அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு
புதுடெல்லி, ஜூலை 19–
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் முழங்கியதால் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது.
இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைவாசி உயர்வு, மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்னும் குற்றச்சாட்டு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை இந்தக் கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பாரதீய ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் நடைபெறும் இந்த கூட்டத் தொடர் 15 அமைப்புகளை கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளன. டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா. தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகும் என்று கருதப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக, முந்தைய தினம் அனைதது கட்சி கூட்டம் நடைபெறும். அதன்படி மத்திய அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பாலான கட்சியினர் பெங்களூரு, டெல்லி கூட்டங்களுக்குப் பிரிந்து சென்றதால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.