினைப்பார் பத்மா. ஆனால் ஏனோ ஒரு தடுமாற்றம். கேட்க தயக்கம் நாட்கள் தள்ளிப் போய்க் கொண்டே போனது.
விடுமுறையில் வந்த பத்மாவின் தங்கை லதா வந்தது முதலே எல்லோரிடமும் கலகலப்பாகவே நடந்து கொண்டார். கண்ணனிடம் நன்றாகவே பழகினார். இருவரும் நன்கு கலகலப்பாக சிரித்துப் பேசுவதைக் கண்ட பத்மா ஆனந்தமடைந்தார். அப்போதைக்கு அப்போ ராகவனிடம் பத்மா இவர்கள் திருமணம் பற்றி பேச ராகவன் அவர்கள் இருவர் மனதைப் புரிந்து கொள்ளாமல் நாம் முடிவு எடுப்பது தப்பு என்றார். பத்மா மனம் உடைந்த பலூன் போலானார்.
இவருக்கு விருப்பம் இல்லையோ நாம் தான் வலிய இதைக் கேட்கிறோமோ என நினைத்து இதைப் பற்றி பேசுவதைக் குறைத்துக் கொண்டார்.
பத்மா கண்ணனிடம் நாளை லதா ஊருக்குச் செல்லுகிறார் என்றார்.
கண்ணன் அவரவருக்கு உண்டான வேலையை பார்க்க வேண்டாமா அண்ணி செல்லட்டும் என்றதும் அண்ணனுக்கு ஏத்த தம்பி என்று மனதில் நினைத்தார்.
லதா சென்று ஒரு வாரமாகி விட்டது. யாரும் வீட்டில் லதா பற்றி யாரும் பேசாதது கண்டு பத்மா மனதிற்குள் என்ன கல் மனது இவர்களுக்கு என்றார்.
தனது தங்கை இந்த வீட்டில் வாழ சம்மதிப்பாளா என்ற எண்ணம் வேறு வந்தது.
அலுவலகத்தில் இருந்து வந்த கண்ணன் தனக்கு ஒரு வாரம் திருச்சியில் அலுவலகப் பணி நிமித்தமாக செல்ல வேண்டியுள்ளது என்றார். தங்குமிடம் மற்றும் வசதிகள் ஏற்பாடாகி உள்ளது என்றார்.
பத்மா திருச்சியில் எங்கள் வீட்டிற்குச் செல்ல நேரம் கிடைக்குமா என்று கேட்கலாம் என நினைத்த போது கண்ணன் உங்கள் வீட்டிற்கு செல்ல நேரம் அமைந்தால் சென்று வருவேன் என்றார்.
கண்ணன் ஊருக்குச் சென்றதும் வீடு வெறிச்சோடி போனதாக பத்மா நினைத்தார்.
ராகவன் வீட்டிற்கு வந்ததும் பத்மாவிடம் பொதுவாக சில வார்த்தைகள் பேசி விட்டு படுக்கச் சென்றார். பத்மா விடாமல் கணவரிடம் கண்ணன் திருமணம் பற்றி பேச்சை எழுப்ப ராகவன் அவனுக்கு பிடித்த மாதிரி அவன் விருப்பப்படி தான் செய்ய வேண்டும். அவன் வரட்டும் கேட்கிறேன் என்றார்.
பத்மா சற்று மகிழ்வடைந்தாலும் தனது தங்கை பற்றி பேசாதது கண்டு வருத்தமடைந்தார்.
கண்ணன் அன்று வேலை முடிந்ததால் அங்குள்ளவர் களுடன் மார்க்கெட் பக்கம் வந்த போது ஒரு கடையில் லதாவும் அவர் தோழியும் நிற்பது கண்டு அங்கு சென்று அவர்களைப் பார்த்தார்.
லதா என்ன ஆச்சரியம் எப்போது வந்தீர்கள் என்று கேட்டாள்
. தான் அலுவலக வேலையாக வந்ததாகக் கூறினார். தங்களுக்கு நேரம் கிடைத்தால் வீட்டிற்கு வரலாமே என்றாள்.
கண்ணன் ராணியம்மா உத்தரவா என்றான்.
கூட வந்தவர்களை அறிமுகம் செய்த வேளையில் லதா தன்னோடு வந்த தோழியான ருக்மணியை அறிமுகம் செய்தார்.
கண்ணன் ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் ருக்மணியைப் பார்த்தான்.
பின் சரி நாங்கள் கிளம்புகிறோம் என்றாள் லதா எல்லோரையும் தன்னுடன் சாப்பிட அழைத்தாள்.
கண்ணன் வந்திருந்தவர்களைப் பார்க்க அவர்கள் சம்மதிக்க எல்லோரும் சாப்பிட சென்றார்கள்.
சாப்பிட்ட பின் கண்ணன் எதில் செல்லப் போகிறீர்கள் என்றான்.
லதா ருக்மணி காரில் என்றதும் கண்ணன் நடக்கட்டும் என்றான்.
அன்று ஊருக்கு திரும்பி வந்தான் கண்ணன். அவன் தனது பயணம் குறித்து ஏதும் கூறாதது பத்மாவிற்கு ஏன் ஏதும் ஒன்றும் கூறாமல் இருக்கிறார் என்று நினைத்தாலும் கேட்க சுய கௌரவம் தடுத்தது.
இரவு சாப்பிடும் வேளையில் ராகவன் கண்ணனிடம் திருமண பேச்சை ஆரம்பிக்க அவர் எனது விருப்பத்திற்கேற்ற பெண்ணைப் பாருங்கள் என்றான்.
பத்மா சற்று ஆனந்தமடைந்தாலும் ராகவன் லதா பற்றி ஏன் ஏதும் கூறவில்லையே என்று நினைத்தார்.
அப்போது கண்ணன் கைப்பேசி ஒலி எழுப்ப, கண்ணன் அதை உயிர்பிக்க, நான் தான் லதா பேசுகிறேன் என்றாள். கண்ணன் தாங்கள் தந்த விருந்துக்கு நன்றி என்று சொன்னான்.
அடுத்து வந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்று சொல்லி விட்டு ராகவனிடம் கைப்பேசியைத் தருமாறு கூறினாள்., ராகவன் சொல்லும்மா, எல்லோரும் நலமா எனக் கேட்டார். எல்லோரும் பூரணநலம் என்றார். சிறு விஷயங்கள் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்தார். பத்மா என்ன வென்று கேட்டாள். அவர் ஏதும் பெரிய செய்தியில்லை என்றார்.
அன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் யாரோ அழைப்பு மணியை அழுத்த, அது தன் கடமையைச் செய்ய, கண்ணன் சென்று கதவைத் திறக்க, வாசலில் லதா நின்றாள்.
என்ன ஒன்றும் சொல்லாமல் வந்துள்ளாய் என்றார்.
ஒரு சிறு புன்னகயை தவழ விட்ட லதா, வீட்டிற்குள் வரலாமா என்றாள்
பேச்சுக்குரல் கேட்டு வந்த பத்மா, லதாவைப் பார்த்து என்ன சொல்லாமல் வந்துள்ளாய் என்றாள்.
லதா ஏதும் பேசாமல் உள்ளே வந்தாள்.
அடுத்த ஒருசில மணித்துளிகளில் வெளியே சென்ற லதா, அடுத்த அரை மணி நேரத்தில் இருவருடன் வந்தார். வந்தவர்களை அக்கா , அவர் கணவர் மற்றும் கண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஏற்கனவே ராகவனிடம் கூறி வைத்ததாள்.
அவர் அவர்களிடம் கண்ணனைப் பற்றிக் கூறினார்., அவர்கள் எங்கள் பெண் ருக்மணி, கண்ணனைப் பார்த்ததாகவும் அவருக்கு விருப்பம் இருந்தால் மேற்கொண்டு பேசலாம் என்றார்கள்.
உடனே லதா திருச்சியில் நடந்ததைக் கூற கண்ணனிடம் பத்மா என்னப்பா உனக்கு சரியா எனக் கேட்டார். லதா பார்த்து முடிவு பண்ணது பிடிக்காமல் போகுமா என்றான் கண்ணன்..
கண்ணன் திருமணத்திற்கு சம்மதித்தது பத்மாவிற்கு ஆனந்தம் என்றாலும் லதா வர வேண்டிய இடத்தில் வேறொருத்தியா? என்று நினைத்த நேரத்தில் வருந்தம்., ராகவன் வந்தவர்கள் சாப்பிட தயார் செய் என்றார்.
லதா நானும் உனக்கு உதவுகிறேனக்கா என்று சமையலறைக்கு வந்தாள்.
கண்ணனுக்கு ருக்மணி பிடித்துப் போய் தான் எனக்கு இரண்டு தடவை போன் செய்து ருக்மணி பற்றி விசாரித்தார் என்றாள்.
மேலும் இன்னோரு சமாச்சாரம் என்ற லதா, கண்ணன் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் கோபி என்ற பையன் ஜாதகம் அனுப்பி வைத்துள்ளார். அது சரியாக இருக்கும் பட்சத்தில் இரண்டு திருமணமும் ஒரே மேடையில் என்று லதா கூறினாள்.
அங்கு வந்த ராகவன் அப்படியா என்றார்.
நன்றாகவே எல்லோரும் நாடகம் ஆடுகிறீர்கள் .
தற்போது திருமண ஏற்பாடுகளை பெற்றோருக்கோ அல்லது வீட்டில் பெரியவர்களுக்கோ இன்றைய தலைமுறை தருவதில்லை என்ற பத்மா வெடுக்கென்று திரும்பி
சமையல் வேலையில் மூழ்கினாள்.
அவள் கோபத்தை எல்லோரும் புரிந்து கொண்டு மெளனமானர்கள்.