புதுடெல்லி, நவ.18–
தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்யும் ஆதார வேர்களை அழிக்க வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாதத்துக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் 3வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நாளான இன்று பிரதமர் மோடி பேசினார்.
மாநாட்டில் பேசிய பிரதமர், “தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அதே ஒரு மாதிரியான கண்டனத்துக்கு உரியது தான். அதேபோல் தீவிரவாதம் எங்கு நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை அவசியமானது.
இந்த உலகம் தீவிரவாதத்தின் கோர முகத்தை உணரும் முன்னரே இந்தியா அதன் தாக்கத்தை வெகு காலத்திற்கு முன்னர் சந்தித்துவிட்டது. இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு பெயர்களில், வகைகளில் தீவிரவாதம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் தீவிரவாதத்துக்கு இழந்துள்ளோம். ஆனாலும் நாம் துணிச்சலுடன் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியுள்ளோம்.
ஒரே ஒரு தாக்குதல் என்றாலும் அது தீவிரவாதம் தான். ஒரே ஒரு உயிர்ப்பலி என்றாலும் அது பெரிய இழப்பு தான். அதனால் தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது.
தீவிரவாதத்தின் நீண்ட கால தாக்கம் என்பது ஏழை மக்கள் மீதே பெருமளவில் பிரதிபலிக்கிறது. உள்ளூர் பொருளாதாரத்தை பாதிக்கிறது. எப்போதும் தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதியில் தொழில் முதலீடு செய்ய யாரும் விரும்புவதில்லை.அதனால் அந்தப் பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் வேரைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒடுக்குமுறைக்கு அழைப்பு விடுத்த அவர், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் எந்த நாட்டிலும் இடம் பெறக்கூடாது என்றார்.
மேலும் அவர் பேசுகையில், சில நாடுகள் தங்கள் வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன என்று கூறினார். இந்த நாடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பேசினார்.