செய்திகள் போஸ்டர் செய்தி

பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை

பிஷ்கெக், ஜூன்.14–
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்தும், ஒற்றுமையுடனும் போராட வேண்டும் என ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகரில் ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ஈரான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:–
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தேவை உள்ளது. ஒரு நாடு தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை கட்டமைத்து விடுவதை ஒரு கொள்கையாகவே பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையை ஒழித்துக் கட்ட அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
பயங்கரவாத இயக்கங்களை ஆதரிப்பதையும், நிதிஉதவி செய்வதையும் தடுத்து நிறுத்த வேண்டும். சமீபத்தில் நான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போது ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடித்த தூய அந்தோணியார் கோவிலுக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன். அந்த பயங்கரவாத சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது இப்பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கிறது.
இந்தியாவின் கனெக்டிவிட்டி திட்டங்கள் மதிக்கப்பட வேண்டும். வெளிப்படை தன்மையான சுயசார்பு கொண்ட அந்த திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். எங்களது இலக்கானது ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துவது தான். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் மற்றும் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் வளர்ச்சியானது மிக முக்கியமானதாகும். ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளிடையே வெளிப்படையான வர்த்தக உறவு அவசியமான ஒன்று. ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோடி பேசியபோது, அந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் அமர்ந்து பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்தார். ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட மோடி பாகிஸ்தான் பிரதமரை ஒருமுறை கூட கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாநாட்டின் இடைவேளையின் போது ஈரான் அதிபர் காசன் ரகானியை சந்தித்து பேசினார்.
பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *