மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தகவல்
சென்னை, மே.4-
சென்னையில் கூட்டநெரிசலை தவிர்த்து பயணிகளுக்கு நிறைவான சேவை அளிக்க 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரெயில்கள் வாங்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி கூறினார்.
சென்னையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 பெட்டிகள் கொண்ட 50 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் மேலான பயணிகளுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு நாளைக்கு சுமார் 12 லட்சம் பேர் பயணிக்க வேண்டும் என்பதே சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் இலக்கு. இதில் அலுவலக நேரமான காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரையிலும் ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. பல ரெயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் நின்றுகொண்டே பயணிக்கின்றனர். பல ரெயில் நிலையங்களில் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் பலர் பயணிப்பதில் சிரமப்படுகின்றனர். இதனால் 6 பெட்டிகளை கொண்ட ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவனமும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதுமான ரெயில் பெட்டிகள் இல்லாததால், எதிர்பார்த்த வளர்ச்சி இலக்கை அடைய முடியவில்லை. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய ரெயில்கள் வாங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன திட்ட இயக்குனர் டி.அர்ச்சுனன் கூறும்போது, ‘ஆசிய வளர்ச்சி வங்கியுடன் பேசி வருகிறோம். அவர்கள் மூலம் நிதி பெற்று, இன்னும் நிறைய ரெயில்களை வாங்கலாம் என்று இருக்கிறோம். விரைவில், 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய ரெயில்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. ஒவ்வொரு ரெயிலிலும் சுமார் 1,900 பயணிகள் வரை பயணிக்க முடியும்’ என்றார்.