சிறுகதை

பயம் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

சரி..நமக்கு போதாத காலம் ஆரம்பமாய் விட்டது. வசமாய் மாட்டிக்கொண்டோம்.

மனைவி படித்து, படித்து சொன்னாளே, வெளியில் எங்கேயும் போக வேண்டாம் நான் வீட்டில் இல்லாத போது என்றாளே .கேட்டேனா? இன்று போலீஸ் என்னை வீடு தேடி வருமளவுக்கு விபரீதமாகிவிட்டது. .நான் ஏன் இன்றைக்கென்று பார்த்து எதையோ முட்டாள்தனமாய் செய்தேன்.

அன்று மதியம் என் மனைவி காஞ்சீபுரம் கிளம்பிய பிறகு எனக்கென்னவோ தூக்கம் பிடிக்கவில்லை. குப்பென்று வியர்த்து விட்டு காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது..பாவம் என் மனைவிதான் என்ன செய்வாள்? எப்படி வீட்டை தனியாளாய் ஒழிக்க முடியும்?அதனால் இன்று அவள் வீட்டில் இல்லாத சமயமாய் பார்த்து சர்பிரைஸாய் ஏன் வீட்டை ஒழிக்க கூடாது என்றெண்ணி வீட்டை ஒழிக்கும் போதுதான் அந்த பண்டில் கட்டிலடியிலிருந்து வெளியே வர பதறி போனேன்.

ஐயயோ, இதெப்படி, இத்தனை நாட்களாய் அதுவும்

இந்த சின்ன ஒரு கிச்சன், ஒரு பெட் ரூமில்..நல்லதாய் போயிற்று மனைவி வீட்டில் இல்லாததும்.ஏதாவது விபரீதம் மட்டும் நடந்திருக்குமேயானால் மொத்த வீடுமல்லவா வெடித்து சிதறிப் போயிருக்கும்.தவிரவும் இதை வீட்டில் வைத்திருப்பது ரிஸ்க் என்று ஏன் என் மரமண்டைக்கு தெரியாமல் போயிற்று? நான் குடியிருக்கும் அடுக்ககம் 15 வீடுகள் கொண்டது. இது மட்டும் இன்று, (நினைத்து பார்க்கவே குப்பென்று வியர்த்து ஊற்றுகிது)

வெடித்திருக்குமேயானால் மொத்த வளாகமும் அல்லவா வெடித்துச்சிதறியிருக்கும்?

அதனால் உடல் சோர்வையும் மீறி அந்த பண்டலை வெளியே எடுத்து போய் கித்தான் பையில் சுற்றி அந்த கித்தான் பையை இன்னொரு பாகில் போட்டு முடித்து யாருமறியாவண்ணம் வெளியில் எடுத்துப் போய் …..கொஞ்ச தூரம் காலாற நடந்த பிறகு வெறிச்சோடிப் போயிருந்த அந்த இடத்தில் தென்பட்ட ஒரு மாநகராட்சி குப்பைத் தொட்டியில் யாரும் பார்க்காத போது அந்த பண்டலை எறிந்து விட்டேன்.

யாரும் என்னைப் பார்க்கவில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு சில அடிகள் நடந்த போது ஒருவர் எதிர்பட்டு “எக்ஸ்கியூஸ் மீ..இந்த தெரு எங்கே இருக்கு?” என்ற போதும் திரும்பி கூட பார்க்காமல் விரைந்து வீட்டுக்குள் நுழைந்தேன்.

அன்றே என் மனைவி கேட்டாளே,என்ன வச்சிருக்கீங்க இந்த பண்டல்ல, ஏன் நான் வீட்டில் இல்லாதப்ப எடுத்துப் பார்க்கிறீங்க? ஏதாச்சும் லஞ்சப் பணமா? ஆபீசில் வச்சிருந்தா மாட்டிப்போம்., கொஞ்ச நாட்கள் கழிச்சு மெள்ள வெளியே எடுக்கலாம்னா ஒளிச்சு வைக்கிறீங்களா?

வேணாமே இந்த பண்டில். விபரீதம் தெரியாம ஏன் இதை வாங்கி வந்தீங்க? எதுக்குங்க பேராசை..நம்மகிட்ட இருக்கிறதே போதாதா என்றெல்லாம்!!. கேட்டேனா நான்.. அவள் அந்த பண்டலை யாருக்கும் தெரியக்கூடாது என்றெண்ணி வீட்டில் உள்ள கட்டில் அடியில் வைத்திருப்பாள் என்று நான் நினைத்துப் பார்த்தேன்.

என் மனதில் தோன்றிய பயம் என்னை முழுசாய் தூங்க விடவில்லை. மறுபடி வீட்டை பூட்டிக்கொண்டு நான் எந்த குப்பை தொட்டியில் அந்த பண்டலை எறிந்தேனோ அங்கு போனேன்.

அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்க, ஒரு கூட்டம் அங்கு சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

.ஒருவர் “போலீசுக்கு போன் போட்டாச்சா? என்ற போது “பண்ணியாச்சு” என்றனர் சிலர்.. திடீரென பட, படவென வெடிக்கவும் ஆரம்பித்திருந்தது..

இதற்குள் அங்கிருந்த போலீசார் “தள்ளுங்க, தள்ளுங்க எல்லாரும்..ஏன் விபரீதம் தெரியாமல் இப்படி கூட்டம் போடறீங்க?உங்களுக்கெல்லாம் பயமேயில்லையா? யாராவது செத்து தொலைஞ்சா நாங்கள்ள பதில் சொல்லணும்?” என்றார் ஒரு போலீஸ்காரர்.ஒருவன் ஓடி வந்து அந்த போலீஸ்காரரிடம் —

குசுகுசுவென காதுகளில் எதையோ சொல்ல, அவர் “அப்படியா?அப்படியா? நீங்க பார்த்தீங்களா அந்தாளை? என்ற போது “பார்த்தேன்..ஆனா அப்ப இங்கே ஒரே கும்மிருட்டாயிருந்திச்சு.

அவன்கிட்டநான் இந்த ஏரியாவில் ஒரு விலாசம் கேட்டேன்.” என்ற போது அப்ப அவன் குரலை வச்சு அடையாளம் கண்டு பிடிச்சிரலாம் இல்லையா?” என்ற போது துப்பு சொன்ன அந்த நபர்

“சார் அவன் பலே கைகாரனாய் இருப்பான் போல.என் கேள்விக்கு பதிலே சொல்லாம விருட்டுனு போயிட்டான்”.

“எந்த பக்கமாய் போனான்?”

“இந்தப் பக்கமாய்தான் போனான்”.

“அவன் எங்கேயும் போயிருக்க முடியாது..சிடி பூரா அலர்ட் பண்ணியாச்சு..ஏற்கனவே சென்டிரல்லருந்து ஒரு ஸ்பெஷல் டீம் நாடு பூரா போய் ரொம்ப கவனமாய் எல்லாத்தையும் வாச் பண்ணிக்கிட்டிருக்கு..

அனேகமாய் இவன் இந்த வெடிகுண்டு அடங்கிய பண்டிலை இந்த குப்பை தொட்டில போட்டுட்டு போயிருப்பான்..கூடவே இன்னொரு ஆள் காஷுவலா பீடி வலிச்சுக்கிட்டு, எரிஞ்சுகிட்டிருக்கிற பீடியை யாரும் கவனிக்காதப்ப குப்பை தொட்டில போட்டுட்டு போயிருக்கலாம்..” என்ற போது இன்னொருவன் கேட்டான்..

“அவன் இங்கெனதான் எங்கேயாச்சும் மறைஞ்சு நின்னுக்கிட்டு நோட்டம் பார்த்துக்கிட்டிருப்பான்..எங்க கண்களிலிருந்து தப்பிக்கவே முடியாது..இப்ப இன்னம் கொஞ்ச நேரத்தில டாக் ஸ்குவாட் வரப்போகுது..அது எப்படியாச்சும் குற்றவாளியை கண்டு பிடிச்சிரும்..” என்ற போது என் சப்தநாடியும் ஒடுங்கி போயிற்று..

இப்படியான குழப்பத்துக்கிடையே மறுபடி காய்ச்சல் வர, விடு, விடுவென வீடு வந்து சேர்ந்தேன்..வாயிலிலேயே அந்த பெண் குழந்தை “அங்கிள் மறுபடி அந்த போலீஸ் அங்கிள் உங்களை தேடிக்கிட்டு வந்தார்.. என்றாள்

நடுநடுங்க வீட்டின் உள்புறம் விளக்கு கூட போடாமல் நான் பம்மிபதுங்கி இருந்த போது மறுபடி வாயிற்கதவு தட்டும் ஓசை… “யாரப்பா உள்ளே? கதவை திறக்க மாட்டியா?”என்ற பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

வந்திருப்பது நிச்சயம் போலீசாகத்தான் இருக்கும்..மற்ற குடித்தனக்காரர்கள் வந்து என் வீட்டு வாயிலில் குழுமிடும் முன் நானாகவே வெளியில் வந்துவிடுவது உசிதமென்று நினைத்து வெளியே வந்தால் அங்கு–

போலீஸ் உடையில் வந்திருப்பது என் பாலிய நண்பன் குமார்.. போலீஸில் உயர் பதவி வகிப்பதாக சொன்னவனுடன் எனக்கு தொடர்பே இல்லை சில வருடங்களாய்.

அதுவும் அவன் வட மாநிலத்துக்கு மாற்றலில் போனவன்..எங்கள் பாலிய வயதில் நாங்கள் இருவரும் நகமும், சதையுமாய், அதையும்விட ஒரு படி மேலாய் இருந்தவர்கள்.. அவன் என் வீட்டிலோ, இல்லை நான் அவன் வீட்டிலோ இருப்போம்..விளையாடுவோம்..என்ன விளையாட்டு தெரியுமா?

திருடன்–போலீஸ் விளையாட்டு..எப்போதுமே நான் போலீசாகவும் குமார் திருடனாகவும் தான் விளையாடுவோம்..

அவன் ஒரு நாள் என்னிடம் “இரு, இரு, பார்த்துக்கிட்டே இரு..இப்ப வேணா இந்த விளையாட்டில் நீ போலீசாகவும் நான் திருடனாகவும் இருக்கலாம். ஆனா நான் படிச்சு முடிச்சதும் நிச்சயம் போலீஸ் வேலைக்குத்தான் போவேன்..”என்றவனிடம்,

“சரி அதுக்கென்ன போய்க்கோயேன்” என்பேன்.

அப்போது அவன் “என்னடா என்னை எகத்தாளமா பண்றே? பார்த்துக்கிட்டே இரு..நான் போலீசானதும் ஒரு நாள் உன்னை கைது பண்ணுவேன்” என்று தமாஷாய் சொன்னதை அமல்படுத்த

இப்போது வந்திருக்கிறானா? அதனால்தான் பக்கத்து வீட்டு குழந்தையிடம் சொன்னானோ என்னை கையும் களவுமாய் பிடிக்கப்போவதாய்..போயும், போயும் ஒரு நண்பன் கையாலா நான் கைதாக வேண்டும்..

இப்படி பலவாறாய் எண்ணியிருந்த வேளையில் நண்பன் குமார் “என்னடா பழி? திகைச்சு போயிட்டே? வா..ஒரு கப் காபி சாப்பிடுனு கூட சொல்ல மாட்டியா? கஞ்சப்பிசினாறி.

அதான் நான்வந்திருக்கேன்னு தெரிஞ்சதும் ஓடி ஒளிஞ்சுகிட்டியா? .. அண்ணி எங்கேடா? என்றவன் என்னை தொட்டுப் பார்த்து

“அடப் பாவி! ஏண்டா உடம்பு இப்படி தகிக்குது, காய்ச்சலா” என்றவனிடம் எதுவும் சொல்லவில்லை..

என் மனைவி காஞ்சீபுரம் போயிருக்கிறாள் என்பதை தவிர..அதாவது என் மன உளைச்சலை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, என்னதான் அவன் நண்பனாய் இருந்தாலும்..

“சரிவா டாக்டராண்ட கூட்டிட்டு போறேன் ஜீப்பிலேயே” என்ற போதும் தயங்கினேன்..

“என்னடா பழி ஜீப்புனு சொன்னதும் பயமா? குற்றம் பண்ணினவங்கதானேடா ஜீப்பில் ஏற பயப்படணும்? நீ என்ன தப்பு பண்ணினே? வா ” என்றவன் பேச்சைத் தட்ட முடியாமல்

” டாக்டர் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அருகில் உள்ள ஹோட்டலுக்கு போனோம்.

.அப்போதும் என் மன உளைச்சலை வெளிக் காட்டிக் கொள்ள முயலவில்லை நான் சகஜமாய் இருப்பது போல காட்டிக்கொள்ள வேண்டி..இருந்தாலும் சம்பிரதாய நிமித்தம் ஏதோ பேச வேண்டி அவனிடம்,

“என்ன திடீர்னு தமிழ் நாடு விஜயம்?” என்ற என்னிடம் அவன் “இப்ப ஊரெங்கும் பாம் பிளாஸ்ட் அதிகமாயிருக்கு..இங்கே என்னை ஸ்பெஷல் டியூடி போட்டிருக்காங்க..அதில ஒரு விசேஷம் பாரு..

நான் காலையில் சென்னையில் வந்து இறங்கறதுக்குள்ள இங்கே உங்க ஏரியால ஒரு தீவிரவாதி பாம் வச்சிருக்கிறதா செய்தி வந்தது..

உடனே பாம் ஸ்குவாடை அலர்ட் பண்ணிட்டு என்னனு தொ¢ஞ்சுக்கிட்டு தேவைப்பட்டா டாக் ஸ்குவாடையும் களத்தில் இறக்கலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்த வேளையில் தான், நீ இந்த ஏரியால இருக்கிறது நினைவுக்கு வந்திச்சு..

அப்படியே உன்னையும் பார்த்து அலர்ட் பண்ணிட்டு போகலாம்னு வந்தா பழி உன்னை காணலை..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் அவனுக்கு வாக்கி, டாக்கியில் ஒரு செய்தி வந்தது..

“அப்படியா? அப்படியா? அப்ப என் வேலை சுலபமா போயிருச்சு” என்றவன் என்னை திரும்பி பார்த்த போது வெடவெடயென நடுக்கிக் கொண்டிருந்தது என் உடம்பு..உடனே அவன் “பழி, ஏண்டா பொய் சொல்றே ஒண்ணுமில்லைனு?

இப்பவே வா என்கூட” என்றவனிடம் நான் “என்ன பொய் சொன்னேன்? எங்கே கூப்பிடறே என்னை?” என்றேன்..

அவன் மழுப்பலாய், உன்னை போலீஸ் ஸ்டேஷனுக்குத்தாண்டா கூப்பிடறேன்..அங்கே கொஞ்சம் வேலை இருக்கு..அதை முடிச்சிட்டு உன்னை டாக்டராண்ட கூட்டிட்டு போறேன்”என்றான்.

-“ஆமாண்டா..இங்கே ஏதோவொரு தீவிரவாத கும்பல்தான் ஒரு மாநகராட்சி குப்பை தொட்டியில் பாம் வச்சிருக்கிறதாகவும் புகையறதாகவும் அப்பப்ப கொஞ்சம் வெடிக்கிறதாகவும் செய்தி வந்தது

எனக்கு..பாம் ஸ்குவாடை வரச்சொல்லிட்டு அதுக்குள்ளாற உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தா இங்கே அண்ணியையும் காணோம்..நீயும் காய்ச்சலில் அவதிப்பட்டுக்கிட்டிருக்கே..கேட்டா

எனக்கொண்ணுமில்லைனு பொய் சொல்றே..இப்பத்தான் எனக்கு நியூஸ் வந்திச்சி பார்த்தியே! அந்த குப்பை தொட்டில ஒண்ணும் பாம்கள் இல்லையாம்..

எவனோ தீபாவளிக்கு வாங்கினதில் மீந்து போன பட்டாஸை கொணாந்து குப்பை தொட்டில போட்டுட்டு போயிருக்காப்பல..

அப்ப அங்கே ஒண்ணுக்கு இருக்க வந்த எவனோ ஒருத்தன் பீடி வலிச்சுட்டு மிச்சம் உள்ள பாதி பீடியை அணைக்காம அந்த குப்பை தொட்டில போட்டு போயிருக்கான்..நமத்து போன பட்டாசு எப்படி வெடிக்கும்?புகைஞ்சுக்கிட்டு இருந்திருக்குபோல.

எப்படியோ பாம்னு எதுவுமில்லாம இருந்ததே எனக்கு ஆறுதலாய் இருக்குடா நண்பா..நீ ஒருமுறை ஏன் மும்பைக்கு வரக்கூடாது அண்ணியையும் கூட்டிக்கிட்டு” என்ற போது உடல் வியர்த்துவிட. “இப்பத்தாண்டா உனக்கு காய்ச்சல் விட்டிருக்கு” என்றவனை பார்த்து “ஆமாம்” என்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *