சென்னை, ஆக. 9–-
மத்திய அரசின் ஆரம்ப கட்ட அனுமதி கிடைத்து இருக்கிறது. தமிழக அரசிடம் இதுகுறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பரந்தூரில் 2028 ம் ஆண்டு விமானம் தரையிறங்கும். அதற்கான பணிகளில் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் விமான போக்குவரத்து வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. 2014-ம் ஆண்டு இந்தியாவில் 6 கோடி பேர் விமானங்களில் பறந்துள்ளனர்.
கடந்த ஆண்டு (2023) இந்த எண்ணிக்கை 15.20 கோடி என்ற அளவில் உயர்ந்து உள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதிக பயணிகள் மற்றும் விமானங்கள் வந்து செல்வதில் டெல்லி, மும்பைக்கு அடுத்தப்படியாக சென்னை விமான நிலையம் 3-வது இடத்தில் இருந்தது.
ஆனால் இப்போது பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் சென்னையை விட முன்னேறி நம்மை 5-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளிவிட்டன.
அதற்கு முக்கிய காரணம், இந்த விமான நிலையங்கள் அனைத்து விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஆனால் சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.1 கோடி பயணிகளை கையாளும் திறன் மட்டுமே உள்ளது.
எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கிறது. மொத்தம் 5 ஆயிரத்து 369 ஏக்கரில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி செலவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக சுமார் 3 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. மீதமுள்ள நிலம் 1,669 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது.
நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசு எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது.
இங்கு நிலம் கையகப்படுத்து வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதேவேளையில் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் செய்து வருகிறது.
விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சுழல் அனுமதி, மத்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்திய விமானப்படை மற்றும் விமான ஆணையம் ஆகியவற்றின் ஆரம்ப கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய பணிகளை 4 கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்ட பணிகள் 2026-ம் ஆண்டு தொடங்கி 2028-ம் முடிக்கப்பட உள்ளது. அப்போது இங்கு ஆண்டுக்கு 2 கோடி பயணிகளை கையாள முடியும். 2-ம் கட்ட பணிகள் 2033-ம் ஆண்டு தொடங்கி 2035-ம் ஆண்டு முடிகிறது. அப்போது கூடுதலாக 3 கோடி பயணிகள் என மொத்தம் 5 கோடி பயணிகளை கையாள முடியும். 3-ம் கட்ட பணிகள் 2042-ம் ஆண்டு முடியும் போது மொத்தம் 7 கோடி பயணிகளும், இறுதி கட்ட பணிகள் 2046-ம் ஆண்டு முடிக்கும் போது மொத்தம் 10 கோடி பயணிகளையும் கையாள முடியும்.
சென்னையிலும் தொடரும்
அதில் முதல்கட்ட பணிகள் முடிக்கப்படும் 2028-ம் ஆண்டில் இருந்து விமானங்கள் இங்கு இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பரந்தூரில் விமான நிலையம் செயல்பட்டாலும், சென்னையில் தற்போது உள்ள விமான நிலையமும் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விமான நிலையத்தின் முழு திட்ட அறிக்கையை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து அதனை தமிழக அரசிடம் தற்போது ஒப்படைத்துள்ளது.
தமிழக அரசின் அனுமதி கிடைத்தவுடன், இந்த அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி அனுமதி பெறப்படும் இந்த விமான நிலையம் அமையும் இடத்தில் உள்ள 1005 குடும்பங்கள் மற்றும் 36 ஆயிரத்து 635 மரங்கள் அங்கிருந்து அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.