நியூயார்க், டிச. 24–
பனாமா கால்வாயை கைப்பற்றப் போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்து அதிரடியை கிளப்பி உள்ளது, உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, தங்களிடம் இருந்த சிறந்த தொழில்நுட்பத்தால் 1904 ஆம் ஆண்டில் பனாமா கால்வாயை நேர்த்தியாக மீட்டமைத்து, பின் பராமரித்து வந்ததுடன், அமெரிக்கா 1999 ஆம் ஆண்டில் பனாமா நாட்டின் வசம் கால்வாயை முழுமையாக ஒப்படைத்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பனாமா கால்வாயை கைப்பற்ற போவதாக அறிவித்து உலக வர்த்தகத்துக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
பனாமாவின் சிறப்பு
மிக சிக்கலான வடிவமைப்பை கொண்ட பனாமா கால்வாயில் பிரம்மாண்ட கப்பல்கள் செல்லும் அழகை காண்பதே தனி அனுபவம். சுமார் 82 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய், வடக்கு மற்றும் தென் அமெரிக்காவுக்கு இடையே அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கிறது.
1914 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த பனாமா கால்வாய், தாழ்வான பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு கப்பல்களை உயர்த்தும் வகையில் திறமையான பொறியியல் கட்டமைப்பை கொண்டது. உலக வர்த்தகத்தில் இது ஒரு புரட்சிகர கட்டமைப்பாக பார்க்கப்படுகிறது.