அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுடெல்லி, ஏப்.25-
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்கள், பயங்கரவாத முகாம்களை அழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொண்டனர்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல், இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கி இருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று மாலையில் நடந்தது.
இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து ெகாண்டனர்.
மேலும் திருச்சி சிவா (தி.மு.க.), சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி),சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்-சரத்பவார்) உள்பட பல்வேறு கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பஹல்காம் தாக்குதல் குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங் களையும் அரசு சார்பில் கட்சித்தலைவர் களுக்கு விளக்கப்பட்டது.
பின்னர் இந்த விவகாரத்தில் அந்தந்த கட்சிகளின் கருத்துகள் கேட்கப்பட்டது.
இதற்கு, நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சித்தலைவர்கள் அனைவரும் பயங்கரவாத பிரச்சினையை கையாளுவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலை அரங்கேற்றி வரும் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசை கேட்டுக்கொண்டனர். அதேநேரம் காஷ்மீரில் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக குறிப்பாக பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தபோதும் கண்காணிப்பை பலப்படுத்தாதது குறித்து எதிர்க்கட்சிகள் குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய் விமர்சித்தார்.
எனினும் இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிப் பதாகவும் அவர் கூறினார்.
பின்னர் அரசு சார்பில் பேசிய மத்திய அமைச்சர்கள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலாவை சீர்குலைக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தனர்.
முன்னதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு கட்சித்தலைவர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.