சிறுகதை

பயம் | ஆவடி ரமேஷ்குமார்

அடையாறு.

என்ன நடக்கும் என்பதை டாக்டர் விளக்கிச்சொல்ல காலுக்கு கீழே பூமி நழுவுவது போலிருந்தது சிவராமனுக்கு.

” பணத்துக்கு ஏற்பாடு செய்திட்டு சீக்கிரம் வரேன் டாக்டர்”

சொன்ன சிவராமன் சென்னை சென்ட்ரலுக்கு விரைந்தான்.சேலம் போக கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி அமர்ந்தான்.

காட்பாடியை தாண்டும் போது வக்கீல் போன் செய்து ‘ அந்த’ தகவலை சொன்னார்.

இடிந்து நிலை குலைந்து போனான் சிவராமன்.

சேலம்.

வீட்டுக்குள் நுழைந்தான் சிவராமன்.

அம்மா வள்ளியம்மாள், தம்பி சீனிவாசன் இருவரும் முகத்தை தொங்கப்போட்டபடி சோகத்துடன் இருந்தனர்.

” என்ன சிவராமா… கோர்ட்ல நமக்கு சேர வேண்டிய பரம்பரை சொத்து சம்பந்தமா தீர்ப்பு இப்படி மாறிப்போயிடுச்சே. வக்கீல் சொன்னாரு”அம்மா அங்லாய்த்தாள்.

” என்னம்மா பண்றது… எல்லாம் பணம்! அப்பாவுக்கு சேர வேண்டிய சொத்து தான்னு நான் பத்து பண்ணிரண்டு சாட்சிகளை ஆதாரமா கோர்ட்ல கொண்டு போய் நிறுத்தினேன். சாட்சிகளையெல்லாம் பெரியப்பா விலைக்கு வாங்கி பல்டி அடிக்க வச்சிட்டார்ம்மா!”

தம்பி சீனிவாசன், ” இருந்தாலும் இது ரொம்ப அநியாயம்ண்ணா. இருபது வருஷ வழக்கு! அப்பா இறந்து பத்து வருஷம் ஆச்சு. அப்பாக்கு பின்னால நீ வழக்கை கண்டிநியூ பண்ணினே. முப்பது லட்சம் சொத்து நம்ம கைக்கு எப்படியும் வரும்னு நினைச்சு நாலு லட்சம் வரை நீ செலவு பண்ணிட்டே.இப்ப உனக்கும் உடம்பு சரியில்லே.அந்தப் பெரியப்பனை நான் சும்மா விடமாட்டேண்ணா!” என்று ஆவேசப்பட்டான்.

” டேய்…சீனி! அவசரப்படாத. நியாயம் கிடைக்கும்னு இருபது வருஷமா காத்திருந்தவன்டா நானு. நானே இதை டீல் பண்ணிக்கிறேன். நீ உன் படிப்பை மட்டும் பாரு”

” இனி என்ன சிவராமா நீ செய்யப்போறே?”என்று கேட்டாள் அம்மா.

” அம்மா…பொறுத்திருந்து பாருங்க. ப்ளீஸ்!”

ஒரு வாரம் கழிந்தது.

திடீரென்று முப்பது லட்சம் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்களை வீடு தேடி வந்து திருப்பி கொடுத்து விட்டு போனார் சிவராமனின் பெரியப்பா. கூடவே நஷ்ட ஈடாக ஐந்து லட்சத்தையும் சிவராமனிடம் கொடுத்தார்.

வள்ளியம்மாவால் இதை நம்ப முடியவில்லை.

சிவராமனிடம் கேட்டாள்.

” என்ன மாயம்டா பண்ணினே நீ?!… தீர்ப்புக்கு பின்னால சம்பந்தம் இல்லாத சொத்து நம்ம கைக்கே வந்து சேர்ந்திடுச்சே!”

நடந்ததை விளக்க ஆரம்பித்தான் சிவராமன்.

” அம்மா…எனக்கு ரெண்டு வருஷமா கேன்ஸர். சென்னை அடையாறில் உள்ள ஆஸ்பிடலில் நான் டிரீட்மெண்ட் எடுத்திட்டு வரேன். இது உங்களுக்கு தெரியும். ஏற்கனவே மூன்று லட்சம் செலவு பண்ணியாச்சு. இன்னும் சில லட்சம் தேவைப்படுது.

டாக்டர், ‘ பணத்தை கட்டிடுங்க; ட்ரீட்மெண்ட்டை கண்ட்டிநியூ பண்ணலாம்’ னார். பணம் இல்ல.’ ஏற்பாடு பண்ணி கொண்டு வரேன் சார்’னு சொல்லிட்டு வந்துட்டேன்….

…..இப்ப, அப்பா சொத்து சம்பந்தமா நமக்கு சாதகமா தீர்ப்பு வரும். அதை வித்து கட்டலாம்னு நெனச்சிட்டிருந்தேன். கணக்கு தப்பாயிடுச்சு. இனி நான் ட்ரீட்மெண்ட் எடுக்கலேனா செத்திடுவேன். அதான் இருபது வருஷமா தீர்ப்புக்காக காத்திருந்தவன் அது இல்லேனு ஆனப்புறம் … இப்ப பெரியப்பனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடலாம்கிற முடிவோட கொலைவெறியோடு போனேன். நம்ம கஷ்டத்தை முதல்ல சொல்லிட்டு பெரியப்பாவை ஏன் நான் கொல்ல வந்தேன்னும் அவர்கிட்ட சொல்லிட்டு அவரைக் கொல்ல முயற்சி எடுத்தேன்.

அவ்வளவுதான்! அவர் உயிருக்கு பயந்து என் கால்ல விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டார். அப்படியே அந்தர்பல்டியும் அடிச்சிட்டார்ம்மா! அதனால் வந்தது தான் இந்த சொத்தும் பணமும்!”

அம்மா, ” கடவுளே..! ..?!” என்று நிம்மதி அடைந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *