செய்திகள்

பயோ கேஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து: ஒருவர் பலி

Makkal Kural Official

சென்னை, பிப். 16–

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பயோ கேஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.

மணலி சின்ன சேக்காடு அருகே உள்ள பல்ஜி பாளையத்தில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 5 மண்டலத்தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் உணவு கழிவுகள், திடக்கழிவு மூலம் (சிஎன்ஜி) பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் பயோ கேஸை கண்ட்ரோல் செய்யும் அறையில், மெஷின் ஆப்ரேட்டர்களான பாஸ்கரன் மற்றும் சரவணகுமார் இயந்திரங்களை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது மிஷின் வெடித்து அருகில் இருந்த கேஸ் தீ பிடித்ததில், அலுவலகத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் பாஸ்கரன் படுகாயம் அடைந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஒருவர் பலி

தகவல் அறிந்த மணலி போலீசார் மற்றும் மணலி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது இடர்பாடுகளில் சிக்கி சரவணன் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் கேஸ் வெடித்து சிதறியதால் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளதாகவும், மேலும் இதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி, தொழிற்சாலை முன்பு மக்கள் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, யாரும் பயப்பட வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

அந்த நிறுவனத்தை சுற்றி வீடுகள் இருப்பதால், மேலும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த மணலி போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *