சென்னை, மார்ச். 7–
நாளை (8ந் தேதி) உலக மகளிர் தினம். இதையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
‘‘மகளிர் உரிமை நாட்டின் வலிமை” என்பதைக் கருத்தில் கொண்டு, மகளிரின் உரிமைகள் அனைத்தையும் பெற்றுத் தர அனைவரும் முன்வர வேண்டுமென்ற தன்னுடைய அவாவினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சியைப் போற்றும் வகையிலும், சமுதாயத்திற்கு பெண்கள் தந்த பங்களிப்பினை பாராட்டும் வண்ணமும், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் ஒவ்வோராண்டும் மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த இனிய நாளில் எனது நெஞ்சார்ந்த உலக மகளிர் தின நல்வாழ்த்துகளை அனைத்து மகளிருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘வாழ்க்கை என்னும் தேர் ஓட வேண்டுமானால் இரு சக்கரங்கள் தேவை” என்பதற்கேற்ப, நம் நாட்டினுடைய மக்கள்தொகையில் பாதிக்கு மேல் பெண்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்கான பல நலத் திட்டங்களை அறிவித்ததோடு, பெண்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கி, அமைச்சர்களாக்கி அதிகாரத்தில் பங்களித்தவர் பாரதி கண்ட புதுமைப்பெண் புரட்சித் தலைவி அம்மா.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அம்மாவின் கனவு பாரதப் பிரதமரால் நனவாக்கப்பட்டு இருப்பதை இந்தத் தருணத்தில் மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறேன். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் நாள் மகளிர் வாழ்க்கையில் ஒரு பொன்னாள். இந்தச் சட்டம் அமைய தூண்டுகோலாய் இருந்தது உலக மகளிர் தினம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இருப்பினும், மகளிருக்கான உரிமைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல துறைகளில் பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு முழுவதுமாக அளிக்கப்படவில்லை. தற்போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பெண்ணின ஒடுக்குமுறை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவைகள் எல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பு அனைவரிடையேயும் நிலவுகிறது.
அனைத்து மகளிருக்கும் எனது இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.