சிறுகதை

பந்தி – ராஜா செல்லமுத்து

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து என்ற பழமொழியின் அர்த்தம் வேறொரு பொருளைத் தந்தாலும் பந்திக்கு முந்து .படைக்குப் பிந்து என்பது வாழ்க்கை வழக்கில் சாப்பாட்டிற்கு முந்து போருக்குப் பிந்து என்று விளக்கமாகிவிட்டது

முருகன் அப்படித்தான் இருந்தான் சாப்பாட்டிற்கு அலையும் ஆளல்ல என்றாலும் தன் கௌரவத்திற்கும் தன் நடவடிக்கைக்கும் ஏற்றார் போல் இருந்தால் மட்டுமே இறங்கி சாப்பிடும் குணம் உள்ளவன். தன்னுடைய தராதரம் கொஞ்சமாவது அங்கு குறைபட்டிருந்தால் எத்தகைய பந்தியாக இருந்தாலும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரும் பிடிவாதக்காரன் .

தடபுடலான ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு முருகனும் நண்பர்களும் புடை சூழச் சென்று இருந்தார்கள்.

அந்தக் காலத்தில் எல்லாம் உறவினர்கள் .நண்பர்கள் , திருமணம் செய்பவர்களின் ஜாதியை விட்டு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று வந்திருந்தால் அவர்களை எல்லாம் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துக் கொண்டு போய் தனி இடத்தில் அல்லது கௌரவமாக சாப்பாடு கொடுக்கும் வழக்கம் அன்று இருந்தது. அதையும் அவர்கள் அப்படித்தான் எதிர்பார்த்து அமர்ந்திருப்பார்கள் .தன்னை யாரும் சாப்பிட கூப்பிடவில்லை என்றால் அவர்கள் நடையைக் கட்டி விடுவார்கள் .அதுவே பெரிய பிரச்சினையாகப் போய்விடும். என்னை யாரும் சாப்பிட அழைக்கவில்லை. அதனால் நான் வந்து விட்டேன் என்று குறைபட்டு சண்டை சச்சரவுகள் வந்த காலங்களும் கூட உண்டு.

ஆனால் நிலைமை இப்போது அப்படி இல்லை. திருமணம், வரவேற்பு முடிகிறதோ இல்லையோ? பந்தியில் அமர்ந்து வயிற்றுக்கு சாப்பிட்டு விட்டு வந்து விட வேண்டும் என்பதுதான் இப்போது விழாக்களுக்கு செல்பவர்களின் நிலை.

திருமண வீட்டுக்காரர்கள் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை சிறப்பாக அழைத்துக் கொண்டு யாரும் நம்மை சாப்பிடச் சொல்ல மாட்டார்கள் .நாமளே போய் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். அதுவும் முன்னால் அமர்ந்து சாப்பிடுபவன் நிம்மதியாக சாப்பிட முடியாமல், முதுகிற்கு பின்னே முன்பதிவு செய்து நின்று கொண்டிருப்பார்கள். சாப்பிட்டுக் கொண்டிருப்பவன் பின்னால் இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் எப்படி சாப்பிட முடியும்?

ஐயோ நமக்கு பின்னால் ஆட்கள் ரெடியா இருக்கிறார்கள்? தயாராக இருக்கிறார்கள். நாம சாப்பிட்டு முடிக்க வேண்டுமே? என்று அவசர அவசரமாக அள்ளி உள்ளே தள்ளிவிட்டு ,இது என்ன கொடுமை என்று வந்து விடுவது தான் இன்றைய பந்தியின் பழக்க வழக்கமாக இருக்கிறது.

முருகன் தன் நண்பர்கள் புடை சூழ ஒரு திருமண வரவேற்பை முடித்து பந்திக்கு மேலே சென்றான். திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை பெண் அருகில் இருக்கும் கூட்டத்தை விட சாப்பிடும் இடத்தில் 20 மடங்கு கூடி நின்று கொண்டிருந்தார்கள்.

அடப்பாவிகளா இவங்க எல்லாம் கல்யாணத்துக்கு தான் வந்தாங்களா ? இல்ல சாப்பிட வந்தாங்களா ? என்று சிரித்துக் கொண்டே வருத்தப்பட்டார்கள் முருகனும் நண்பர்களும்

முருகா எவ்வளவு கூட்டம் இருக்குன்னு பாரு ? சாப்பிடலாமா வேண்டாமா? என்று அவனின் நண்பன் வாணன் கேட்டான்.

சாப்பிட்டு தான் ஆகணும் என்ன பண்றது .பொறுத்திருந்து பார்க்கணும் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆட்களின் முதுகருகே ஒட்டி ஒட்டி நின்று கொண்டிருந்தார்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் நிம்மதியாக சாப்பிட முடியாமல் திரும்பித் திரும்பி பார்த்தார்கள்.

ஒன்னும் அவசரம் இல்லை சாப்பிடுங்க. நாங்க நிக்கிறோம் என்று முருகன் அவன் நண்பர்கள் சொல்ல .அவர்கள் முன்னால் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களுக்கு தர்ம சங்கடமாக இருந்தது .

இவர்களைப் போல தான் மற்ற எல்லா இருக்கைகளுக்கு பின்னாலும் ஆட்கள் நின்று கொண்டே இருந்தார்கள்.

இதுக்கு ஒரு சிஸ்டம் போட கூடாதா? இவ்வளவு செலவு பண்ணி கல்யாணம் பண்றீங்க. ஆளுக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்தா எப்படி நிம்மதியா சாப்பிடுறது .அவங்களை பார்க்க வச்சிட்டு சாப்பிடறோம் அப்படிங்கற ஒரு உள்ளுணர்வு நமக்கு ஏற்படாதா? அதையும் தாண்டி இவன் எப்படா சாப்பிட்டு முடிப்பான் நாம எப்ப உட்கார்ந்து சாப்பிடறதுன்னு இவங்க நினைக்க மாட்டாங்களா? இப்படி இருக்கும்போது நிம்மதி எப்படி சாப்பிடுறது? ஒரே தடவை ஆயிரம் பேர் உட்கார மாதிரி ஒரு அறையைக் கட்டி சாப்பாடு குடுங்க .இல்லையா சாப்பிடுற வரைக்கும் ஆள உள்ள விட்டுட்டு சாப்பிடாத ஆளுகளை வெளியே உட்கார வைங்க.இது சரிப்பட்டு வராது? என்று வருத்தப்பட்டு வெளியே குதித்தான் வாணன்.

தம்பி இங்க வாங்க இங்க எல்லாமே இப்படித்தான். நீங்க கோடீசுவரர் வீட்டு கல்யாணத்துக்கு போனாலும் ஒன்னும் இல்லாதவன் வீட்டு கல்யாணத்துக்கு போனாலும் இந்த நிலைமைதான். பின்னாடி நின்னுட்டு தான் சாப்பிடணும். அதை விட்டுட்டு உங்களை சிறப்பு அழைப்பாளராக எல்லாம் அழைச்சிட்டு போயி சாப்பாடு தர மாட்டாங்க என்று ஒருவர் சொல்ல

இல்லங்க எங்களுக்கு என்னவோ மாதிரி இருக்கு. சாப்பிட பிடிக்கல என்று உதறிவிட்டு வெளியே வந்தான். அவனை பின்தொடர்ந்தார்கள் முருகன், வாணன் அவன் நண்பர்களும்.

அங்கிள் சாப்பிடலையா ? என்று ஒரு குழந்தை கேட்டபோது

இல்லப்பா சாப்பிடல என்று வாணன் கொஞ்சம் சோகமாக சொன்னான்

நானும் தான் நின்னுகிட்டு இருக்கேன் .என்ன பண்றது அங்கிள்? முன்னாடி உட்கார்ந்து அவங்க சாப்பிட்டு தானே ஆகணும்? அவங்க எந்திரிச்சதுக்கு அப்புறம் சாப்பிடலாமே? கொஞ்சம் பொறுமையா இருக்கிறதுல்ல உங்களுக்கு அவ்வளவு என்ன அவசரம்?அப்படி என்ன கௌரவக் கொறச்சல்? என்று குழந்தை குரலில் பேசினாள் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமியின் பேச்சை இவர்களால் மீற முடியவில்லை.

வாங்க அங்கிள் உங்க வீட்டில மூணு தட்டு தான் இருக்கு . அஞ்சு பேர் இருக்கீங்க .மூணு பேரு சாப்பிட்டதுக்கு அப்புறம் மிச்ச இருக்கிற ரெண்டு பேரு சாப்பிடுறது இல்லையா? நம்ம வீடா இங்க நினைச்சுக்கோங்க. கோவப் படாதீங்க. சாப்பிடுறதிலயும் மத்தவங்களுக்கு கொடுக்கிறதுலயும் மரியாதை எதிர்பார்க்க கூடாது.

அங்கிள் வாங்க என்று வாணனின் கையைப் பிடித்து இழுத்தாள் அந்தச் சிறுமி

இதைச் சற்றும் எதிர்க்காத முருகனும் நண்பர்களும் ஓரமாக ஒதுங்கி நின்றார்கள் .

சிறிது நேரத்திற்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கை காலியானது.

தம்பி உட்காருங்க. இங்க யாரும் அடுப்பு எடுத்துட்டு வந்து சோறு காச்சி அப்புறமா சாப்பிடல. ஏற்கனவே சமச்சத தான் கொடுக்கிறாங்க. சாப்பிடுறவங்களுக்கும் ஒரு மரியாதை இருக்கு. இவ்வளவுதான் சாப்பிடணும்னு. அவங்களுக்கும் அந்த நாகரிகம் தெரியும் தம்பி.கொஞ்ச நேரம் பொறுமையா இருக்கிறது தப்பு இல்ல. இப்ப சாப்பிடுங்க

என்ற போது அந்தக் குழந்தை இலையில் இருந்த இனிப்பை எடுத்து வாணன் வாயில் திணித்தது. இனிப்பை விழுங்க முடியாமல் கண்களிலிருந்து கண்ணீரைத் துப்பினான் வாணன்.

அடுத்தடுத்த பந்திகள் தடபுடலாக ஆரம்பித்திருந்தன. அப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் முதுகுக்கு பின்னால் முன்பதிவு செய்ய ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *