சிறுகதை

பயணம்..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

இரவு மணி பத்தைக் கடந்து நின்றது .

கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக இருந்தாலும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. ராஜேஸ்வரி பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள். கையில் இரண்டு பைகள்.

பேருந்து வரும் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து நிறைய பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அவள் பதிவு செய்யப்பட்டிருந்த பேருந்து வந்தபாடில்லை.

திசைகள் முழுதும் திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள். குமார் தன் உறவினர்களை அதே இடத்தில் பேருந்தில் ஏற்றி விட்டு அவன் வீட்டிற்கு செல்வதற்காக ஓலோ இரு சக்கர வாகனத்தைப் பதிவு செய்தான்.

எங்க இருக்கீங்க?”

என்று ஒரு இரு சக்கர வாகன ஓட்டியைக் கேட்க

“ப்ரோ இன்னும் பத்து நிமிடத்துல அந்த இடத்துக்கு வந்துருவேன். நீங்க அங்கேயே இருங்க”

என்று சொன்னான். வாகன ஓட்டி ராஜேஸ்வரி சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை. குமாரிடம் வந்து

“அண்ணே இது எந்த இடம்னு சொல்லுங்க “

என்று அவள் செல்போனை குமார் கையில் கொடுத்தாள். அதை வாங்கிய குமார்

“சொல்லுங்க”

என்ற போது எதிர் திசையில் இருந்த ஒரு தனியார் பேருந்து நடத்துனர் பேசினான்

” நாங்க மதுரவாயில்ல இருக்கோம்”

என்று அந்த நடத்துனர் சொன்ன போது

“இவங்க கோயம்பேடு பக்கத்துல நிக்கிறாங்க. எப்படி இவங்களை கடந்து

போனீங்க ?. ” என்று குமார்

” நாங்க என்னங்க பண்றது? புக் பண்ணவங்க தான் கரெக்டா பஸ்ல ஏறனும். நாங்க பத்து நிமிஷம் நின்னு பாத்தோம். அவங்க ஏறல. அதான் ஆளு இல்ல போலன்னு வந்துட்டோம் “

என்று சாதாரணமாகப் பதில் சொன்னான் நடத்துனர்.

“இது தவறில்லையா? பொம்பளப் புள்ளைய நடுரோட்டுல விட்டுட்டு போயிருக்கீங்க. இது தப்பு “

என்று சொன்னபோது அருகில் இருந்த ராஜேஸ்வரி அழுதே விட்டாள் கண்கள் இரண்டும் குளமாக கண்ணீர் சிந்தியபடி இருந்தாள்.

‘ஒன்னும் வருத்தப்படாதீங்க’ நான் உங்களை அழைச்சிட்டு போறேன்” என்ற போது

” நீங்க பஸ்ஸ அங்கே நிப்பாட்டுங்க. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்கள கூப்பிட்டு வந்துடறேன்” என்று சொன்னான் குமார் .

“சரி உங்களுக்காக ரொம்ப நேரம் நிக்க முடியாது. சீக்கிரம் வாங்க ” என்றான் அந்த நடத்துனர் .

ஓடும் ஆட்டோவை மறித்து ராஜேசுவரியை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் விரைந்தான்.

அவன் புக் செய்திருந்த இருசக்கர வாகனத்தை பின்னாலே வரச் சொன்னான் குமார். போகும் திசையெல்லாம் திரும்பத் திரும்ப போன் செய்து அந்த தனியார் பேருந்தை நிற்க சொன்னான் .

” சார் சீக்கிரம் வாங்க .எவ்வளவு நேரம் நிக்கிறது ? எல்லா பயணிகளும் திட்டுறாங்க “

என்று நடத்துனர் சொல்ல

“ஹலோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க “

என்று சொல்லிக் கொண்டே சென்றான் குமார். அந்தப் பெண்மணிக்கு ஏகப்பட்ட வருத்தம் எப்படியும் பேருந்து பிடித்து விடலாம் கவலை வேண்டாம்” என்று அந்த பெண்ணுக்கு தைரியம் சொல்லிக் கொண்டே வந்தான் குமார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தனியார் பேருந்து நிற்கும் இடத்தில் போய் நின்றது ஆட்டோ. கண்களில் நீர் நீர்ப்பெருக

” அண்ணா ரொம்ப நன்றி “

என்று சொல்லிவிட்டு அந்தப் பேருந்தில் ஏறினாள் ராஜேஸ்வரி.

குமார் புக் செய்திருந்த இருசக்கர வாகனமும் பின்னாலேயே வந்தது .யார் என்றே தெரியாத அந்தப் பெண்மணியைப் பஸ்ஸில் ஏற்றிவிட்டு தன் இரு சக்கர வாகனத்தில் ஏறித் திரும்பும்போது அவனுக்கு மிகப்பெரிய சந்தோசம். ராஜேஸ்வரி திரும்ப அழைத்திருந்தாள்.

“அண்ணே வீட்டுக்கு போய்ட்டீங்களா? சாப்பிட்டீங்களா? என்று கேட்டாள் .

“சாப்பிட்டேன். நீங்க பத்திரமா போங்க .ஏதாவதுன்னா என்னை கூப்பிடுங்க ” என்றான் குமார்.

” கண்டிப்பா அண்ணே. இந்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன் .யாருன்னே தெரியாத என்ன ஆட்டோல அழைச்சிட்டு வந்து கரெக்டா ஏத்தி விட்டீங்க. இந்த சென்னை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது. பயமா இருந்தது. நீங்க கண்ணியமா என்ன கூப்பிட்டு வந்து பஸ் ஏத்தி விட்டிங்க. என் வாழ்நாள் பூராம் இத நினைச்சிட்டு இருப்பேன்” என்று பேசும்போதும் அவளுக்கு கண்ணீர் பெருகியது.

” ஒன்னும் வருத்தப்படாதீங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் “

என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவனுடைய வங்கிக் கணக்கில் ஒரு பெருந்தொகை வந்து விழுந்திருந்தது.

” என்ன இது? இவ்வளவு பணம் விழுந்திருக்கிறது ?

என்று ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்து பணத்தை போட்ட நபருக்கு போன் செய்தான் குமார்

“சார் வணக்கம். பணம் வந்துருச்சு”

என்ற போது

” ரொம்ப நாளா உங்களுக்கு கொடுக்க நினைச்சிட்டு இருந்தேன். கொடுக்க முடியல. இன்னைக்கு தான் வந்திருக்கு. உங்க வேலையை நீங்கள் பாக்கலாம்”

என்று அந்த நண்பர் சொல்ல.

“நாம் தெரியாத ஒருவருக்கு செய்யும் உதவி ஏதோ ஒரு வகையில் நமக்கு வந்து நன்மை செய்கிறது”

என்று நினைத்த குமார் இனிமேலும் நாம் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தன் இல்லத்திற்குள் நுழைந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *