சென்னை, ஜூன் 17–
பரந்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:–
பரந்தூரில் விமான நிலைய விரிவாக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தி கடந்த 700 நாட்களாக பரந்தூர் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை இவ்விவகாரத்தில் செவி சாய்க்கவில்லை. மாறாக இப்பகுதியில் இருக்கும் விளைநிலங்களை மொத்தமாக அழித்துவிட்டு விமான நிலையத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது அங்கு வாழ்கின்ற ஒட்டுமொத்த விவசாய மக்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
திட்டங்கள் கொண்டு வரப்படுவது மக்களுக்காக தான். மக்கள் விரும்பும் பட்சத்தில் எந்தத் திட்டம் என்றாலும் அதை வரவேற்கலாம். ஆனால், மக்கள் விரும்பாத திட்டங்கள் வந்து யாருக்கு என்ன பலன்? விளைநிலங்களை அழித்துத்தான் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டுமா? என்பதை அரசு மறுபடியும் பரிசீலனை செய்ய வேண்டும்.
தே.மு.தி.க. எப்போதும் விவசாயிகளுக்குத்தான் உறுதுணையாக நிற்போம். எனவே மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.