செய்திகள்

பயங்கரவாத நிதித்திரட்டலை தடுக்க இந்தியாவில் நிரந்தரச் செயலகம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

டெல்லி, நவ. 20–

பயங்கரவாதத்துக்கான நிதித் திரட்டலைத் தடுக்க, இந்தியாவில் நிரந்தரச் செயலகம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிரான சர்வதேச நிலைப்பாடு என்ற கருப்பொருளின் அடிப்படையிலான “பயங்கரவாதத்திற்கு நிதி கிடையாது” என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 20 நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 450 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்று நிறைவுரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:–

“பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் இந்த நிகழ்வு சிறந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சுமார் 12 நாடுகளுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதம் எப்போதும் ஜனநாயகம், மனித உரிமை, பொருளாதார முன்னேற்றம், உலக அமைதி ஆகியவற்றுக்கு எதிரானது. எனவே, பயங்கரவாதம் வெற்றி பெறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. இதை உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டு உறுதி செய்ய வேண்டும்.

நிரந்தர செயலகம் அமைக்கப்படும்

பயங்கரவாதிகள் தற்போது புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் இலக்கை அடைய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக புதிய வழிகளில் தாக்குதல் நடத்துதல், இளைஞர்களை கவர்தல் மற்றும் நிதி திரட்டுதல் போன்றவற்றில் அவர் கை தேர்ந்துள்ளனர். அதே நேரத்தில் பயங்கரவாதத்தை பரப்புவதிலும், தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்வதிலும் பயங்கரவாதிகள் டார்க் நெட் எனும் முறையை கையாண்டு வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவது பெரிய அளவில் நடைபெறுவது மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

பயங்கரவாத நிதித் திரட்டலை முடக்,க இந்தியா பல்வேறு முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, பயங்கரவாத நிதி திரட்டலை கண்காணித்து தடுக்க, நிரந்தர செயலகம் ஒன்றை இந்தியாவில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *