சென்னை, அக். 4–
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் இன்று 5 வருகை விமானங்கள் மற்றும் 5 புறப்பாடு விமானங்கள் என 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கை, பெங்களுரு, மும்பை, அந்தமான், மதுரை ஆகிய இடங்களில் இருந்து வருகை தரும் 5 விமானங்களும், சென்னையில் இருந்து இலங்கை, பெங்களுரு, மும்பை, அந்தமான், மதுரை ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து காலை 7.45 மணிக்கு அந்தமான் புறப்பட்டு செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு பெங்களூர் புறப்படும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூரு செல்லக்கூடிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பிற்பகல் 3.25 மணிக்கு மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திற்கு காலை 7.05 மணிக்கு பெங்களூரில் இருந்து வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் 12.05 மணிக்கு, மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் 1 மணிக்கு, அந்தமானில் இருந்து வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.45 மணிக்கு, மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், மாலை 3.40 மணிக்கு, இலங்கையில் இருந்து வரும் ஏர்இந்தியா விமானம், ஆகிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவைகள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதால் பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.