செய்திகள்

பயணிகள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு இருக்கை பெறலாம்

சென்னை, மே.10-

பயணிகள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

கட்டணம் கிடையாது

கடந்த 5-ந்தேதியன்று போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையின் போது போக்குவரத்துத்துறை 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை கட்டணம் பெறுவதற்கு பதிலாக இனிவரும் காலங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ஏதும் பெறப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

5 வயதுக்கு மேல் முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரை கட்டணம் பெறவேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான பயணச்சீட்டு ரத்து பற்றி பொதுமக்கள் சிலரின் கருத்துகள் மற்றும் சந்தேகங்கள் செய்தித்தாளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில், பொதுமக்கள் சிலர் தங்களது குழந்தைகளை மடியில் அழைத்து செல்வது அசவுகரியம் ஏற்படும் எனவும், விருப்பம் உள்ளவர்கள் தங்களது 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு பயணச்சீட்டு பெற்று பயணிப்பது தேவை என்று குறிப்பிட்டு உள்ளனர்.

விரும்பினால் பெறலாம்

தற்போதும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலமாக முன்பதிவு செய்யும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அவர்களது குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை தொடர்ந்து இருக்கும். மேலும் பயணிகள் பயணிக்கும்போது அவர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் அவ்வாறே தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்துக்கழக பஸ்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும்.

எனவே தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் அரை கட்டணம் சம்பந்தமாக 3 வயது முதல் 12 வயது என்பதற்கு பதிலாக 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரை கட்டணம் வசூலிக்கலாம் என உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.