சென்னை, ஜூலை 4–
பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் வாயிலாக அவ்வப்போது அனுப்பப்படுவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சர்வதேச போலீஸ் உதவியோடு, மிரட்டல் செய்யும் கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது, அதில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை இருக்கின்றது, மெட்ரோ ரயில் சேவையானது மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து ரெயில் நிலையத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் தீவிர சோதனையிட்டனர். ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தினர்.சோதனையில் எந்த பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
நேற்று மெயிலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீசார் சோதனை செய்தனர் அப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. தற்போது மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுகின்றது, பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிலையங்கள், விமான நிலையம் என அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது யார் எனவும் இதற்கு ஏதேனும் நோக்கம் இருக்கின்றதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.