பரந்தூர், மார்ச் 16–
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊர் மக்களும் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு கூட்டு இயக்கமும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர். ஆனாலும், நில கையகப்படுத்துதல் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதனால், அரசை கண்டித்து ஏகனாபுரம் கிராம மக்கள் பேரணியாக சென்று வயல்வெளிகளில் இறங்கி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்த 4563 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான அரசாணையில் 20 கிராமங்களைச் சேர்ந்த 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்தால் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கக்கூடும். நீர்நிலைகள் அழியும் சூழல் உருவாகும். இதனால், ஒட்டுமொத்தமாக தங்களது வாழ்வாதாரமே பாதிக்கும் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விமான நிலையைம் வந்தால் அதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திட்டங்கள், கட்டுமானங்கள், அடிப்படை வசதிகள் எழுப்ப நிலம் பயன்படுத்தப்படும். இதனால், தங்களது உடைமைகளை இழக்க நேரிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
வயலில் இறங்கி
போராட்டம்
4 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக இதுவரை நாளிதழ்களில் வெளியான செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏகனாபுரம் கிராமத்திலிருந்து பேரணியாக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி கிராம மக்கள் ஊர்வலமாக சென்று வயல்வெளியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக அங்கு 100-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் சட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், வாக்கு சேகரிக்க அரசியல் கட்சியினரை அனுமதிக்க மாட்டோம் எனவும் போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.